Published : 25 Sep 2019 11:13 am

Updated : 25 Sep 2019 11:13 am

 

Published : 25 Sep 2019 11:13 AM
Last Updated : 25 Sep 2019 11:13 AM

டிங்குவிடம் கேளுங்கள்: தண்ணீர் குடிக்காத விலங்கு உண்டா?

an-animal-that-does-not-drink-water

தண்ணீரே குடிக்காமல் உயிர் வாழக்கூடிய விலங்கு உண்டா, டிங்கு?

வெ. ஸ்ரீராம், 5-ம் வகுப்பு, சி.ஆர்.ஆர். மெட்ரிக். பள்ளி, ஒண்டிபுதூர், கோவை.


பாலைவனங்களில் வாழும் சில விலங்குகள் தண்ணீரை நேரடியாகப் பருகாமலும் பல ஆண்டுகள் உயிர் வாழக்கூடிய தகவமைப்பைப் பெற்றுள்ளன. அப்படிப்பட்ட விலங்குகளில் ஒன்று, கங்காரு எலி. தன் வாழ்நாளில் தண்ணீரே பருகுவதில்லை. பருப்புகள், சிறு பூச்சிகளைச் சாப்பிடும் கங்காரு எலி, உணவிலிருந்தே தனக்குத் தேவையான நீர்ச்சத்தைப் பெற்றுக்கொள்கிறது. உடலில் இருந்து வெளியேறும் நீரை வெளியேற்ற சிறப்பான முறையில் சிறுநீரகத்தைப் பெற்றிருக்கிறது. பகல் நேரத்தில் வளையை விட்டு வெளியே வருவதில்லை. இரவு நேரத்தில் உணவு தேடிச் செல்வதால், இவற்றின் உடல் நீர்ச்சத்தை இழப்பதில்லை, ஸ்ரீராம்.

காந்தியைத் தவிர, வேறு யாராவது ’மகாத்மா’ பட்டம் பெற்றிருக்கிறார்களா, டிங்கு?

–வி. நாகராஜன், 7-ம் வகுப்பு, வெளியகரம், திருவள்ளூர்.

காந்திக்கு முன்பே ஒருவருக்கு ‘மகாத்மா’ பட்டம் அளிக்கப்பட்டிருக்கிறது, நாகராஜன். அவர்தான் ஜோதிராவ் புலே. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இவர், மிகச் சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்தார். ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் பெண்களுக்காகவும் பாடுபட்டார். பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் தமது மனைவி சாவித்ரிபாயைப் படிக்க வைத்தார்.

பிறகு சாவித்ரிபாயுடன் இணைந்து ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் பள்ளிகளை ஆரம்பித்தார். கணவனை இழந்த பெண்களுக்கு மறுமணம் உட்பட பல்வேறு சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்ட ஜோதிராவ் புலேவை, ‘மகாத்மா’ என்று அழைக்கிறார்கள்.

கேள்விகளுக்கு நன்றாகப் பதில் சொல்லும் உன்னைப் பார்க்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறது. படத்தை வெளியிடுவாயா டிங்கு?

- அர்ஜுன், 2-ம் வகுப்பு, ஈஷா வித்யாலயா, கூட்டாம்புளி, தூத்துக்குடி.

இந்தப் பகுதியில் ஒவ்வொரு வாரமும் விதவிதமாக என் படங்கள் வெளிவந்துகொண்டுதானே இருக்கின்றன, அர்ஜுன்?

என் அம்மா சமையலில் தோலோடு பூண்டைப் போட்டு விடுகிறார். இது நல்லதா, டிங்கு?

வி. சிந்தாணிக்கா, 7-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, திருச்சி.

சில காய்களின் தோலில் அதிக அளவில் சத்து இருப்பதால், அவற்றைத் தூக்கி எறியாமல் துவையல் செய்து சாப்பிட்டுவிடுவார்கள். ஆனால், இப்போது ரசாயனம் தெளிக்கப்படுவதால் தோல்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள். பூண்டைத் தோலுடன் சேர்த்து சமைத்தால், சாப்பிடும்போது சிக்கும் என்ற சிறு பிரச்சினையைத் தவிர, கெடுதல் எதுவும் இல்லை. ஆனால், பூண்டுச் செடிகளுக்குத் தெளிக்கப்படும் ரசாயனம், நிலத்துக்குள் சென்று பூண்டின் தோல்மீது படியும் வாய்ப்பு இருந்தால் அதைத் தவிர்ப்பது நல்லது, சிந்தாணிக்கா.

திடப் பொருட்கள் தண்ணீரில் மூழ்கும்போது, பனிக்கட்டி, வெண்ணெய் மிதப்பது எப்படி, டிங்கு?

–சூர்யா, புஷ்பலதா லிட்டில் ஸ்கூல், பாளையங்கோட்டை.

பொதுவாகத் திடப் பொருட்களின் அடர்த்தி, தண்ணீரின் அடர்த்தியைவிட அதிகமாக இருப்பதால், போட்டவுடன் மூழ்கிவிடுகின்றன. பனிக்கட்டி, வெண்ணெய் போன்றவை திடப் பொருட்களாக இருந்தாலும் இவற்றின் அடர்த்தி, தண்ணீரின் அடர்த்தியைவிடக் குறைவாக இருப்பதால் மிதக்கின்றன.

நீரின் மூலக்கூறு இரண்டு ஹைட்ரஜன் அணுக்களாலும் ஓர் ஆக்சிஜன் அணுவாலும் ஆனது என்பது உங்களுக்குத் தெரியும். இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் எலக்ட்ரான்களைச் சமமாக வழங்கி, சமமாகப் பகிர்ந்துகொள்கின்றன (சகப் பிணைப்பு (covalent). இந்தப் பிணைப்பின் காரணமாகப் பனிக்கட்டியின் அடர்த்தி குறைகிறது, சூர்யா.

இரண்டு கேள்விகள். கடலில் ஏன் அலைகள் உருவாகின்றன? சுவாரசியமான புதிர் ஒன்றைச் சொல்ல முடியுமா, டிங்கு?

–த. ரம்யா, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பொய்யாமணி, குளித்தலை. இரண்டு வாரங்களுக்கு முன்புதான் கடல் அலை குறித்த கேள்விக்குப் பதில் சொல்லியிருக்கிறேன், ரம்யா. அதனால் உங்களின் இரண்டாவது கேள்விக்கு மட்டும் பதில் அளிக்கிறேன். மூன்று தோழிகள். ஒரு தோழி மூங்கிலை வெட்டி அழகான புல்லாங்குழலைச் செய்தார். ஆனால், அவருக்கு வாசிக்கத் தெரியாது.

இன்னொரு தோழி வசதியானவர், அவருக்கு நன்றாகப் புல்லாங்குழல் வாசிக்கத் தெரியும். மூன்றாவது தோழி ஏழ்மையானவர், இதுவரை புல்லாங்குழலைத் தொட்டதுகூட இல்லை. ஆனால், இந்த மூவருக்கும் அந்தப் புல்லாங்குழல் மீது ஆசை. நீங்கள் யாருக்கு இந்தப் புல்லாங்குழலைக் கொடுப்பீர்கள்? யோசித்துவிட்டு, தொடர்ந்து படியுங்கள்.

இந்தப் புதிருக்கு இதுதான் விடை என்று ஒன்று இல்லை. நீங்கள் யாரைத் தேர்ந்தெடுத்தாலும் அவருக்கான நியாயத்தைச் சொல்லிவிட முடியும். இதுவரை எதையும் அனுபவிக்காத ஏழைப் பெண்ணுக்குப் புல்லாங்குழலைக் கொடுப்பதாக நீங்கள் சொன்னால் அதுவும் நியாயமானதே. புல்லாங்குழலை வாசிக்கத் தெரியாத ஏழைப் பெண்ணுக்குக் கொடுப்பதைவிட, வாசிக்கத் தெரிந்த பணக்காரப் பெண்ணுக்குக் கொடுப்பதுதான் சரி என்று நீங்கள் சொன்னால், அதுவும் நியாயமானதே.

இவர்கள் இருவரையும் தவிர்த்து, புல்லாங்குழலைச் செய்த அந்தப் பெண்ணுக்குதான் புல்லாங்குழலைத் தருவீர்கள் என்றால், அது இன்னும் உன்னதமானது. ஏனென்றால் ’உழைத்த’ பெண்ணுக்குப் பலன் கிடைப்பதுதானே மிகச் சரியானதாக இருக்கும்? இந்தப் புதிருக்குச் சொந்தக்காரர் நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை, அமர்த்யா சென். உங்கள் வீட்டிலும் நண்பர்களிடமும் இந்தப் புதிரைப் போட்டு, என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள். சுவாரசியமாக இருக்கும்.

குடிக்காத விலங்குதண்ணீர்மகாத்மாகாந்திசிறு பூச்சிகள்கங்காரு எலிபூண்டுடிங்குவிடம் கேளுங்கள்பனிக்கட்டிவெண்ணெய்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

weekly-news

சேதி தெரியுமா? 

இணைப்பிதழ்கள்
wildlife-heroine

காட்டுயிர் நாயகி!

இணைப்பிதழ்கள்

More From this Author

x