புதுமையான பொம்மலாட்டம்

புதுமையான பொம்மலாட்டம்
Updated on
1 min read

கனி

பொம்மலாட்ட பொம்மைகளைப் பார்த்தி1ருப்பீர்கள். ஆனால், தூக்கி எறியும் தேவையற்ற பொருட்கள் பொம்மலாட்டம் ஆடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ‘கியூரியோ பிளே’ அரங்கில், கேரளத்தைச் சேர்ந்த பிரபல பொம்மலாட்டக் கலைஞரும் நடிகருமான சனோஜ் மாமோ, ஒரு சுவாரசியமான நாடகத்தைக் குழந்தைகளுக்கு நிகழ்த்திக் காட்டினார். சென்னையைச் சேர்ந்த ‘தியேட்டர் அக்கு’ என்ற நாடகக்குழு இந்த வித்தியாசமான பொம்மலாட்ட நாடகத்தையும், பொம்மலாட்டப் பயிலரங்கையும் ஒருங்கிணைத்திருந்தது.

பயன்படுத்திய பிறகு தூக்கிப் போடும் பிளாஸ்டிக் பாட்டில்களும் பிளாஸ்டிக் கழிவுகளும் பொம்மைகளாக மாறி மேடையில் ஆட்டம் போட்டன. “எனக்குச் சிறுவயதிலிருந்தே பொம்மலாட்டம் போன்ற கலைகளின்மீது ஆர்வம் அதிகம். குழந்தைகள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கான சிறந்த கலையாக பொம்மலாட்டத்தைப் பார்க்கிறேன். நான் படிக்கும்போது டிஸ்லெக்ஸியா குறைப்பாட்டைக் கொண்டிருக்கிறேன். படிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த என்னை மீட்டெடுக்க கலைதான் உதவியது.

அதனால், அந்தக் கலையைக் குழந்தைகளிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தேன். குறிப்பாக, என்னைப்போல் கற்றல் குறைபாடு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு இந்தக் கலையைக் கற்றுக் கொடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்திவருகிறேன்.

இது போன்ற கலைகள் அவர்களுக்குள் இருக்கும் படைப்பாற்றலை வெளியே கொண்டுவரும். குழந்தைகளுடன் பணியாற்றுவது அற்புதமான அனுபவம்” என்று சொல்லும் சனோஜ், கைகளோடு கால்களையும் பயன்படுத்தி பொம்மலாட்டத்தை நடத்தியது எல்லோரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. நாடகத்தைத் தொடர்ந்து, தூக்கி எறியும் பொருட்களை எப்படி பொம்மைகளாக மாற்றுவது என்றும் அவற்றை வைத்து பொம்மலாட்டத்தை எப்படி நடத்துவது என்றும் பயிற்சி கொடுத்திருக்கிறார் சனோஜ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in