Published : 04 Sep 2019 10:53 AM
Last Updated : 04 Sep 2019 10:53 AM

இந்தப் பாடம் இனிக்கும் 10: இயற்கைக்கு என்ன விலை?

ஆதி

செவ்விந்தியர்களையும் அமெரிக்கப் பூர்வகுடிகளையும் வில்லன்களாகச் சித்தரித்தும், கௌபாய்களும் அமெரிக்கக் காவல்துறை அதிகாரிகளும் செவ்விந்தியர்களை எதிர்த்துத் தனியாளாக மோதி வெல்வது போலவும் பிரபல காமிக்ஸ் சாகசக் கதைகள், திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இன்று நாம் அமெரிக்கா என்று அழைத்துக்கொண்டிருக்கும் நாடு வெள்ளையர்களுக்குச் சொந்தமானதல்ல. அந்த நாட்டின் பூர்வகுடிகள் செவ்விந்தியர்கள். ஐரோப்பாவில் இருந்து அனுப்பப்பட்ட கைதிகள், நாடு கடத்தப்பட்டவர்கள், புதிதாகக் குடியேற வந்தவர்கள் செவ்விந்தியர்களின் நிலங்களை 18, 19-ம் நூற்றாண்டுகளில் அபகரிக்கத் தொடங்கினார்கள். இந்த முயற்சிகளை செவ்விந்தியர்கள் எதிர்த்தாலும் துப்பாக்கி, பீரங்கிகளைக் கொண்ட ஆங்கிலேயர்களை அவர்களால் தோற்கடிக்க முடியவில்லை. இதனால் பெருமளவு செவ்விந்தியர்கள் கொல்லப்பட்டனர். எஞ்சிய செவ்விந்தியர்கள் சிறு பகுதி களுக்குள் ஒடுங்கி வாழ்ந்தார்கள்.

இப்படி அந்த மண்ணில் வாழ்ந்த பூர்வகுடிகள் நசுக்கப்பட்டே நவீன அமெரிக்கா வளர்ந்தது. அப்போது அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு எதிராகத் துணிச்சலாகச் செயல்பட்ட பூர்வகுடித் தலைவர் களும் இருந்தார்கள். அவர்களில் இருவரைப் பற்றிப் பார்ப்போம்.

வானத்தை வாங்க முடியுமா?

அமெரிக்காவின் வடமேற்கு பகுதியின் துணிச்சலான தளபதியாக சியாட்டில் (சீயால்) இருந்தார். சுகுவாமிஷ், துவாமிஷ் செவ்விந்திய இனக்குழுக்களின் தலைவர் அவர். அவரது கட்டுப்பாட்டில் இருந்த பகுதியை வாங்க விரும்புவதாக ஆங்கிலேயர்களின் அரசு கூறியது. அதற்கு சியாட்டில் கூறிய பதில் உலகப் புகழ்பெற்றது.
"வானத்தை வாங்க முடியுமா? மழையையும் காற்றையும் விலை பேச முடியுமா?" என்ற கேள்வி களுடன் தொடங்கிய அவருடைய உரை, நிலம், காற்று, நதிகளை உங்கள் குழந்தைகளின் குழந்தைகளுக்காகப் பாதுகாப்பாக வைத்தி ருங்கள் என்ற அம்சத்துடன் நிறைவடைந்தது.

இப்படி இயற்கையின் முக்கியத்துவம் பற்றியும், உலகில் மனித இனம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும், இயற்கையைச் சார்ந்துதான் வாழ வேண்டுமே ஒழிய, இயற்கைக்கு எதிராக வாழ்வது மனித இனம் தன்னைத் தானே அழித்துக் கொள்வது போலத்தான் என்றும் சியாட்டில் கூறியுள்ளார். இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்தும் அவர் கவனம் செலுத்தச் சொன்ன எல்லா விஷயங்களும் பாதுகாக்கப்படாமல், மோசமாக சீரழிக்கப் பட்டிருப்பது, மனித குலத்தின் துரதிருஷ்டம். அவர் கூறியுள்ள அழிவு, நம்மை எட்டிப்பார்க்க ரொம்ப நாள் ஆகாது.

நினைவு நகரம்

சியாட்டிலின் இந்த உரை உலகப் புகழ்பெற்றது. செவ்விந்தியர்களிடம் நிலத்தை வாங்க முயன்ற ஆங்கிலேயர்களுக்குச் சூழலியல் அக்கறை பற்றி வலியுறுத்தினாலும், ஆங்கிலேயர்களுடன் சியாட்டில் இணக்கமாகவே இருந்தார். அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகரத்துக்கு அவருடைய நினைவாகவே பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் மூன்றாவது வாரம் தளபதி சியாட்டிலை நினைவுகூரும் நாட்களை சுகுவாமிஷ் பழங்குடிகள் அனுசரிக்கிறார்கள்.

அமெரிக்காவின் சிம்ம சொப்பனம்

மற்றொரு புகழ்பெற்ற அமெரிக்கப் பூர்வகுடித் தலைவர் ஜெரோனிமோ. அபாசே இந்தியன் இனக்குழுவைச் சேர்ந்த இவர், சியாட்டிலைப் போல அமெரிக்காவில் குடியேறிய ஆங்கிலேயர்களுடன் இணக்கமாக இருக்கவில்லை. அமெரிக்கர்களின் ஆதிக்க மனப்பான்மையை எதிர்த்துத் துணிச்சலாகப் போரிட்டார். தன்னுடைய 17 வயதிலேயே ஜெரோனிமோ மோதல்களில் புகழ்பெற்றிருந்தார். மெக்சிகோவை ஆக்கிரமிக்க முயன்றுகொண்டிருந்த அமெரிக்கர்கள், ஸ்பானியர்களை ஜெரோனிமோ எதிர்த்தார். 1858-ல் மெக்சிகப் படையினரால் அவருடைய தாய், மனைவி அலோப், 3 குழந்தைகள் கொல்லப்பட்டார்கள். அதற்குப் பிறகு மெக்சிகர்களை எதிர்த்துக் கடுமையாக மோதினார்.

1848-ல் ‘மெக்சிக-அமெரிக்கப் போர்’ முடிவுக்கு வந்ததை அடுத்து மெக்சிகோவின் பகுதிகளை அமெரிக்கா தன்வசமாக்கிக் கொண்டது. அபாசே இந்தியன் பூர்வகுடிகள் வாழ்ந்த தென்மேற்குப் பகுதியில் தங்கம் கிடைத்ததால் அந்தப் பகுதிகளுக்குப் பல அமெரிக்கர்கள் படையெடுத்தனர். இதையடுத்து பூர்வகுடிகளுக்கும் அமெரிக்காவும் இடையே மோதல் தொடங்கியது.

கடைசிவரை போரிட்டிருக்க வேண்டும்

1874-ல் 4,000 அபாசே இந்தியன் பூர்வகுடிகள், தங்கள் தாய்நிலத்திலிருந்து அரிசோனா மாகாணத்தின் தரிசு நிலப்பகுதிக்கு அனுப்பப்பட்டார்கள். தங்கள் பூர்வகுடி உரிமைகள் மறுக்கப்பட்டது, உணவு கிடைக்காமை, தாய்நில ஏக்கம் போன்ற அம்சங்கள் காரணமாக அந்த மக்கள் ஜெரோனிமோவை அணுகினார்கள். ஜெரோனி மோவும் தன் வாழ்நாளின் இறுதிவரை இயன்ற வழிகளில் எல்லாம் அமெரிக்க அரசை எதிர்த்து மோதிவந்தார்.

ஜெரோனிமோவைத் தேடும் வேலையில் அன்றைய தேதிக்கு கிட்டத்தட்ட கால்வாசி அமெரிக்கப் படை (5,000 பேர்) ஈடுபட்டது என்றால், அவர் எவ்வளவு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந் திருப்பார் என்பதைப் புரிந்துகொள்ளலாம். கடைசியாக 1886-ல் அவர் சரணடைந்தார். அமெரிக்க அரசிடம் சரணடைந்த கடைசிப் பூர்வகுடித் தலைவர் அவர்.
கடைசி இருபதாண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தைப் போர்க் கைதியாகவே அவர் கழித்தார். ஒக்லஹாமா பகுதியில் இறப்பதற்குமுன் அவர் கூறிய வார்த்தைகள்: “நான் சரணடைந்திருக்கக் கூடாது. கடைசி ஆளாக நான் உயிரோடு இருக்கும்வரை போரிட்டிருக்க வேண்டும்.”

இந்த வாரம்

எட்டாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில், ‘இயற்கை’ என்ற இயலின்கீழ் ‘நிலம் பொது’ என்ற உரைநடை உலகம் பகுதி.

கட்டுரையாளர்
தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x