

நத்தம் எஸ். சுரேஷ்பாபு
மானூரில் விக்ரமன் தன் பாட்டியுடன் வசித்துவந்தான். சுறுசுறுப்பானவன். புத்திசாலி. பாட்டிக்கு ஒத்தாசையாக உதவி செய்வான். அன்று அவன் படித்துக் கொண்டிருந்தபோது குளவி ஒன்று அவனைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தது. அது சுவரில் கூடு கட்ட முயன்றுகொண்டிருந்தது. எரிச்சல் அடைந்த விக்ரமன் அதை விரட்டினான். அப்படியும் ரீங்காரம் செய்துகொண்டு சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தது குளவி. ஓர் அட்டையை எடுத்து அடிக்க முயன்றான்.
“நண்பா, என்னை அடிக்காதே” என்றது குளவி.
விக்ரமன் ஆச்சரியத்துடன், “யாரது, குளவியா பேசுறது?” என்றான். “குளவிதான் பேசுகிறேன். என்னை அடிக்காதே. என்னுடைய உதவி உனக்கு எப்போதாவது தேவைப்படும்” என்றது. “குளவியே, என்னைத் தொந்தரவு செய்யாமல் போய்விட்டால் நான் ஏன் உன்னை அடிக்கப் போகிறேன்?”
“உனக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் என்னை நினைத்து ’குளவி நண்பா’ என்று அழைத்தால் உன் முன் நிற்பேன். உதவி செய்வேன். நான் ஒரு ரிஷியின் சாபத்தால் குளவியானேன். அதனால்தான் உன்னோடு பேச முடிந்தது” என்று கூறிவிட்டுப் பறந்து சென்றுவிட்டது, அந்தக் குளவி.
ஆண்டுகள் சென்றன. விக்ரமன் இளைஞன் ஆனான். வேலை தேடிச் சென்றான். மூன்றாம் நாள் இரவு ஒரு காட்டை அடைந்தான். அதைக் கடந்தால்தான் பக்கத்து நாட்டை அடைய முடியும். மரத்தின் மீது ஏறி தங்கும் இடம் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தான். தூரத்தில் வெளிச்சம் தென்பட்டது.
அந்த வெளிச்சத்தை நோக்கி நடந்தான். பத்து நிமிடங்களில் அந்த மாளிகையை அடைந்தான். மாளிகை முழுவதும் பாறாங்கற்கள் சிதறிக் கிடந்தன.
விக்கிரமனுக்குக் குழப்பமாக இருந்தது. திடீரென்று ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டது. அந்த இடம் நோக்கிச் சென்றான். அங்கே ஓர் இளம்பெண் அழுதுகொண்டிருந்தாள்.
“யார் நீ? ஏன் அழுகிறாய்?”
விக்ரமனைக் கண்டு திடுக்கிட்டவள், “நீங்கள் யார்? எப்படி வந்தீர்கள்?” என்றாள்.
விக்ரமன் தன்னுடைய விவரங்களைச் சொல்லி முடித்தான்.
“நான் பக்கத்து நாட்டு இளவரசி. இந்த மாளிகை அரக்கனுடையது. அவன் என்னை கடத்திக்கொண்டு வந்து, இங்கு அடைத்து வைத்துள்ளான். என்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறான். ஏதாவது ஒரு காரணம் சொல்லி, தட்டிக் கழித்து வருகிறேன். இந்தக் கற்கள் எல்லாம் என்னை மீட்க வந்தவர்கள். அரக்கன் எதிரில் யார் வந்தாலும் அவர்களைக் கல்லாக்கி விடுவான்” என்று கூறி முடித்தாள் இளவரசி. “கலங்காதீர்கள் இளவரசி. நான் உங்களை மீட்கிறேன்’’ என்ற விக்ரமன், யோசித்தான்.
“இளவரசி, அரக்கன் வரும்போது விளக்கை அணைத்துவிடுங்கள் அவன் கண்ணால் பார்த்தால்தானே கல்லாக்க முடியும்? நான் பாறை மறைவில் அமர்ந்து சவால் விடுகிறேன். மற்றதை என் நண்பன் பார்த்துக்கொள்வான்.”
விக்ரமன் குளவியை நினைத்தவுடன் வந்துவிட்டது. “இளவரசியை மீட்க வேண்டும். இருட்டில் நான் பாறை மறைவில் அமர்ந்து அவனோடு பேசுவேன். நீ அவன் கண்களில் கொட்ட வேண்டும். அப்புறம் உன் படை வீரர்கள் அவன் உடல் முழுதும் கொட்டினால் அவன் தீர்ந்தான்” என்றான் விக்ரமன்.
இரவு அரக்கன் நுழைந்ததும் விளக்கை அணைத்துவிட்டாள் இளவரசி.
“என்ன இது? ஏன் இருளாக இருக்கிறது?” என்று அரக்கன் குரல் கொடுக்கும்போதே, “உன் முடிவு நெருங்கிவிட்டது. அதனால்தான் இருட்டாகிவிட்டது” என்று குரல் கொடுத்தான் விக்ரமன்.
“யார் அது?”
“நான் உன் முன்னால்தான் நிற்கிறேன். என்னைத் தெரிய வில்லையா?” என்று பாறை பின்னால் ஒளிந்து பதில் சொன்னான் விக்ரமன்.
“என் பலம் தெரியாமல் மோதுகிறாய். இதோ விளக்கு ஏற்றிவிட்டு உன்னைக் கவனிக்கிறேன்” என்று விளக்கை ஏற்ற முயன்ற அரக்கனின் கண்களில் குளவி கொட்டியது. வலியால் துடித்தான் அரக்கன். “ஆ ஐயோ… என் கண் போனதே” என்று அரக்கன் அலறும்போதே குளவிக் கூட்டம் படையெடுத்து வந்தது. கடி தாங்காமல் அலறிக்கொண்டிருந்தான் அரக்கன். அப்போது இளவரசியை அழைத்துக்கொண்டு, குளவியிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினான் விக்ரமன்.
அரக்கனின் சக்தி மறைந்தது. கல்லானவர்கள் உயிர்பெற்றனர். எல்லோரும் வேகமாக அந்தக் காட்டைவிட்டு ஓடினார்கள். இளவரசியைக் காப்பாற்றியதற்காக ஏராளமான பொன்னும் பொருளும் பரிசாக விக்கிரமனுக்கு வழங்கினார், அரசர். அரண்மனையிலேயே ஒரு வேலையும் கொடுத்தார். பாட்டியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தான் விக்ரமன்.