சூழலை நேசிக்கும் மாணவர்கள்

சூழலை நேசிக்கும் மாணவர்கள்
Updated on
1 min read

ச.ச. சிவசங்கர்

சுற்றுச்சூழல் சீர்கேடு, பருவநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் இந்த அற்புதமான பூமியை அச்சுறுத்தி வருகின்றன. சூழலியலில் அக்கறை கொண்டவர்கள் பூமியைப் பாதுகாக்கும் விதத்தில் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சொல்லி வலியுறுத்தி வருகிறார்கள். அவற்றைப் புதுச்சேரி கொம்பாக்கம் அரசுப் பள்ளி மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். பள்ளியில் தேசியப் பசுமைப்படை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பில் இருக்கும் மாணவர்கள் சுற்றுச்சூழல் குறித்து அதிக அக்கறையோடு இருக்கிறார்கள். தங்களால் இயன்ற அளவுக்குச் சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் ஒரு நடவடிக்கையாகப் பள்ளி வளாகத்தில், மழைநீர் சேகரிப்புத் தொட்டியைத் தாங்களே கட்டியிருக்கின்றனர். இதன் மூலம் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்குவதும் மழைநீர் வீணாவதும் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும்போது மழைநீர் சேமிப்பிலிருந்து தண்ணீரைப் பயன்படுத்திக்கொள்ளவும் முடியும். “தொட்டி கட்டுவதற்குக் கட்டுமானப் பொருட்களைப் புதிதாக வாங்கக் கூடாது என்று முடிவெடுத்தோம். பழைய கட்டிடங்களில் உள்ள செங்கற்களைக்கொண்டு மழைநீர் சேகரிப்புத் தொட்டியைக் கட்டினோம். ஏற்கெனவே பயன்படுத்திய செங்கற்களைப் பயன்படுத்தியதன் மூலம் மறுசுழற்சி முறையை அறிந்துகொண்டோம். சிக்கன வாழ்க்கையையும் புரிந்துகொண்டோம். மாணவர்கள் சேர்ந்து ஒரு தொட்டியைக் கட்டியதில் எங்கள் எல்லோருக்கும் மனநிறைவாக இருக்கிறது” என்கிறார் மாணவி நிவேதா.

”பள்ளி வளாகத்தைப் பசுமையாக வைத்துக்கொள்வதற்காக மூலிகைத் தோட்டம் அமைத்திருக்கிறோம். இந்தச் செடிகளுக்கான இயற்கை உரத்தை நாங்களே தயாரிக்கிறோம். குழி அமைத்து அதில் இலைகள், குப்பைகள் போன்ற மட்கும் பொருட்களைப் போட்டுத் தயாரிக்கப்படும் உரத்தைத் தோட்டத்துக்குப் பயன்படுத்துகிறோம். சிறு நாற்றுப் பண்ணை மூலம் மரக்கன்றுகளை உற்பத்தி செய்கிறோம்.

இந்த மரக்கன்றுகளைச் சுற்றுச்சூழலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு வழங்கிவருகிறோம்” என்கிறார் மாணவர் சந்தோஷ். சுற்றுச்சூழல் குறித்து மாணவப் பருவத்திலேயே தெரிந்துகொள்வதன் மூலம் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மாணவர்கள் இதுபோல் தொடர்ந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகச் சொல்கிறார் ஆசிரியர் பூங்குன்றன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in