பள்ளி உலா

பள்ளி உலா

Published on

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
ஆற்கவாடி, விழுப்புரம்.

1956-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 60 ஆண்டுகளை வெற்றி கரமாக நிறைவு செய்து, வைரவிழாவைக் கொண்டாடி வருகிறது இந்தப் பள்ளி. மடிக்கணினி, தொலைக்காட்சி, எல்.சி.டி, போன்றவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்தி, கற்றலை மேம்படுத்தி வருகிறது. இளஞ்செஞ்சிலுவை இயக்கம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் காமராஜர் பிறந்தநாள், சுதந்திரதினம், ஆசிரியர் தினம், காந்தி ஜெயந்தி, அப்துல்கலாம் பிறந்தநாள், குழந்தைகள் தினம், குடியரசு தினம், மகளிர் தினம், ஆண்டுவிழா போன்றவற்றைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது.

பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, விளையாட்டுப் போட்டி போன்றவற்றை நடத்தி, மாணவர்களின் திறன்களை ஊக்குவித்து வருகிறது. பள்ளியில் தோட்டத்தை அமைத்து, மாணவர்களே பராமரித்து வருகின்றனர். கல்விச் சுற்றுலாவாக சென்னை, ஊட்டி, தஞ்சாவூர், ராமேஸ்வரம், கொச்சி, மைசூர் போன்ற இடங்களுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.

2016-17 கல்வி ஆண்டில் மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான விருதை இந்தப் பள்ளி பெற்றுள்ளது. சென்ற கல்வி ஆண்டில் பேச்சுப் போட்டியில் பார்கவி என்ற மாணவி ஒன்றிய அளவில் வெற்றிவாகை சூடியுள்ளார். தூய்மை இந்தியா கட்டுரைப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடமும், சுத்தமான நீர்- சுத்தமான இந்தியா கட்டுரைப் போட்டியில் மாநில அளவிலும் மாணவர் இளைய பெருமாள் வெற்றி பெற்றுள்ளார். தேசிய திறனாய்வுத் தேர்வில் 2017-18 கல்வி ஆண்டில் நான்கு மாணவர்களும், 2018-19 கல்வி ஆண்டில் ஆறு மாணவர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி,
ஆலத்தூர், திருவண்ணாமலை.

செயலாலும் அறிவாலும் உலகத்தைப் புரிந்துகொண்டு, மாணவர்கள் அதை மாற்றிட முனைய வேண்டும் என்ற நோக்கத்தோடு, 2007-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்று வருகிறது. மாணவர்களின் தனித் திறன்களை வளப்பதற்காக யோகா, கணினி வழிக்கல்வி, கராத்தே, இந்தி, நடனம், விளையாட்டு, அபாகஸ், கையெழுத்துப் போன்றவற்றுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது. மாதந்தோறும் பள்ளி மேலாண்மைக் கூட்டம் நடைபெறுகிறது. பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் என மூன்று தரப்பும் கலந்துகொள்வதால், மாணவர் களின் கல்வித் தரம் மேம்படுகிறது.

ATAL TINKARING LAB (ATL) நவீன யுக்திகள் அடங்கிய ஆய்வகம் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ் பயிற்சி சிறப்பான முறையில் அளிக்கப்பட்டு வருகிறது. நீட், ஐஐடி உட்பட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சியளிக்கப் படுகிறது. சாரண, சாரணியர் இயக்கம், ஜுனியர் ரெட்கிராஸ், பசுமைப்படை போன்ற பல்வேறு சமூகக் குழுக்களும் சிறப்பாகச் செயல்படுகின்றன.

நவீன தொழில்நுட்பம் நிறைந்த இன்ட்ராக்டிவ் போர்டு ஒவ்வொரு வகுப்பறையிலும் அமைக்கப்பட்டு கற்றல் கற்பித்தல் இனிதே நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் கல்விச் சுற்றுலா, கருத்தரங்கம், கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, மரம் வளர்த்தல் எனப் பல்வேறு செயல்பாடுகள் நடைபெறுகின்றன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in