டிங்குவிடம் கேளுங்கள்: பாம்பின் விஷம் ஏன் கீரியைத் தாக்குவதில்லை

டிங்குவிடம் கேளுங்கள்: பாம்பின் விஷம் ஏன் கீரியைத் தாக்குவதில்லை

Published on

இருவரின் கையெழுத்து ஒன்றுபோல் இருக்குமா, டிங்கு?

- வி. பொன்தர்ஷினி, 11-ம் வகுப்பு, கமலாவதி மேல்நிலைப் பள்ளி, சாகுபுரம், தூத்துக்குடி.

ஒவ்வொரு மனிதரும் தனித்துவமானவர். மனிதர்களின் கைரேகைகளைப் போலவே அவர்களின் கையெழுத்தும் தனித்துவத்துடன் இருக்கும். அதனால்தான் ஆவணங்களில் கையெழுத்து முக்கியமானதாக இருக்கிறது. ஒருவரின் கையெழுத்தைப் பார்த்துப் போட்டால், பரிசோதனையில் கண்டுபிடித்துவிட முடியும்.

இரட்டையர்களாகப் பிறந்தவர்கள் உருவத்தில் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும் அவர்களது கையெழுத்துகள் ஒன்றுபோல் இருக்காது. இரண்டு கைகளையும் எழுதுவதற்குப் பயன்படுத்துபவர்களின் வலது கையெழுத்தும் இடது கையெழுத்தும்கூட ஒன்றாக இருக்காது, பொன்தர்ஷினி.
என் பாடப் புத்தகத்தில் அயர்லாந்திலும் ஃபாரே தீவிலும் கொசுக்கள் இல்லை

என் பாடப் புத்தகத்தில் அயர்லாந்திலும் ஃபாரே தீவிலும் கொசுக்கள் இல்லை
என்று படித்தேன். ஏன் அங்கு மட்டும் இல்லை, டிங்கு?

– பா. மேஹசூரஜ், 12-ம் வகுப்பு, நியூ க்ரெசென்ட் மெட்ரிக். பள்ளி, புளியங்குடி.

அது அயர்லாந்து இல்லை, ஐஸ்லாந்து. கொசுக்களில் சுமார் 3,500 இனங்கள் இருக்கின்றன. கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய வெப்பமான சூழ்நிலையும் நீர்நிலையும் ரத்தத்தை உறிஞ்சுவதற்கான விலங்குகளும் தேவை. பனிப்பாலைவனமான அண்டார்டிகாவில் உறையாத நீர் குறைவு. அதிக நில விலங்குகளும் இல்லை என்பதால் கொசுக்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இல்லை. ஆனால், கொசுவின் உறவினரான midge வகைப் பூச்சி இருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. பனிப்பிரதேசங்களாக இருக்கும் ஆர்க்டிக், சைபீரியாவில் விலங்குகள் வசிப்பதால் அங்கே கொசுக்கள் வாழ்கின்றன.

நீரிலும் நிலத்திலும் ரசாயனத்தின் அளவு அதிகமாக இருந்தால் கொசுக்களால் அதைச் சமாளிக்க முடியாது. ஆர்க்டிக் பகுதிக்கு அருகில் இருக்கும் ஐஸ்லாந்திலும் ஃபாரே தீவுகளிலும் கொசுக்கள் இல்லை. ஆனால், பூமி வெப்பமடைவதால் பனிப்பிரதேசங்கள் எல்லாம் உருகிக்கொண்டிருக்கின்றன. இது தொடர்ந்தால் விரைவில் இது போன்ற பகுதிகளிலும் கொசுக்களால் இனப்பெருக்கம் செய்ய முடியும். எதிர்காலத்தில் கொசுக்களே இல்லாத இடமே இல்லை என்ற நிலை வரலாம், மேஹசூரஜ்.

பாம்புகளின் விஷம் கீரிகளையும் கழுகுகளையும் ஏன் கொல்வதில்லை, டிங்கு?

– வி. திவ்யதர்ஷினி, 6-ம் வகுப்பு, ஸ்ரீ செளடாம்பிகா நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

நல்ல கேள்வி. கீரியின் தோல் தடிமனானது. அத்துடன் முடியும் இருக்கும். பெரும்பாலும் பாம்பின் கடி படாதபடிதான் தாக்குதலை மேற்கொள்ளும். ஒருவேளை பாம்புக் கடித்துவிட்டால், கீரியின் உடலிலுள்ள நிகோடினிக் அசிட்டைல்கோலின் (Nicotinic acetylcholine receptors) என்ற எதிர்ப்பாற்றல் விஷத்தை முறியடித்துவிடும். அதனால் பாம்புடன் கடுமையாகச் சண்டை போட்டாலும் கீரிக்குப் பாதிப்பு இல்லை.

கழுகுக்குப் பாம்பின் விஷத்தை முறிக்கக்கூடிய எதிர்ப்பாற்றல் கிடையாது. ஆனாலும் வேகமாகச் செயல்படுவதால் பாம்பின் கடியிலிருந்து தப்பிவிடுகிறது. இமைக்கும் நேரத்தில் பாம்பைத் தூக்கிக்கொண்டு உயரத்துக்குச் சென்றுவிடும். பிறகு திடீரென்று பாம்பைப் பாறை மீது வீசும். இறுதியில் பாம்பைக் கொன்றுவிடும், திவ்யதர்ஷினி.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in