Published : 04 Sep 2019 11:28 AM
Last Updated : 04 Sep 2019 11:28 AM

டிங்குவிடம் கேளுங்கள்: குளத்து மீனால் கடலில் வாழ முடியுமா?

குளத்து மீன்களால் கடலில் வாழ முடியுமா, டிங்கு?

– தஷ்வந்த், 8-ம் வகுப்பு,

இந்து வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில். ஆறு, குளம் போன்ற நல்ல நீர்நிலைகளில் வாழும் எல்லா மீன்களாலும் கடலில் வசிக்க முடியாது. அதேபோல் கடலில் வாழும் எல்லா மீன்களாலும் ஆறு, குளங்களில் வசிக்க முடியாது. நல்ல நீர்நிலைகளில் வாழும் மீன்கள் உப்பை எவ்வாறு கிரகித்துக்கொள்ள முடியும் என்பதைப் பொறுத்தே அவற்றால் கடலில் வாழமுடியும். ஒரு சில மீன்கள் நல்ல நீரிலும் உப்பு நீரிலும் வாழும் தன்மையைப் பெற்றிருக்கின்றன. இவற்றை Anadromous fish, Catadromous fish என்று இரு வகையாகப் பிரித்திருக்கிறார்கள்.

நன்னீர் நிலையில் பிறந்து, வாழ்க்கையின் பெரும்பகுதியை கடல் நீரில் கழித்து, முட்டைகளை இடுவதற்கு மீண்டும் நன்னீருக்கு வரும் சால்மன் போன்ற மீன்கள் அனட்ரோமோஸ் என்று அழைக்கப்படுகின்றன. கடல் நீரில் பிறந்து, வாழ்க்கையின் பெரும்பகுதியை நன்னீரில் கழித்து, முட்டைகளை இட மீண்டும் கடலுக்கு வரும் ஈல்கள் கேடட்ரோமோஸ் என்று அழைக்கப்படுகின்றன.

ஒரு சாதாரணமான குளத்து மீனால் கடல் நீரில் தாக்குப் பிடிக்க முடியாது. கடலில் வாழும் மீன்களிலேயேகூட மேல் பரப்பில் வாழும் மீன்களால் கடலின் ஆழத்தில் வசிக்க இயலாது. ஆழத்தில் வசிக்கும் மீன்களால் கடலின் மேற்பரப்பில் வசிக்க முடியாது. காரணம், கடல் நீரின் அழுத்தம், தஷ்வந்த்.

தொண்டை அடைப்பான் நோய்க்குப் பள்ளியில் தடுப்பூசி போட்டனர். இதனால் காய்ச்சல் வந்தது. கை வீங்கியது. மருத்துவம் இவ்வளவு முன்னேறிய பிறகும் ஊசி மூலம்தான் மருந்தைச் செலுத்த வேண்டுமா? விழுங்கும் மாத்திரையாகவோ மருந்தாகவோ கொடுக்கக் கூடாதா, டிங்கு?

– ர. வர்ஷிகா, 7-ம் வகுப்பு, செண்பகம் மேல்நிலைப் பள்ளி, ஊத்துக்குளி.

நல்ல கேள்வி. உங்களின் வலி புரிகிறது, வர்ஷிகா. தடுப்பு மருந்துகள் நோயைத் தாக்கக்கூடிய நுண்ணுயிரி, கொல்லப்பட்ட நுண்ணுயிரி அல்லது நச்சுப் பொருளில் இருந்து பெறப்பட்ட ஒரு பொருளைக் கொண்டதாக இருக்கின்றன. இவை திரவ வடிவில்தான் இருக்கும். மாத்திரை வடிவில் உருவாக்க இயலாது. தடுப்பூசி மூலம் செலுத்தப்படும் மருந்து உடலுக்குச் செல்லும்போது, அது அந்நியப் பொருளாக அடையாளப் படுத்தப்பட்டு, நோய் எதிர்ப்பாற்றல் மூலம் அழிக்கப்படுகிறது. அடுத்த முறை இதே போன்ற கிருமிகள் உள்ளே நுழையும்போது ஏற்கெனவே அழித்ததை நினைவில் கொண்டு, நோய் எதிர்ப்பாற்றல் அழித்துவிடுகிறது.

இதற்காகத்தான் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்தத் தடுப்பூசிகளால் மோசமான நோய்கள் தடுக்கப்பட்டு, உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. போலியோ, வயிற்றுப்போக்கு என்ற இரண்டு நோய்களுக்கு மட்டும் சொட்டு மருந்துகளாகத் தடுப்பு மருந்துகள் இருக்கின்றன. இவற்றை வாய் மூலம் உட்கொள்ள வேண்டும். மற்ற நோய்களுக்கு எல்லாம் ஊசிகள் மூலமே மருந்தைச் செலுத்த முடியும். தொண்டை அடைப்பான் எனப்படும் டிப்தீரியா, மோசமான விளைவை ஏற்படுத்தக் கூடிய நோய். அதை ஒப்பிடும்போது சில நாட்கள் நீடிக்கும் காய்ச்சலோ வீக்கமோ பெரிய விஷயமில்லைதானே?

மக்கள்தொகை மாதிரிக் கணக்கெடுப்பை எதற்காக எடுக்கிறார்கள், டிங்கு?

– மு. பரத் ராஜ், 4-ம் வகுப்பு, சின்மயா வித்யாலயா, அண்ணா நகர், சென்னை.

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடைசியாக 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அடுத்து 2021-ம் ஆண்டு நடத்தப்பட இருக்கிறது. இந்தக் கணக்கெடுப்பில் சில விஷயங்களைப் புதிதாகச் சேர்க்கிறார்கள். அதனால் ஏற்படும் குழப்பங்களைச் சரிசெய்வதற்காக இந்த ‘மக்கள்தொகை மாதிரிக் கணக்கெடுப்பு’ நடத்தப்படுகிறது, பரத் ராஜ். குழப்பங்களைச் சரிசெய்துவிட்டால், மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது பிரச்சினை ஏற்படாது.

மரங்களுக்குப் பட்டைகள் ஏன் இருக்கின்றன, டிங்கு?

– க. கவிந்ரா ஹரினி, 7-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, கருமண்டபம்.

நம் உடலைத் தோல் பாதுகாப்பதுபோல் மரங்களுக்குப் பட்டைகள் பாதுகாப்பாக இருக்கின்றன. தண்ணீரைச் சேமிப்பது, வெயில், மழை போன்றவற்றி லிருந்து மரத்தைக் காப்பது, நோய்கள் அண்டாமல் தடுப்பது, விலங்குகளும் பூச்சிகளும் மரங்களுக்குத் தீங்கு இழைக்காமல் தடுப்பது போன்ற பல பணிகளை இந்த மரப்பட்டைகள் மேற்கொள்கின்றன. சில மரங்கள் காட்டுத்தீயைத் தாக்குப் பிடிக்கும் விதத்தில் அதிக தடிமனான மரப்பட்டைகளைக்கொண்டிருக்கும். மரத்தின் பட்டைகள் அதிகம் சேதமடைந்தால் மரமே பட்டுப்போய்விடும், கவிந்ரா ஹரினி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x