Published : 16 Oct 2019 12:31 PM
Last Updated : 16 Oct 2019 12:31 PM

கதை: அழகுக்கு மயங்கலாமா?

அறுவடை செய்திருந்த வயலில் சிதறியிருந்த தானியங்களை ரசித்து, ருசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது கவுதாரி. சாப்பிடும் சுவாரசியத்தில் அருகில் வந்த பிறகுதான் பூனையைக் கவனித்தது. சட்டென்று பறந்து அருகில் இருந்த ஒரு புதருக்குள் நுழைந்துகொண்டது. பூனைக்கு மிகவும் ஏமாற்றமாகிவிட்டது. எப்படியாவது இந்தக் கவுதாரியைப் பிடித்தே தீர வேண்டும் என்று முடிவெடுத்தது. புதருக்கு அருகே சென்றது.

“என்னைக் கண்டு ஏன் ஓடிவிட்டாய்? உன்னிடம் நட்பாக இருப்பதற்கே ஆவலோடு வந்தேன். இப்படி என்னை ஏமாற்றிவிட்டாயே, கவுதாரி?” என்று மிகவும் பாவமாகக் கேட்டது பூனை. “எனக்கு ஏராளமானவர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள். உன்னை நண்பனாக ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. உனக்கும் எனக்கும் எந்தவிதத்திலும் ஒத்துப் போகாது. உன் அன்புக்கு நன்றி” என்று புதருக்குள் இருந்து குரல் கொடுத்தது கவுதாரி.

“என்னை நம்பு. பறவைகளிலேயே மிகவும் அழகானவர்கள் கவுதாரிகள்தாம். ஒரு கவுதாரியிடம் நட்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் என் லட்சியம். என் மேல் நம்பிக்கை இல்லை என்றால் மற்ற பறவைகளிடம் சென்று, நான் சொன்னது உண்மையா, இல்லையா என்று கேட்டுப் பார். உண்மை என்றால் என்னை நண்பனாக ஏற்றுக்கொள். இல்லை என்றால் வேண்டாம்” என்று சொல்லிவிட்டுப் பூனை சென்றுவிட்டது.

கவுதாரி யோசித்தது. ஒருவேளை பூனை சொல்வது உண்மையாக இருக்குமோ? மற்றவர்களிடம் கேட்டுப் பார்த்துவிட்டு, முடிவு செய்யலாம் என்று வெளியே வந்தது. எதிரில் மயில் வந்துகொண்டிருந்தது. “மயிலே, பறவைகளில் நாங்கள்தானே அழகு?” என்று கேட்டது கவுதாரி.

“என்னது நீங்கள் அழகா? இவ்வளவு அழகாக இருக்கும் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்க உனக்கு எவ்வளவு துணிச்சல்? ஓடிப் போய்விடு” என்று கோபத்துடன் கூறிவிட்டுச் சென்றது மயில்.
‘மயில் அழகுதான், அதற்காக இவ்வளவு அகம்பாவம் கூடாது’ என்று நினைத்த கவுதாரி, பழத்தோட்டம் பக்கம் வந்தது. அங்கே ஒரு கிளி அமர்ந்திருந்தது.
“கிளியே, பறவைகளில் நாங்கள்தானே அழகானவர்கள்?” என்று கேட்டது கவுதாரி.
“அழகிலும் பேச்சிலும் எங்கள் இனம்தான் சிறந்தது. இளம் பச்சை உடலும் சிவந்த அலகும் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பது உனக்கே தெரியும். ஆனாலும் இந்தக் கேள்வியைக் கேட்கிறாய். ஓடிப் போய்விடு” என்று எச்சரித்தது கிளி.

“அழகு இருக்கும் அளவுக்கு அன்பு இல்லையே!. பூனைதான் என்னை அழகு என்று உண்மையைச் சொல்கிறது. அப்படி என்றால் பூனை சொல்வதுபோல் அதை நண்பனாக ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்’ என்ற முடிவோடு சென்றுகொண்டிருந்தது கவுதாரி.
“என்ன கவுதாரி, கண்டுகொள்ளாமல் போகிறாய்?” என்று கேட்டது சிட்டுக்குருவி.
“ஓ… ஏதோ யோசனையில் போயிட்டேன். எப்படி இருக்கே?”
“நான் நல்லாதான் இருக்கேன். உன் பிரச்சினை என்ன?”
கவுதாரி நடந்த விஷயங்களைச் சொன்னது.

“பூனை உன்னை மட்டும் பிடிக்காமல், உங்கள் கூட்டத்தையே பிடிப்பதற்காகத்தான் நட்புக் கோரிக்கை வைத்திருக்கிறது. இதைக்கூடப் புரிந்துகொள்ளாமல் பறவைகளிடம் கேள்வி கேட்டிருக்கிறாய். கவுதாரிகளில் நான் அழகானவளா என்று கேட்டிருந்தால், எல்லாப் பறவைகளும் உன்னைத்தான் அழகு என்று சொல்லியிருக்கும். நீயோ பறவைகளில் யார் அழகு என்று கேட்டால், அவை தங்களைத்தானே சொல்லிக்கொள்ளும்? இது பூனையின் சதி. உன்னைப் பூனையிடமிருந்து நிரந்தரமாகக் காப்பாற்ற ஒரு வழி செய்கிறேன்” என்று கவுதாரியின் காதில் தன் திட்டத்தைக் கூறியது சிட்டுக்குருவி.
மறுநாள் பூனை வந்தது. “எல்லாப் பறவைகளிடமும் அந்தக் கேள்வியைக் கேட்டாயா? நான் சொன்னதுதானே உண்மை? அப்படி என்றால் என்னை நண்பனாக ஏற்றுக்கொள்” என்றது பூனை.

“ஆமாம். நீ சொன்னது முற்றிலும் சரிதான். என் அழகுக்கு முன்னால் எல்லாமே தலைகுனிந்துவிட்டன. ஆனால், ஒரே ஒருவர் மட்டும் என்னை அழகு என்று ஏற்றுக்கொள்ளவில்லை” என்றது கவுதாரி.
“யாரது? என் நண்பனை அழகில்லை என்று சொன்னது, யார்? இப்போதே இரையாக்கிக்கொள்கிறேன்” என்று உடலைச் சிலிர்த்தது பூனை.
“பறவைகள் எல்லாம் என்னை அழகு என்று ஏற்றுக்கொண்டாலும் அதில் எனக்குத் திருப்தி இல்லை. அதனால் செந்நாயிடம் கருத்துக் கேட்டேன். கேள்வி கேட்டவனைக் காட்டு, பிறகு பதில் சொல்கிறேன் என்றது. அதோ மரத்துக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறது” என்றது கவுதாரி.
“என்னது, செந்நாயா? உன்னைப் பறவைகளிடம்தானே இந்தக் கேள்வியைக் கேட்கச் சொன்னேன்? செந்நாய்க்கும் எனக்கும் ஜென்மப் பகை. உன் நட்பும் வேண்டாம், எனக்கு இரையும் வேண்டாம்” என்று சொல்லிவிட்டு ஓட்டம் எடுத்தது பூனை.

அங்கு வந்த சிட்டுக்குருவி, “அழகு என்ற ஒரு வார்த்தைக்கு மனிதர்களைப்போல் மயங்கிவிடக் கூடாது. அப்படி மயங்கினால் ஆபத்தில்தான் முடியும் என்பதை அறிந்துகொண்டாயா? எதிரியின் பெயரைச் சொன்னவுடன் பூனை எப்படிப் பாய்ந்து ஓடுகிறது என்று பார்த்தாயா? ” என்று சிரித்தது சிட்டுக்குருவி.
“நல்லவேளை, என் உயிரைக் காப்பாற்றினாய்” என்று நன்றி கூறியது கவுதாரி.

- எஸ். அபிநயா, 11-ம் வகுப்பு, நாளந்தாஸ் மேல்நிலைப் பள்ளி, சின்னதம்பிபாளையம், திருச்செங்கோடு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x