Published : 28 Aug 2019 10:31 AM
Last Updated : 28 Aug 2019 10:31 AM

அறிவியல் மேஜிக்: அணையும் நெருப்பு; உயரும் தண்ணீர்!

மிது கார்த்தி

ஓரிடத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடிக்க உங்களால் முடியுமா? ஒரு சோதனையைச் செய்து பார்ப்போமா? (பெரியவர்களின் மேற்பார்வையில் செய்ய வேண்டும்.)

என்னென்ன தேவை?

# தட்டு
# வண்ணப் பொடி கலந்த நீர் (வண்ணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.)
# இரண்டு மெழுகுவர்த்திகள்
# கண்ணாடி டம்ளர்
# தீப்பெட்டி

எப்படிச் செய்வது?

# தட்டில் மெழுகுவர்த்தியை வைத்து திரியைப் பற்ற வையுங்கள்.
# அந்த தட்டில் வண்ணம் கலந்த நீரை ஊற்றுங்கள்.
# மெழுகுவர்த்தி எரிய ஆக்சிஜன் தேவை. அதாவது காற்று தேவை என்பதால், நீங்கள் கொளுத்திய மெழுகுவர்த்தி அழகாக எரிந்துகொண்டிருக்கும்.
# இப்போது எரிந்துக்கொண்டிருக்கும் மெழுகுவர்த்தியின் மீது கண்ணாடி டம்ளரைக் கவிழ்த்து வையுங்கள்.
# நடப்பதைக் கவனியுங்கள். மெழுகுவர்த்தி சில விநாடிகள் எரிந்து, பிறகு அணைந்துவிட்டதா?
# அதேநேரத்தில் டம்ளருக்குள் உள்ள நீரானது மேலே உயருகிறதா?
# மெழுகுவர்த்தி அணைந்ததற்கும், தண்ணீர் மேலே உயர்ந்ததற்கும் காரணம் என்ன?

காரணம்

மெழுகுவர்த்தியின் மீது கண்ணாடி டம்ளரைக் கவிழ்த்தவுடன், அந்த டம்ளரில் இருந்த ஆக்சிஜன் விரைவாக உறிஞ்சப்பட்டுவிடுகிறது. அதாவது மெழுகுவர்த்தி எரிய காற்றை உறிஞ்சிக்கொள்கிறது. உறிஞ்சப்பட்ட காற்று இருக்கும்வரை மெழுகுவர்த்தி எரிகிறது. காற்று முழுவதையும் நெருப்பு உறிஞ்சிய பிறகு மெழுகுவர்த்தி அணைந்துவிடுகிறது.

காற்று முழுமையாக உறிஞ்சப்பட்டுவிடுவதால், டம்ளருக்குள் வெற்றிடம் உருவாகிறது.
அதேநேரத்தில் டம்ளரைச் சுற்றி வெளிப்புறத்தில் காற்றழுத்தம் ஏற்படுகிறது. வெற்றிடம், காற்றழுத்தம் காரணமாகத் தட்டில் உள்ள நீர் அதிக அளவில் டம்ளருக்குள் செல்கிறது. இதனால், தண்ணீர் மேலே உயருகிறது. இதே சோதனையை இரண்டு மெழுகுவர்த்திகள், மூன்று மெழுகுவர்த்திகள் என எண்ணிக்கையை அதிகரித்து செய்து பாருங்கள்.

பயன்பாடு

ஓரிடத்தில் காற்று உறிஞ்சப்படும்போது அங்கே வெற்றிடம் ஏற்படும் என்பதையும் வெற்றிடத்தைக் காற்று அடைத்துக்கொள்ளும் என்பதையும் அறிய இந்தச் சோதனை பயன்படுகிறது. காற்றழுத்தமானி இந்தத் தத்துவத்தில்தான் செயல்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x