Published : 28 Aug 2019 10:32 AM
Last Updated : 28 Aug 2019 10:32 AM

இடம் பொருள் மனிதர் விலங்கு: நான் ஒரு பெண், எனவே படிக்க விரும்புகிறேன்

மருதன்

ஒரு நாள் அப்பா தன் மகளை அழைத்தார். ”நீ எதற்காகப் படிக்க வேண்டும் என்கிறாய்? வீட்டிலுள்ள ஆண் குழந்தைகளைப் படிக்க வைப்பதற்கே தவிக்க வேண்டியிருக்கிறது. நீயும் பள்ளிக்குப் போக வேண்டும் என்றால் என்ன செய்வது? சொல் மகளே! ஏன் படிக்க வேண்டும் என்கிறாய்?” அப்பாவின் கேள்விக்கு மகள் அளித்த விளக்கம் ராஜஸ்தானைச் சேர்ந்த கமலா பசீன் என்னும் 73 வயது கவிஞரின் இந்திக் கவிதையில் காணக் கிடைக்கிறது.

சொல்கிறேன், அப்பா. நான் ஒரு பெண். நான் படிக்க வேண்டும். ஏனென்றால் வரலாற்றில் நீண்ட காலமாக இந்த உரிமை எனக்கு மறுக்கப்பட்டு வந்திருக்கிறது. அந்த உரிமையைத் திரும்பப் பெற வேண்டுமானால் நான் படிக்க வேண்டும்.

அப்பா, எனக்கும் கனவு வரும். என் கனவை நான் இந்தப் புழுதியில் தொலைக்க விரும்பவில்லை. அதன் முதுகில் ஒரு ஜோடி சிறகுகளை ஒட்டவைத்து இங்கிருந்து வெகு தூரத்துக்குக் கடத்திச் செல்ல விரும்புகிறேன். என் கனவு வானில் மிதந்து செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கு நான் படிக்க வேண்டும். ஏனென்றால் நான் ஒரு பெண். நம்மைச் சுற்றியுள்ள இருள் விலக வேண்டுமானால் அறிவின் வெளிச்சம் தேவை.

அந்த வெளிச்சத்தைப் பெற நான் படிக்க வேண்டும். என் சுதந்திரத்தைப் பறித்து என்னைப் பிணைத்து வைத்திருக்கும் அனைவரிடமிருந்தும், அனைத்திடமிருந்தும் விடுபட விரும்புகிறேன். அதற்கு நான் படித்தாக வேண்டும்.
இது ஆண்களின் உலகமாக இருப்பதால் பூதம்போல் வன்முறை வாழ்ந்துகொண்டிருக்கிறது.

அதன் கண்களில் படாமல் என்னை ஒளித்து வைக்க நீங்கள் துடிக்கிறீர்கள். உங்கள் அன்பு புரிகிறது, ஆனால், உங்கள் அன்பு என்னைப் பூச்சியைப்போல் மாற்றிவிடும் என்பதை நீங்கள் உணர வேண்டும். நானோ பூதத்தை நேரில் கண்டு வீழ்த்த விரும்புகிறேன். அதற்குத் துணிச்சல் வேண்டும். எனவே நான் படிக்க வேண்டும்.

எனக்கான போர்கள் வீட்டுக்குள்ளும் வீட்டுக்கு வெளியிலும் காத்திருக்கின்றன. நான் என் ஆயுதத்தைத் தயார் நிலையில் வைத்திருக்க விரும்புகிறேன். அதற்கு நான் படிக்க வேண்டும். ஏன் என்றால் நான் ஒரு பெண். அது உன் வேலை அல்ல, அமைதியாக இரு என்று சொல்கிறீர்கள். அமைதியாக இருந்தால் எந்த ஆபத்தும் என்னை நெருங்காது என்று உங்களால் உத்தரவாதம் கொடுக்க முடியுமா அப்பா? கனவு இறந்துவிட்டதா, சரி அமைதியாக இருப்போம். பூதம் தனது கூரான நகங்களால் என் உடலைக் கீறிவிட்டதா, சரி அமைதியாக இருப்போம்.

இருள் என்னைப் பிடித்து இழுக்கிறதா, அமைதி காப்போம். இதுதானே அப்பா, நீங்கள் சொல்ல வருவது? அம்மாவும் அம்மாவின் அம்மாவும் அவர் அம்மாவும் இப்படித்தானே அப்பா அமைதியாகக் கிடந்தார்கள். அவர்களுடைய வாழ்க்கை வசந்தத்திலா கழிந்து முடிந்தது? அப்படி ஒரு வசந்தம் எனக்கு வேண்டாம், அப்பா. நான் படிக்க வேண்டும். எப்படி அமைதியாக இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள அல்ல; ஏன் அமைதியாக இருக்கக் கூடாது என்பதைக் கற்றுக்கொள்ள.

நான் ஒரு பெண். ஆண்களின் உலகை அனைவருக்குமான உலகமாக மாற்ற வேண்டுமானால் நான் படிக்க வேண்டும். ஆண்களின் கல்வியை அனைவருக்குமான கல்வியாக மாற்ற வேண்டுமானால் நான் படிக்க வேண்டும். ஆண்களின் சட்டம் அனைவருக்குமான சட்டமாக மாற வேண்டுமானால் நான் படிக்க வேண்டும். உன்னிடமுள்ள அதிகாரம் ஏன் என்னிடம் இல்லை என்னும் கேள்வியை ஓர் ஆணை நோக்கி நான் எழுப்பாதவரை எதுவும் மாறப் போவதில்லை. அந்தக் கேள்வி என்னிடமிருந்து தோன்ற வேண்டுமானால் நான் படிக்க வேண்டும்.

பெண்கள் விஷயத்தில் நம் வீடும் நம் வீதியும் ஏன் எப்போதும் புழுதி படிந்து கிடக்கிறது என்று எத்தனையோ முறை உங்களைக் கேட்டு நச்சரித்திருக்கிறேன். அது அப்படித்தான் மகளே என்று மட்டுமே உங்களால் சொல்ல முடிகிறது. ஏன் அப்பா அப்படி என்று கேட்டால் ஒரு சொல்கூட உங்களிடமிருந்து வராது. என்னைப் படிக்க வையுங்கள் அப்பா. உங்களிடமிருந்து வெளிவராத சொற்கள் என்னிடமிருந்து புறப்பட்டு வருவதை நீங்கள் காண்பீர்கள்.

நம் சமூகத்தின் உடலில் மட்டுமல்ல உள்ளத்திலும் நோய் படர்ந்திருக்கிறது. மேல் கீழ், ஆண் பெண், உயர்வு தாழ்வு என்று அது மனிதர்களைப் பிரித்து வைத்திருக்கிறது. அந்த நோயின் வேரைக் கண்டறிந்து களைய வேண்டுமானால் நான் படிக்க வேண்டும். ஏன் என்றால் நான் ஒரு பெண். உங்கள் சரி, தவறுகள் பல நேரத்தில் என்னுடைய சரி, தவறுகளாக இருப்பதில்லை. இந்த முரண்களை நான் பேசியாக வேண்டும் என்றால் என் குரலை உயர்த்த வேண்டும். அதற்கு முன்னால் எனக்கும் குரல் ஒன்று உண்டு என்பதை நான் உறுதிசெய்ய வேண்டும். அதற்கு நான் படிக்க வேண்டும்.

உறுதியான கரங்களை, ஓங்கி ஒலிக்கும் குரலை, நடுக்கமில்லா கால்களை, சுடர்விட்டு எரியும் அறிவை, கனமான இதயத்தை நான் பெற விரும்புகிறேன். ஏன் என்றால் நான் ஒரு பெண். உங்கள் மகன்கள் அவர்களுக்கான உலகை கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். அதில் நான் அஞ்சி அஞ்சி, ஒதுங்கி ஒதுங்கி, தயங்கித் தயங்கி வாழ வேண்டியிருக்கிறது. நான் படித்தால்தான் அந்த உலகிலிருந்து விடுபட்டு இன்னோர் உலகைப் படைக்க முடியும். நான் படைக்கும் உலகம் எனக்கான உலகமாக, என்னைப் போன்ற பெண்களுக்கான உலகமாக இருக்கும்.

அந்த உலகில் என் உரிமைகளைத் தயக்கமின்றி நிலை நாட்டுவேன். எனக்கான சட்டங்களை, எனக்கான நியாயங்களை வகுத்துக்கொள்வேன். நான் உருவாக்கும் புதிய உலகில் என் குரல் அச்சமின்றி ஒலிக்கும். அந்த உலகில் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் பறவைகளும் விலங்குகளும் தாவரங்களும் அன்போடு இணைந்திருக்கும். நான் படிக்க வேண்டும். நூற்றாண்டுகாலத் தவறுகளைச் சரிசெய்ய வேண்டியிருக்கிறது. ஏன் என்றால் நான் ஒரு பெண்.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.comஓவியம்: லலிதா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x