

ஆதி
கதிரவன் மறைந்துவிட்டால் ஒரு தாவரத்தில் உள்ள மலரையோ, காயையோ, கனியையோ பறிக்கக் கூடாது என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கலாம். தாவரங்களுக்கும் உயிர் உண்டு, அவை இரவில் உறங்கும் என்ற மரபான நம்பிக்கையின் தொடர்ச்சி அது. இது அறிவியல் பூர்வமற்ற ஒரு கருத்து போலத் தோன்றலாம். ஆனால், அறிவியலாளர் ஜெகதீச சந்திரபோஸ், தாவரங்களுக்கு உணர்வு உண்டு என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளார்.
இப்படித் தாவரங்களை அறிவியல் பின்புலத்தோடு நோக்கியது நம் தமிழ்ப் பண்பாடு. தாவரங்களே தமிழ்ப் பண்பாட்டின் மையமாக இருந்தன. தமிழர்களின் மிகப் பெரிய விழாவான பொங்கல், கால்நடைகளோடு தாவரங் களையும் போற்றுவதற்காக உருவானதே.
அதேபோல நம் வீடுகளில் எந்த நல்ல நிகழ்வு என்றாலும், அதில் இடம்பெறும் சடங்குகளில் தாவரங்கள் முக்கியத்துவம் பெற்றிருப்பதை நேரடியாகப் பார்க்கலாம். சடங்குகளில் தாவரங்கள் இடம்பெற்றதற்கான அடிப்படைக் காரணத்தை இன்று நாம் மறந்து போயிருக்கலாம். தொடக்கத்தில் ஒரு காரணத்துடனேயே அவை இடம்பெற்றிருக்க வேண்டும்.
தாவரங்களின் முக்கியத்துவத்தை பண்டைத் தமிழர்கள் முற்றிலும் உணர்ந்திருந்தார்கள். தமிழர்களின் பண்பாட்டிலும் சமூக வாழ்க்கையிலும் தாவரங்கள் பிரிக்க முடியாதவையாகவும் வழிபடக்கூடியவையாகவும் இருந்தன. அத்துடன், தாவர உணவு வகைகள் பண்பாட்டு அடையாளங்களாகவும் திகழ்ந்தன.
ஐந்திணைகளும் முக்கியத் தாவரங்களும்
முதல் கொள்கை
இந்தப் பின்னணியில்தான் ஐந்திணைக் கொள்கை தமிழர்களின் சிந்தனையில் உதித்திருந்தது. இதுவே உலகின் முதலாவது, அறிவியல் அடிப்படையில் அமைந்த சூழல்தொகுப்பு (ecosystem), நிலத்தோற்ற (Landscape) வகைப்பாடு. தமிழர்களின் ஐந்திணைக் கொள்கை வலுவான பண்பாட்டுப் பின்னணியைக்கொண்டது.
திணைகளுக்கு முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் போன்ற கூறுகளைத் தெளிவாகச் சுட்டிக்காட்டி, பண்பாட்டு வாழ்க்கை யுடன் அது பிணைக்கப்பட்டிருந்தது. உலகில் வேறு எந்தப் பண்பாட்டிலும் இவ்வளவு வரலாற்றுத் தொன்மையுடனும் இவ்வளவு திட்டவட்டமான பகுப்பு களுடனும் அமைந்த கொள்கை இல்லை.
திணைப் பெயர்கள்
ஐந்திணைக் கொள்கையில் தாவரங்களுக்குத் தனி முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு திணையிலும் காணப்படும் முக்கியத் தாவரத்தின் அடிப்படையிலேயே திணைப் (சூழல்தொகுப்பு) பெயர்களும் அமைக்கப்பட்டிருந்தன: குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை. அத்துடன் ஒவ்வொரு திணைக்கும் உரிய தனித்தன்மை கொண்ட தாவரங்களும் திணைப் பகுப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.
நவீனத் தாவரவியல் வகைப்பாட்டுக்கு ஐந்திணைக் கொள்கை முன்னோடியாகத் திகழ்கிறது. அத்துடன் சூழலியல் /சூழல்தொகுதி சிதைவது-சீர்கேடு அடைவதைப் பற்றி முதன்முதலில் எடுத்துக்காட்டியதும் தமிழ் இலக்கியமே.
‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து பாலை என்பதோர் படிவம் கொள்ளும்’
- என்கிறது சிலப்பதிகாரம்
எப்போது காக்கப் போகிறோம்?
உலகில் அடிப்படை உணவு உற்பத்தியாளர்கள் தாவரங்களே. தாவரங்கள் இல்லையென்றால் மனிதர்கள் மட்டுமின்றி உலகில் வேறு எந்த உயிரினமும் வாழ முடியாது. இந்த அறிவியல் உண்மையை பண்டைத் தமிழர்கள் உணர்ந்திருந்தார்கள்.
உணவு, உடை, உறைவிடம் போன்ற தேவைகளுக்குத் தாவரங்களே அடிப்படை என்பதை அறிந்திருந்தார்கள். ஒவ்வொரு தாவரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றின் வளம் குறைந்துவிடாத வகையில் பயன்படுத்தினார்கள். தாவரங்களைப் பண்பாட்டு அடையாளமாகப் போற்றியதுடன், பாதுகாத்தபடியே பயன்படுத்தவும் செய்தார்கள்.
அன்றைய சமூகமும் தனிமனிதர்களும் தாவரங்களுடன் இயைந்து வாழ்ந்தார்கள். ஆனால், இன்றைக்கு தாவரங்களிடமிருந்து நாம் பெரிதும் விலகி வாழ்கிறோம். தாவரங்களின் முக்கியத்துவத்தை உணராமல், தவறான வகையில் பயன்படுத்துகிறோம் அல்லது அழிக்கிறோம். இன்றைக்குச் சூழலியலையும் அதன் அடிப்படை அம்சமான தாவரங்களையும் பாதுகாப்பதில் நாம் பெரிதும் பின்தங்கி இருக்கிறோம். தாவரங்கள் இன்றி வாழ்க்கை இல்லை என்பது, உலகில் உள்ள அனைவருக்கும் ஒருநாள் புரியும்.
முல்லை
தாவரங்கள்: வேங்கை, அவரை, பீர்க்கம்
உணவுத் தாவரங்கள்: தினை, சாமை, வரகு
மலர்கள்: முல்லை, கொன்றை, பிச்சி,
காந்தள்
குறிஞ்சி
தாவரங்கள்: பலா, மூங்கில், அகில், சந்தனம், மா
உணவுத் தாவரங்கள்: தினை, மலைநெல், கரும்பு, பழு மிளகு
மலர்கள்: குறிஞ்சி, காந்தள், வேங்கை
பாலை
மரங்கள்: இலுப்பை, வேம்பு, காட்டு மல்லிகை, பாதிரி
மலர்கள்: பாலை, மராம்பு, கள்ளி
நெய்தல்
தாவரங்கள்: கண்டல், புன்னை, ஞாழல், காவி
மலர்கள்: நெய்தல், தாழை, கடம்பு
மருதம்
தாவரங்கள்: மருதம், மா, மூங்கில், வேம்பு, வஞ்சி
உணவுத் தாவரங்கள்: நெல், தென்னை, வாழை, கரும்பு, பலா மலர்கள்: தாமரை, குவளை, ஆம்பல்
இந்த வாரம்:
ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில், ‘வாழிய நிலனே’ என்ற இயலின்கீழ் ‘பழந்தமிழர் சமூக வாழ்க்கை’ என்ற உரைநடை உலகம், ‘பொருளிலக்கணம்‘ என்ற ‘கற்கண்டு‘ பகுதி.
நன்றி: பேராசிரியர் கு.வி. கிருஷ்ணமூர்த்தியின் 'தமிழரும் தாவரமும்' நூல்
கட்டுரையாளர்
தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in