பள்ளி உலா

பள்ளி உலா
Updated on
2 min read

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி,
பூச்சிஅத்திப்பட்டு, திருவள்ளூர்.

கிராமப்புற மாணவர்களும் தொழில்நுட்ப வசதியுடன் கல்வி பயிலும் நோக்கோடு ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. வகுப்பறைகளில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கிறது. சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பள்ளி இருப்பதால், மாவட்ட அளவிலான ’தூய்மைப் பள்ளி விருது’ தமிழக அரசு மூலம் வழங்கப்பட்டிருக்கிறது. பள்ளி சார்பாகப் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் சுற்றியுள்ள கிராமங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் விதத்தில் பள்ளி சார்பாக, வீட்டுக்கு ஒரு துணிப்பை வழங்கப்பட்டுள்ளது. திறந்த வெளியில் மலம் கழித்தலைத் தவிர்க்கும் விதத்தில் மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிராமத்தில் எழுத, படிக்கத் தெரியாதவர்களுக்கு மாணவர்கள் மூலம் எழுத்தறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது.
மாணவர்களிடையே நேர்மைப் பண்பை வளர்க்கும் விதத்தில் ‘நேர்மை அங்காடி’ செயல்பட்டு வருகிறது. பென்சில், பேனா, ரப்பர், அளவுகோல் போன்ற பல பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு, அதற்கு மாணவர்கள் விரும்பும் பணத்தை உண்டியலில் போட்டுவிட வேண்டும். 2-ம் வகுப்பு மாணவி எம். சுவேதாவும் 3-ம் வகுப்பு மாணவி எம். லாவண்யாவும் வட்டார அளவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் பல்வேறு பரிசுகளைப் பெற்றிருக்கிறார்கள். ’சுத்தம் சுகம் தரும்’ பேச்சுப் போட்டியில் 5-ம் வகுப்பு மாணவர் டி. கோபிநாத் வட்டார அளவில் பரிசு பெற்றுள்ளார். ’போஷான் அபியான்’ ஓவியப் போட்டியில் மாணவர் டி. எம். விமல் பரிசு பெற்றார். குறுவள மைய அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் இரண்டு ஆண்டுகளாக, இந்தப் பள்ளி மாணவர்கள் முதல் பரிசு பெற்று வருகிறார்கள்.

சபரி வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளி, லாஸ்பேட்டை, புதுச்சேரி.

மாணவர்களுக்குச் சிறந்த கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு, சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கல்வியோடு மாணவர்களின் தனித் திறன்களை ஊக்குவிப்பதிலும் அதிக அக்கறை காட்டி வருகிறது.
கடந்த ஆண்டு ஆயிரம் விதைப்பந்துகளை உருவாக்கி, மரங்கள் இல்லாத இடங்களில் தூவிவிட்டிருக்கிறார்கள் இந்தப் பள்ளி மாணவர்கள். இந்த ஆண்டு மரக்கன்றுகளை நட்டு, பசுமைப் புதுச்சேரியாக மாற்றும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்கள்.

‘தற்கொலைத் தடுப்பு’ என்ற மிதிவண்டி பேரணியை நடத்தி, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
புதுச்சேரியில் உள்ள பொது இடங்கள் மற்றும் பள்ளிகளில் உள்ள சுவர்களைச் சுத்தம் செய்து, வர்ணம் பூசியிருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் கடற்கரையையும் பொது இடங்களையும் தூய்மை செய்யும் பணியையும் மேற்கொண்டு வருகிறார்கள் இந்தப் பள்ளி மாணவர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in