Published : 09 Oct 2019 11:32 AM
Last Updated : 09 Oct 2019 11:32 AM

டிங்குவிடம் கேளுங்கள்: சூரியனை நேரடியாகப் பார்க்கலாமா?

சூரியனைப் பார்த்தால் ஏன் நம் கண்கள் கலங்குகின்றன, டிங்கு?

– லூ.ம. பாஸ்டினா மிருணாளினி,
5-ம் வகுப்பு, பட்டுக்கோட்டை அழகிரி
மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, பாபநாசம்.

சூரியனிலிருந்து வெளிவரும் வெளிச்சமும் புற ஊதாக்கதிர்களும் நம் கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடியவை. அதனால்தான் சூரியனை நேரடியாகப் பார்க்கக் கூடாது என்று சொல்கிறார்கள். ஒருவேளை பார்த்துவிட்டால் கண்கள் கூசும், கண்ணீரை வரவழைக்கும். இது தற்காலிகமான பாதிப்புதான். சற்று நேரத்தில் சரியாகிவிடும். ஆனால், தொடர்ந்து சூரியனை நேரடியாகப் பார்த்தால் கண்கள் நிச்சயம் பாதிப்படையும். அதனால் சூரியனை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்த்துவிடுங்கள் பாஸ்டினா மிருணாளினி.

நன்றாகச் சாப்பிடுபவர்களை, ‘சாப்பாட்டு ராமன்’ என்று ஏன் சொல்கிறார்கள், டிங்கு?

– முருகவேல், 7-ம் வகுப்பு, மிராணியா மேல்நிலைப் பள்ளி, களக்காடு, திருநெல்வேலி.

சிலர் ராமாயணத்தில் வரும் ராமனின் வாழ்க்கையில் நடைபெற்ற சில சம்பவங்களைத் தொடர்புபடுத்தி, அதனால் ‘சாப்பாட்டு ராமன்’ என்று பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள். அதில் உண்மை இல்லை. வால்மிகி, கம்பர் இருவருமே இந்த விஷயத்தை எழுதவில்லை.

அதோடு ராமனின் கதாபாத்திரம் உயர்ந்த குணங்கள் கொண்டவராகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது. அதனால் ’சாப்பாட்டு’ ராமனுக்கும் புராண ராமனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலியில் கடையம் பகுதியில் வாழ்ந்த ராமன் என்பவர், தினமும் விதவிதமான உணவு வகைகளை ரசித்துச் சாப்பிடுபவராக இருந்தார்.

அந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி, உணவு மீது ஆர்வம் உள்ளவர்களை எல்லாம் ‘சாப்பாட்டு ராமன்’ என்று அழைக்க ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆந்திராவிலும் சாப்பாட்டு ராமன் என்பதைப் பயன்படுத்துகிறார்கள். தெனாலி ராமன் சாப்பிடுவதில் ஆர்வம் கொண்டதால், அங்கே அவர் பெயரில் ‘சாப்பாட்டு ராமன்’ என்று அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள், முருகவேல்.

கோழி முட்டையை வேக வைக்க 5 நிமிடங்கள் போதும். நெருப்புக்கோழியின் முட்டையை வேக வைக்க 2 மணி நேரம் ஆகும். இரண்டுமே பறவைகளின் முட்டைகளாக இருந்தும் ஏன் இவ்வளவு நேரம் ஆகிறது, டிங்கு?

– ந. மனிஷா, 8-ம் வகுப்பு, பிஷப் பிரான்சிஸ் மெட்ரிக். பள்ளி, கோவை.

கோழி முட்டையும் நெருப்புக்கோழி முட்டையும் ஒரே அளவாகவா இருக்கின்றன, மனிஷா? பறவைகளின் முட்டைகளிலேயே மிகப் பெரியது நெருப்புக்கோழியின் முட்டைதான். 24 கோழி முட்டைகள் சேர்ந்தால்தான் ஒரு நெருப்புக்கோழியின் முட்டையின் எடைக்கு ஈடாகும். சின்ன முட்டை விரைவில் வெந்துவிடும்; பெரிய முட்டை வேக நேரம் அதிகமாகும் அல்லவா? நெருப்புக்கோழி முட்டையை வேக வைக்க 2 மணி நேரம் எல்லாம் ஆகாது, ஒன்றரை மணி நேரத்தில் வெந்துவிடும்.

இந்தியாவில் எரிமலைகள் இருக்கின்றனவா, டிங்கு?

– பா.கோ. ஸ்ரீதேவி, 3-ம் வகுப்பு,
அன்னை வேளாங்கன்னி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, பாவூர்சத்திரம், திருநெல்வேலி.

அந்தமான் நிகோபார் தீவுக் கூட்டங்களில் ஒன்றான பாரன் தீவில் உள்ள எரிமலை உயிர்ப்புடன் இருக்கிறது. தெற்கு ஆசிரியாவிலேயே நெருப்பைக் கக்கக்கூடிய ஒரே எரிமலை இதுதான், தேவி. அந்தமானில் நார்கொண்டம் தீவில் உள்ள எரிமலை செயலற்றுவிட்டது. அந்தமானில் உள்ள பரடாங், மகாராஷ்டிரம், குஜராத், ஹரியாணாவில் இருந்த எரிமலைகள் எல்லாம் இப்போது அழிந்துவிட்டன.

ஒரு பாடத்தில் மதிப்பெண் குறைந்தால் அந்தப் பாடத்தில் கவனம் செலுத்தி, அதிக மதிப்பெண் வாங்குவோம். 25 வயது வரை ஆண்டுக்கு இரு முறை நீட் தேர்வு எழுதலாம். என் அக்கா நீட் தேர்வில் தோல்வியடைந்துவிட்டார் என்றால், 2 ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் அதே பாடங்களைப் படித்து 5-வது முறை தேர்வு எழுதுகிறார் என்று வைத்துக்கொள்வோம். இப்போது நானும் அவருடன் சேர்ந்து முதல் முறை நீட் தேர்வு எழுதுகிறேன். என் அக்கா 2 ஆண்டுகள் படித்ததால் என்னைவிட அதிக மதிப்பெண் வாங்கிவிடுவார். நான் முதல் முறை என்பதால் குறைவாக மதிப்பெண் எடுப்பேன். இதில் என்ன நியாயம் இருக்கிறது? முதல் முறை தேர்வு எழுதுகிறவர்களுக்குக் கூடுதல் சலுகையோ மதிப்பெண்ணோ வழங்கக் கூடாதா, டிங்கு?

– பா. மேஹசூரஜ், 12-ம் வகுப்பு,
கிரெசென்ட் மேல்நிலைப் பள்ளி, புளியங்குடி.

எவ்வளவு பெரிய கேள்வி! நீங்கள் சொல்வது தர்க்கரீதியாக நியாயமாகத்தான் இருக்கிறது. ஆனால், ஜனநாயக நாட்டில் ஒரு முறை தேர்வில் தோல்வி அடைந்தால், வெற்றி பெறுவதற்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதுதானே நியாயமானதாக இருக்கும்? முதல் முறை ஒருவருக்கு உடல்நலப் பிரச்சினையால் நீட் தேர்வு எழுத முடியாமல் போய்விடுகிறது என்று வைத்துக்கொள்வோம்.

அத்துடன் அவர் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவை விட்டுவிட வேண்டுமா? அல்லது அடுத்த வாய்ப்பில் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டுமா? உங்கள் அக்கா 2 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் விரும்பிய படிப்பில் சேர வெற்றி பெறுவது நல்ல விஷயம்தானே? அதே நேரம் அவர் இழந்தது 2 ஆண்டுகளை என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் அல்லவா? அதோடு முதல் முறை எழுதுவதால் குறைவான மதிப்பெண்களைத்தான் பெற முடியும் என்ற உங்கள் எண்ணம் சரியானது அல்ல. சில ஆண்டுகள் வீணாகாமல் முதல் முறையே தேர்வு பெறுவதே நல்ல விஷயம்தானே? இதற்கு மேல் சலுகை வேண்டுமா, மேஹசூரஜ்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x