Published : 28 Aug 2019 11:07 AM
Last Updated : 28 Aug 2019 11:07 AM

கதை: பாறை நகருமா?

தாய்க் கரடியும் குட்டிக் கரடியும் மீன் பிடிப்பதற்காக ஆற்றை நோக்கி நடக்க ஆரம்பித்தன.
“அம்மா, புதர் மாதிரி வளர்ந்து கிடக்கிறதே, இந்த மரங்களின் பெயர் என்ன?”
”நடக்க ஆரம்பித்து இரண்டு நிமிடங்களாகிவிட்டதே, இன்னும் உன்னிடமிருந்து கேள்வி வரவில்லையே என்று நினைத்தேன். ஆரம்பித்துவிட்டாய். இவை மூங்கில் மரங்கள். விலங்குகள், மனிதர்களுக்கு இவை பயன்படுகின்றன” என்றது தாய்க் கரடி.

”அம்மா, அதோ பாருங்கள். ஏதோ விலங்கைக் கண்டு நரி ஏன் இவ்வளவு பயந்து ஓடுகிறது?”
“ஓ… அதுவா? முள்ளம்பன்றி. நரியால் ஆபத்து வந்துவிடுமோ என்று முள்ளம்பன்றி ஓடுகிறது. முள்ளம்பன்றியால் ஆபத்து வந்துவிடுமோ என்று நரி ஓடுகிறதுடா, செல்லம்.”
“முள்ளம்பன்றியைப் பார்த்து நரி ஏன் பயப்ப வேண்டும் அம்மா?”
“சின்ன உருவமாக இருந்தாலும் முள்ளம்பன்றியின் உடலில் இருக்கும் முட்கள் நம் மீது பட்டால் பலத்த காயம் ஏற்பட்டுவிடும். அதற்காகத்தான் இந்த ஓட்டம்.”
”நல்லவேளை, நீங்கள் என்னிடம் இந்த விஷயத்தைச் சொன்னீர்கள். இனி நானும் முள்ளம்பன்றியைக் கண்டால் ஓடிவிடுவேன் அம்மா.”

அப்போது சலசலவென்று சத்தம் கேட்டது. உடனே குட்டியை இழுத்துக்கொண்டு, பெரிய மரத்துக்குப் பின்னால் ஒளிந்துகொண்டது தாய்க் கரடி. யானைக் கூட்டம் ஒன்று மூங்கில் மரங்களை நோக்கிச் சென்றது.
“என்னம்மா, இவ்வளவு பெரிய உருவமா?”
“நிலத்தில் வாழும் பெரிய விலங்கு யானைதான்.”
“அப்படி என்றால் நீரில் வாழும் உயிரினம் இதைவிடப் பெரிதாக இருக்கிறதா?”
“அடடா! புத்திசாலி. நீலத்திமிங்கிலம்தான் பூமியில் வாழும் உயிரினங்களில் பெரியது.”
”இந்த யானைக்கு ஏன் மூக்கு…”
“கொஞ்ச நேரம் அமைதியாக வா. இந்த இடத்தில் மலைப்பாம்பு இருக்கலாம். நாம் கவனமாக இருக்க வேண்டும்.”
“ஓ… அதுதான் மலைப்பாம்பா? மரக்கிளையில் தொங்கிக்கொண்டிருந்தது. அதன் வாலைப் பிடித்து இழுத்துவிட்டு வந்தேன்.”

“ஐயோ… அப்படி எல்லாம் செய்யாதேடா செல்லம். அதுக்கு விஷப் பற்கள் இல்லை என்றாலும் நம்மை முழுமையாகவே முழுங்கிவிடும். ஜாக்கிரதை.”
“அப்படியா? இனி இப்படிச் செய்ய மாட்டேன் அம்மா.”
சற்று நேரம் அமைதியாக வந்தது கரடிக் குட்டி.
“என்னடா, ரொம்ப பயந்துட்டியா? காடு என்றால் பலவிதமான குணங்கள் கொண்ட விலங்குகள் இருக்கத்தான் செய்யும். நாம் யாரையும் தொந்தரவு செய்யக் கூடாது. நம் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். ஜாலியாக இரு.”
“அம்மா, நாட்டில் மனிதர்களிலும் விதவிதமானவர்கள் இருப்பார்களா?”
“உருவத்தில் அவர்கள் எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருப்பார்கள். அவர்களது குணங்களில்தான் பாம்பு, ஓநாய், சிறுத்தை, சிங்கம், கழுதைப்புலி, யானை, நாய் போன்றவற்றின் குணங்களைப் பார்க்க முடியும்.”
“ஓ… அப்படி என்றால் அவர்களுக்கும் நம்மைப்போல் கடினமான வாழ்க்கைதானா?”
“அவர்களைப் பார்க்கும்போது நம் காட்டு வாழ்க்கை அவ்வளவு ஒன்றும் கடினமானது அல்ல. இங்கேயாவது பாம்பு என்றால் இப்படி இருக்கும். புலி என்றால் அப்படி இருக்கும் என்று வெளிப்படையாகத் தெரியும். அதற்கு ஏற்றார்போல் நடந்துகொள்ளலாம். ஆனால், மனிதர்களிடம் அப்படி வெளிப்படையாகத் தெரியாது. எந்த நேரத்திலும் ஒரு மனிதர் பாம்பாகவும் புலியாகவும் மாறலாம்.”

“நல்லவேளை நான் ஒரு கரடியாகப் பிறந்தேன்.”
“அதோ ஆறு வந்துவிட்டது. நீ கரையில் இருந்து அமைதியாக வேடிக்கைப் பார். நான் நீருக்குள் சென்று, ஒரு பாறையில் அமர்ந்து மீன் பிடித்துக்கொண்டு வருகிறேன்.”
கரடிக் குட்டி கரையில் அமர்ந்து அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தது. தாய்க் கரடிக்கு மீன்கள் சிக்கினாலும் கைக்குள் அகப்படவில்லை. சற்று சோர்வடைந்தபோது, கரடிக் குட்டி கூப்பிட்டது.
“இருடா செல்லம். மீன்களே அகப்படவில்லை. இதோ பிடித்துக்கொண்டு வந்துவிடுகிறேன். அதுவரை வாயைத் திறக்காதே.”

“பாறை நகருமா, அம்மா?”
“இந்தக் கேள்வியைக் கரைக்கு வந்த பிறகு கேட்கக் கூடாதா? பாறை எப்படி நகரும்?” என்று சற்றுக் கோபத்துடன் கூறியது தாய்க் கரடி.
“நகர்கிறதே! அக்கரையில் இருந்து ஒரு பாறை உங்களை நோக்கி நகர்ந்து வந்துகொண்டிருக்கிறதே… அதோ பாருங்கள்.”
தாய்க்கரடி திரும்பிப் பார்த்தது. சட்டென்று நீரில் குதித்து, வேகமாகக் கரைக்கு வந்து சேர்ந்தது.
“என் செல்லக் குட்டி. என் உயிரைக் காப்பாற்றிவிட்டாய். அது பாறை அல்ல. முதலை. என்னைப் பார்த்து, நீருக்குள் பதுங்கி வந்துகொண்டிருக்கிறது. இப்போது ஏமாற்றம் அடைந்திருக்கும்.”
”இனிமேல் நான் கேள்வி கேட்கலாமா, அம்மா?”
”உன் கேள்வியால்தான் நான் பிழைத்திருக்கிறேன். தாராளமாகக் கேள் குட்டி.”

- எஸ். அபிநயா, 11-ம் வகுப்பு, நாளந்தாஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சின்னதம்பிபாளையம்,
திருச்செங்கோடு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x