கற்பனை உயிரினம்: தண்ணீரைப் பிரிக்கும் பறவை

கற்பனை உயிரினம்: தண்ணீரைப் பிரிக்கும் பறவை
Updated on
1 min read

அன்னப்பறவை பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ராமாயணம், மகாபாரதம், வேதங்களில் இந்த பறவையைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். சமஸ்கிருதத்தில் இதை ‘ஹம்சா’, ‘ஹம்சபட்சி’ என்று கூப்பிடுகிறார்கள். கோவிலுக்குப் போகும்போது அங்குள்ள சிற்பங்களில்கூட இந்தப் பறவையை நீங்கள் பார்க்கலாம். வீட்டில் அம்மா கட்டும் பட்டுப்புடவை, சாமிப் படங்களில்கூட இந்த அன்னப் பறவை இடம் பிடித்துவிடும்!

இமயமலையில் உள்ள மானசரஸ் ஏரியில் அன்னப் பறவைகள் வாழ்ந்ததாக இந்தியப் புராணங்களில் சொல்லியிருக்கிறார்கள்.

மகாபாரதத்தில் வரும் நள தமயந்தி கதையில் நளனுக்கும் தமயந்திக்கும் தூது போகும் பறவையாக இது இருந்துள்ளது.

பாலையும் தண்ணீரையும் கலந்துவைத்தால் தூய்மையான பாலை மட்டும் பிரிக்கும் அபூர்வ சக்தி இந்த அன்னப்பறவைக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

புராண காலத்தில் அழுக்கிலிருந்து சுத்தமானதைப் பிரிக்கும் பறவையாக அன்னங்கள் கருதப்பட்டனவாம். அன்னம் தூய்மையான முத்துகளை உணவாக உட்கொள்ளுமாம்.

நீரில் இருந்தாலும் அன்னத்தின் சிறகுகள் நனையாதவை. உலக வாழ்வில் இருந்துகொண்டே ஒட்டாமல் இருப்பதற்கு உதாரணமாக இந்த அன்னப் பறவைகளைச் சொல்கிறார்கள்.

அன்னைப் பறவையைப் போல வாத்தின் சிறகுகளும்கூட தண்ணீரில் ஒட்டாது. வாத்துகளும் சேற்று நீரிலிருந்து சேற்றைப் பிரித்து சுத்தமான நீரைக் குடிக்கும் திறமை பெற்றது.

அன்னப்பறவை பூமியில் நடக்கும். வானத்தில் பறக்கும், தண்ணீரில் நீந்தும்.

இந்தியப் புராணங்களைத் தவிர கிரேக்கப் புராணங்களிலும் அன்னப் பறவை பற்றிய குறிப்புகள் உள்ளன. ஐரிஷ் புராணக் கதைகளிலும் அன்னங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

பகலில் அன்னங்களாக வானில் பறக்கும் பறவைகள் இரவில் அழகான பெண்களாக மாறுவதாக ஒரு கதை உள்ளது. ஐரோப்பாவில் அன்னப் பறவையைப் பற்றி பல கதைகள் சொல்லப்பட்டுள்ளன. தற்காலத்தில் உள்ள ‘ஸ்வான்’ (swan) என்று அழைக்கப்படும் அன்னப்பறவைகளும் புராணத்தில் வரும் அன்னப் பறவைகளும் ஒன்றல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in