Published : 09 Oct 2019 12:53 PM
Last Updated : 09 Oct 2019 12:53 PM

மாய உலகம்! - ஆலிஸின் அற்புத உலகம்

ஒரு குண்டுப் புத்தகத்தை அமைதியாக வாசித்துக்கொண்டிருந்த அக்காவிடம் கீச்சுக் குரலில் கத்தியபடி ஓடிவந்தாள் ஆலிஸ். ”அக்கா, அக்கா என்னைக் காணோம் என்று பயந்துவிட்டாயா? இத்தனை நேரம் எங்கிருந்தேன் தெரியுமா? யாரை எல்லாம் பார்த்தேன் என்று சொல்லவா? எனக்கு என்னவெல்லாம் நடந்தது என்று கேட்பாயா?”
ஒரு வெள்ளை முயல், சட்டைப் பையிலிருந்து கடிகாரத்தை எடுத்துப் பார்த்தபடி, ஐயோ நேரமாகிவிட்டதே என்று இதோ இந்தப் பக்கமாகப் பாய்ந்து ஓடியது. இதில் என்ன அதிசயம் என்று முயல் பின்னால் ஓடினால், அது ஒரு குழிக்குள் காணாமல் போய்விட்டது. மறுநொடியே நானும் அந்தக் குழிக்குள் பாய்ந்துவிட்டேன். கீழே, கீழே, கீழே போய்க்கொண்டே இருந்தேன். உறங்கிவிட்டேனா, மயங்கிவிட்டேனா? புரியவில்லை. கண் விழித்தால் புத்தம் புதிதாக ஓர் உலகம்.

முதலில் பூனைதான் நினைவுக்கு வருகிறது. மரத்தின் மீது அமர்ந்து என்னைப் பார்த்து புன்னகை செய்தது பூனை. உன்னையும் என்னையும் போலதான் பூனை புன்னகை செய்தது. ஆனால், அந்தப் புன்னகை வளர்ந்து வளர்ந்து பூனையின் காதுவரை நீண்டுவிட்டது. ஒரே வண்ணத்தில் ஒரே பெரும் வளைவாக ஒரு வானவில் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அந்தப் புன்னகை. மாயம் என்ன என்றால் பூனை கிளம்பிச் சென்ற பிறகும் அதன் புன்னகை என்னையே பார்த்துக்கொண்டிருந்தது. புன்னகைக்கும் பூனையே அதிசயம் என்றால் பூனையே இல்லாத புன்னகையை என்னவென்று சொல்வது?

அந்த உலகில் நேரத்தையும் நம்மால் நிறுத்தி வைக்க முடியும், அக்கா. ஒரு நல்ல காலை நேரம் என்னைவிட்டுக் கடந்து சென்றுவிடக் கூடாது என்று நான் நினைத்தால் என் கடிகாரத்தை நிறுத்திவிட்டால் போதும். நான் சொல்லும்வரை கதிரவனின் ஒளியும் கதகதப்பும் என்னுடன் இருக்கும். ஒரு புறா சிறகடித்துப் பறந்து செல்வதை நாள் முழுக்க, வாரம் முழுக்க நான் பார்த்துக்கொண்டே இருக்க முடியும். நான் எழுப்பும்வரை காலம் ஒரு பொம்மைபோல் என் கரங்களுக்குள் அமர்ந்து உறங்கிக்கொண்டிருக்கும். தொப்பிக்காரர், சுண்டெலி, முயல் ஆகியோரோடு சேர்ந்து ஒரு மிடக்கு தேநீரை ஒரு நாள் முழுக்க நான் குடித்துக்கொண்டே இருந்தேன், அக்கா.

பிறகு ஒரு வீட்டுக்குள் நுழைந்தேன். ஒரு கண்ணாடி புட்டியில் பழச்சாறு இருந்தது. ‘என்னை அருந்து’ என்று அதில் எழுதியிருந்தது. அருந்தினேன். உடனே கடகடவென்று அந்த அறையைக் காட்டிலும் பெரியதாக வளர்ந்துவிட்டேன். அதே அறையில் இன்னொரு பக்கத்திலிருந்து, ‘என்னைச் சாப்பிடு’ என்றது கேக். விண்டு வாயில் போட்டுக்கொண்டால் சுருங்கோ சுருங்கு என்று அநியாயத்துக்குச் சுருங்கிவிட்டேன். நான் விரும்பும்போது எல்லாம் விரும்பும் அளவுக்கு வளர்ந்துகொள்ளலாம், வேண்டாம் என்றால் குழந்தையைவிடக் குட்டியாகச் சுருங்கிவிடலாம் என்பது உண்மையிலேயே அற்புதம், இல்லையா?

அடுத்து ஆமையை அறிமுகப்படுத்தலாம் என்று ஆலிஸ் வாயைத் திறப்பதற்குள், ‘‘நீ கதைவிட்டது போதும்” என்று எழுந்துகொண்டாள் அக்கா. ‘‘நீ சொல்வது ஒன்றுகூட நம்பும்படியாக இல்லை. எல்லாமே கதை. வெறும் கனவுதான், ஆலிஸ். எனக்கு நிறைய படிக்க வேண்டியிருக்கிறது. நேரமே இல்லை.’’ ‘‘பொறு அக்கா. நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன்” என்றாள் ஆலிஸ். ‘‘இங்கே ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது? நான் காண்பது கனவா, நிஜமா என்று ஒரு புழுவிடம் கேட்டேன்.

அதைத் தீர்மானிக்க வேண்டியது நீதான் என்றது புழு. இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை, ஆலிஸ். புழுவாக இருக்கும் நான் நாளையே ஒரு வண்ணத்துப்பூச்சியாக மாறி உன் தோளில் வந்து அமர்வேன். என்னை நம்புவதா, வேண்டாமா என்பது உன்னைப் பொருத்ததுதான் என்று புன்னகை செய்தது புழு.”

‘‘நான் புழுவை நம்புகிறேன் அக்கா. இங்கே பல உலகங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றில் நீ வாழ்கிறாய். எனக்கு இன்னோரு உலகம் அறிமுகமாகி இருக்கிறது. நான் அதை என்னுடையதாக மாற்றிக்கொள்ளப் போகிறேன். அது நிஜ உலகம் அல்ல, வெறும் கனவு என்று நீ சொன்னால் நான் மறுக்கப் போவதில்லை. ஏனென்றால் நீ உன் உலகிலிருந்து என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய். அதனால்தான் என்னையும் என் அதிசய உலகையும் உன்னால் ஏற்க முடியவில்லை.

என் உலகம் உனக்கு வேடிக்கையானதாகத் தெரிகிறது. என் சாகசங்களைக் கதைகள் என்கிறாய்.
எனக்குக் கனவு பிடித்திருக்கிறது அக்கா. ஏனென்றால் அது என் கனவு. அது என்னை மிகுந்த நம்பிக்கையோடு பற்றிக்கொண்டிருக்கிறது. நான் விழித்திருக்கும் நேரத்தை எல்லாம் அது வண்ணமயமானதாக மாற்றுகிறது. நான் உறங்கும்போதுகூட அது என்னை அணைத்துக்கொண்டே இருக்கிறது. அதன் கரங்களில் இருக்கும்வரை நானும் கனவுபோல் நீண்டு வளர்ந்துகொண்டே போவேன்.

என் பாடப் புத்தகத்தில் நீ எங்குமே வந்ததில்லை; எனவே, உன்னை நம்ப மாட்டேன் என்று வெள்ளை முயலிடம் சொல்லியிருந்தால் நானும் உன் உலகிலேயே இருந்திருப்பேன். நீ ஒரு புழு, உன்னால் பேச முடியாது என்றோ; ஏய், பூனை உன்னால் புன்னகை செய்ய முடியாது என்றோ நீ வெறும் சீட்டுக் கட்டு ராணிதான், உனக்கு உயிரில்லை என்றோ நான் சொல்லியிருந்தால் அதிசய உலகம் என் முன்னால் விரிந்திருக்காது.

என் விரல்களால் கடிகாரத்தின் முட்களை நிறுத்த முடியும் என்று நம்ப நான் விரும்புகிறேன். பூனையைப்போல் என்னாலும் ஒரு புன்னகையை வளர்த்தெடுக்க முடியும் என்று நம்ப நான் விரும்புகிறேன். என் உலகம் அளவற்ற சாத்தியங்களால் கட்டப்பட்டிருக்கிறது. நம்ப முடியாதது என்றோ நடக்க முடியாதது என்றோ அதில் எதுவும் இல்லை. கனவுதான் நிஜம். பற்றிக்கொள்ள ஒரு கனவு இல்லை என்றால் புழுவால் வண்ணத்துப்பூச்சியாக மாற முடியாது.
என்னை நம்பு அக்கா.

வண்ணம் என்றால் என்ன, இறக்கைகள் என்றால் என்னவென்று நான் உனக்குக் காட்டுகிறேன். எந்த நொடியும் வெள்ளை முயல் ஒன்று இங்கே மீண்டும் தாவி வரலாம். ஒரு படம்கூட இல்லாத உன் குண்டு புத்தகத்தை நகர்த்தி வைத்துவிட்டு, என் விரலைப் பிடித்துக்கொள். உனக்கென்று ஒரு கனவு உலகம் காத்துக்கொண்டிருக்கிறது.

- மருதன்

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x