கணிதப் புதிர்கள் 05: மாம்பழம் என்ன விலை?

கணிதப் புதிர்கள் 05: மாம்பழம் என்ன விலை?
Updated on
2 min read

என். சொக்கன்

மணிவேலு இயற்கை விவசாயி. தன்னுடைய தோட்டத்தில் தானியங்கள், காய்கறிகள், பழங்கள், மரங்கள் என்று பலவிதமாகப் பயிரிட்டிருக்கிறார். இயற்கை உரங்களைத்தான் பயன்படுத்தினார்.

அவருடைய பெருமை வெளியூர்களில், ஏன் வெளிநாடுகளில்கூடப் பரவியிருந்தது. எங்கிருந்தோ மக்கள் அவரைத் தேடி வந்து, அவருடைய விவசாய முறைகளைத் தெரிந்துகொண்டார்கள். மத்தியப்பிரதேசத்தில் விவசாயக் கல்லூரியில் படிக்கிற மூன்று இளைஞர்கள் அவரைப் பார்க்க வந்தார்கள்.

‘‘எனக்குத் தெரிஞ்சதை நிச்சயம் சொல்லித் தர்றேன். ஆனா, இது சின்னக் கிராமம், நீங்க எதிர்பார்க்கிற வசதிகள் எல்லாம் இங்கே இருக்காதே” என்றார் மணிவேலு. ‘‘பரவாயில்லை, சமாளிச்சுக்கறோம்” என்றார்கள் அந்த இளைஞர்கள்.

மணிவேலு மகிழ்ச்சியுடன் அவர்களைத் தன் வீட்டிலேயே தங்கவைத்தார். நாள்தோறும் தோட்டத்துக்குச் சென்றார்கள், அங்குள்ள விஷயங்களை ஆர்வமாகக் கற்றுக்கொண்டார்கள், தோட்டத்தின் ஒருபகுதியில் மாமரங்கள் பயிரிடப்பட்டிருந்தன. மணிவேலுவும் இளைஞர்களும் அவற்றைப் பறித்துக் கூடையில் போட்டார்கள்.


கூடை நிரம்பியதும், மணிவேலு அவற்றை எண்ணினார், ‘‘150 மாம்பழங்கள் இருக்கு. இவற்றைச் சந்தைக்குக் கொண்டுபோய் வித்துட்டு வரணும்.” ‘‘என்ன விலைன்னு சொல்லுங்க, வித்துட்டு வர்றோம்” என்று கூடையைத் தூக்கிக்கொண்டார்கள் இளைஞர்கள்.
‘‘விலையை நீங்கதான் தீர்மானிக்கணும்” என்று சிரித்தார் மணிவேலு.

‘‘நாங்களா? எப்படி?”
‘‘சொல்றேன், முதல்ல கூடையைக் கீழே இறக்குங்க” என்றார் மணிவேலு. கூடையிலிருந்த பழங்களை மூன்று பகுதியாகப் பிரித்தார். முதல் பகுதியில் 15 மாம்பழங்கள் இருந்தன, இரண்டாவது பகுதியில் 50 மாம்பழங்கள் இருந்தன, மூன்றாவது பகுதியில் 85 மாம்பழங்கள் இருந்தன. ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வோர் இளைஞரிடம் தந்த மணிவேலு, ‘‘சந்தையில நீங்க தனித்தனியா விக்கணும், ஒரே விலைக்குதான் விக்கணும், ஒருத்தரோட விலையைவிட இன்னொருத்தரோட விலை அதிகமாகவோ குறைவாகவோ இருக்கக் கூடாது. ஆனா, வித்துட்டுத் திரும்பி வரும்போது உங்ககிட்ட ஒரே அளவு பணம்தான் இருக்கணும். அதான் சவால்” என்றார்.

இளைஞர்கள் மூவரும் திகைத்தார்கள். ‘‘மூணு பகுதியும் ஒரே அளவு இருந்தா நீங்க சொல்றதைச் செஞ்சுடலாம், ஆனா, இங்கே முதல் பகுதியில ரொம்பக் குறைவான பழங்கள் இருக்கு, மூணாவது பகுதியில ரொம்ப அதிகமான பழங்கள் இருக்கு, இவற்றை எப்படி ஒரே விலையில வித்து ஒரே அளவு பணத்தைக் கொண்டுவர்றது?” என்றார்கள்.

‘‘எல்லாம் சாத்தியம்தான், யோசிங்க” என்று சிரித்தபடி வீட்டுக்குக் கிளம்பிவிட்டார் மணிவேலு. அந்த இளைஞர்கள் என்ன செய்வார்கள்? 15 பழங்களையும் 50 பழங்களையும் 85 பழங்களையும் ஒரே விலைக்கு விற்று ஒரே அளவு தொகையைச் சம்பாதிப்பது எப்படி?

விடை

மூன்று பகுதிகளிலும் மாம்பழங்களுடைய எண்ணிக்கை வெவ்வேறாக இருப்பதால், அவற்றை மொத்தமாக ஒரே விலைக்கு விற்றால் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தொகைதான் கிடைக்கும். அதை மணிவேலு ஏற்கமாட்டார்.

ஆகவே, அந்த இளைஞர்கள் தங்களிடமிருந்த மாம்பழங்களை இருவிதமாகப் பிரித்து விற்கத் தீர்மானித்தார்கள்:

* முதலில், டஜன் (அதாவது, 12) மாம்பழங்களுக்கு 1 ரூபாய் என்று விலை நிர்ணயித்தார்கள்
* அதன்படி, முதல் இளைஞர் தன்னிடமிருந்த 15 மாம்பழங்களில் ஒரு டஜனை 1 ரூபாய்க்கு விற்றார், அவரிடம் 3 பழங்கள் எஞ்சியிருந்தன
* இரண்டாம் இளைஞர் தன்னிடமிருந்த 50 மாம்பழங்களில் நான்கு டஜனை (48 பழங்கள்) 4 ரூபாய்க்கு விற்றார், அவரிடம் 2 பழங்கள் எஞ்சியிருந்தன
* மூன்றாம் இளைஞர் தன்னிடமிருந்த 85 மாம்பழங்களில் ஏழு டஜனை (84 பழங்கள்) 7 ரூபாய்க்கு விற்றார், அவரிடம் 1 பழம் எஞ்சியிருந்தது
*இப்போது, அவர்கள் தங்களிடம் மீதியிருந்த பழத்தின் விலையை 3 ரூபாய் என்று தீர்மானித்தார்கள்
* அதன்படி, முதல் இளைஞர் தன்னிடம் எஞ்சியிருந்த 3 பழங்களை 9 ரூபாய்க்கு விற்றார்; அவருடைய மொத்த விற்பனை:ரூ1+9 = ரூ. 10
* இரண்டாம் இளைஞர் தன்னிடம் எஞ்சியிருந்த 2 பழங்களை 6 ரூபாய்க்கு விற்றார்; அவருடைய மொத்த விற்பனை:ரூ 4+ 6 = ரூ. 10
* மூன்றாம் இளைஞர் தன்னிடம் எஞ்சியிருந்த 1 பழத்தை 3 ரூபாய்க்கு விற்றார்; அவருடைய மொத்த விற்பனை:ரூ 7+3 = ரூ.10
* ஆக, மூவரும் வேலுமணி சொன்னதுபோல் ஒரே விலைக்குப் பழங்களை விற்று, ஒரே அளவு தொகையைச் சம்பாதித்துவிட்டார்கள்.

(அடுத்த வாரம், இன்னொரு புதிர்)
கட்டுரையாளர், எழுத்தாளர் தொடர்புக்கு: nchokkan@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in