Published : 21 Aug 2019 09:41 AM
Last Updated : 21 Aug 2019 09:41 AM

திறந்திடு சீஸேம் 47: அரேனி-1 அதிசயங்கள்!

முகில்

ஐரோப்பியக் கண்டமும் ஆசியக் கண்டமும் இணையும் பகுதியில் அமைந்த நாடு ஆர்மீனியா. அங்கே வயோட்ஸ் ஜோர் (Vayotz Dzor) மாகாணத்தில் அரேனி கிராமத்தை ஒட்டி, சில குகைகள் அமைந்துள்ளன. அதில் ‘அரேனி-1’ என்று பெயரிடப்பட்ட குகையில் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டன. அங்கே கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்கள் ஒவ்வொன்றுமே மனிதகுல வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும் பொக்கிஷங்கள்.

2007-ல் ஆர்மீனியா அயர்லாந்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வுக் குழுவினர், பறவையின் கண் வடிவத்தில் அமைந்த அந்தக் குகையில் தம் ஆராய்ச்சியைத் தொடங்கினர். அங்கே செப்புக்காலத்தைச் சேர்ந்த (கி.மு. 5000 – கி.மு. 4000 காலகட்டம்) சவக்குழிகள் இருப்பதைக் கண்டுகொண்டார்கள். சவக்குழிகள் என்றால் களிமண்ணால் செய்யப்பட்ட பெரிய பானைகள். இறந்தவர்களின் உடல்களைப் பானைகளுக்குள் இட்டுப் புதைக்கும் பழக்கம் ஆதி ஆர்மீனியர்களிடம் இருந்திருக்கிறது. பானைகளுக்குள் சிறுவர், சிறுமியரின் எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

ஒரு பானையில் சிறுவனின் மண்டை ஓடு கிடைத்தது. அதற்குள்ளிருந்து மூளைத்திசு எடுக்கப்பட்டது. சுமார் 7,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, அதாவது புதிய கற்காலத்தில் (Neolithic) வாழ்ந்த ஒரு மனிதனின் மூளைப் பகுதியானது, இப்போது சிதைவின்றிக் கண்டெடுக்கப்பட்டது என்பது பேரதிசயம்! எகிப்தியர்கள் பாணியில் ‘மம்மி’ ஆக்கப்பட்ட ஆடு ஒன்றும் அரேனி-1 குகையில் தோண்டி எடுக்கப்பட்டது. சுமார் 5,900 ஆண்டுகளுக்கு முன்பு, ஆர்மீனியர்கள் ஆடு ஒன்றை முழுதாகப் ‘பதப்படுத்தி’ புதைத்திருக்கிறார்கள். அது அவர்களது மதச்சடங்காக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆர்மீனியாவின் இந்த ‘மம்மி ஆடு’, எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட எந்த ஒரு ‘மம்மி விலங்கை’க் காட்டிலும் பழமையானது என்று நம்பப்படுகிறது.

2010-ல் ஆய்வாளர்கள் அரேனி-1 குகையில் செப்புக்காலத்தைச் சேர்ந்த தோல் ஷூ ஒன்றைக் கண்டெடுத்தனர். அது, பெரிய துண்டு மாட்டுத்தோலினால் செய்யப்பட்டது. இறுக்கமாகக் கட்டுவதற்கு ஏற்ப கயிறு கொண்ட வலது கால் ஷூ. காலின் அளவுக்கு ஏற்ப தோலை வெட்டி, மடித்து ஷூவைத் தைத்துள்ளார்கள். ஷூவுக்குரிய வடிவம் கிடைக்க உள்ளே வைக்கோலைத் திணித்துள்ளார்கள்.

ரேடியோ கார்பன் வயதுப்படி சுமார் 5,500 வருடங்களுக்கு முன்பு கைகளால் தைக்கப்பட்ட அந்தப் பழம்பெரும் ஷூவுக்கும், இன்றைய அதிநவீன ஷூக்களின் வடிவத்துக்கும் பெரிய மாறுதல் இல்லை என்பது ஆச்சரியமான விஷயம். இத்தனை ஆண்டுகளாகியும் இந்தத் தோல் ஷூ மட்கிப் போகாமல் இருந்ததற்கான காரணம், ஆட்டின் சாணம் கொண்டு கெட்டியாக உருவாக்கப்பட்ட தளத்தினுள் அது புதைத்து வைக்கப்பட்டிருந்தது.

எனவே, இத்தனை ஆயிரம் ஆண்டுகளானாலும் குகையின் தட்பவெப்ப நிலை மாறுதல்கள் ஷூவைப் பாதிக்கவில்லை. உலகில் கண்டெடுக்கப்பட்ட ‘பழமையான தோல் ஷூ’ இதுவே!
இதைவிடப் பழைய காலணி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. அது அரேனி-1 குகையில் அல்ல. அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில். அங்கே ஃபோர்ட் ராக் பள்ளத்தாக்குப் பகுதியில் 1938-ல் சில ஜோடி செருப்புகளும், சில ஒற்றைச் செருப்புகளும் கண்டெடுக்கப்பட்டன. அவை 7,500 ஆண்டுகளுக்கு முன்பாக வெடித்த ஓர் எரிமலையின் குழம்புப் படிமத்துக்குக் கீழ் பாதுகாப்பாக இருந்தன.

அவை அனைத்துமே ஒருவகைக் காட்டுப்புல்லால் நெய்யப்பட்ட செருப்புகள். கார்பன் வயதுக் கணக்கின்படி அந்த ஜோடி செருப்பின் வயது 10,000 ஆண்டுகளாக இருக்கலாம் என்கிறார்கள். ஆம், அப்போதே ஆதி மனிதன் காலிலிருந்து கழன்று போகாமல் இருக்க பட்டை (Strap) வைத்து செருப்பு அணிந்திருக்கிறான் என்பது ஆச்சரியமானது. உலகில் கண்டெடுக்கப்பட்ட பழமையான இந்தச் செருப்புகளுக்கு ‘ஃபோர்டு ராக் செருப்புகள்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
சரி, அரேனி-1 குகைக்குத் திரும்புவோம். திராட்சை, உலகின் பழமையான பழங்களில் ஒன்று. கி.மு. 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் திராட்சை விவசாயம் செய்ய ஆரம்பித்துவிட்டான் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

மத்திய கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள், குறிப்பாக ஆர்மீனியர்கள் கி.மு. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செழிப்பாக திராட்சை விவசாயம் செய்திருக்கிறார்கள். திராட்சை ரசத்தை விரும்பிப் பருகியிருக்கிறார்கள். அதாவது பெரிய மண் குடுவைகளில் திராட்சைகளை நிரப்பி, அவற்றை மண்ணுக்குள் புதைத்து நொதிக்க வைத்து திராட்சை ரசம் தயாரித்திருக்கிறார்கள். தங்களது கடவுள்களுக்கும் படைத்திருக்கிறார்கள்.

அரேனி-1 குகையில் நடந்த அகழ்வாராய்ச்சியில் வரிசையாகப் பல மண் குடுவைகள் புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அந்தக் குடுவைகளில் திராட்சையில் உள்ள டார்டாரிக் அமிலம் படிந்துள்ளதைக் கண்டறிந்தார்கள். அரேனி-1 குகைதான் உலகின் பழமையான திராட்சை ரசத் தயாரிப்புக்கூடமாக அறியப்படுகிறது.

அரேனி-1 குகையில் அடுத்த அற்புதமான கண்டுபிடிப்பு 2011-ன் இறுதியில் நிகழ்ந்தது. இந்த முறை ஆடை ஒன்றின் பகுதியைக் கண்டுபிடித்தார்கள். பாவாடை போன்ற உடை. ஆணுக்கானதா, பெண்ணுக்கானதா, இல்லை இருவருமே அணிந்த பொதுவான உடையா என்று இனம்காண இயலவில்லை.

அந்த உடை கி.மு. 3,900 காலத்தைச் சேர்ந்ததாக, அதாவது சுமார் 5,900 ஆண்டுகள் பழமையானது என்று கண்டறிந்தார்கள். நாணல் போன்ற புல்லால் இறுக்கமாக அது நெய்யப்பட்டிருந்தது. அழகாக வண்ணம் தீட்டப்பட்டிருந்ததற்கான சுவடுகளும் உடையில் தென்பட்டன. இதுவும் அதிகம் சிதைந்து போகாமல் பாதுகாப்பாகவே கண்டெடுக்கப்பட்டது.

உலகில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட மனிதனின் ஆதி உடைகளில் இதுவும் ஒன்று. ஆர்மீனியாவின் மிகப் பழமையான உடை இதுவே. அரேனி-1 குகையிலிருந்து எடுக்கப்பட்ட ஷூ, திராட்சை ரசப் பானைகள், உடை, மண்டை ஓடுகள், மூளையின் திசு, ஆட்டு மம்மி போன்றவை ஆர்மீனியாவின் வரலாற்று அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. அரேனி-1 குகையில் மேலும் சில அதிசயப் பழம்பொருட்கள் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அகழ்வாராய்ச்சியாளர்கள் தங்கள் தேடுதல் பணியைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mugil.siva@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x