Published : 21 Aug 2019 09:40 AM
Last Updated : 21 Aug 2019 09:40 AM

டிங்குவிடம் கேளுங்கள்: பூமியைச் சுற்றும் செயற்கைக்கோள்கள் எங்கே?

சமீபத்தில் சந்திரயான் விண்கலம் பூமியின் படத்தை எடுத்து அனுப்பியிருந்தது. பூமியைச் சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் அந்தப் படத்தில் தெரியவில்லையே, ஏன் டிங்கு?

- ச. நிஷா, 6-ம் வகுப்பு, ஏ.ஜி.என். மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, அப்புத்தோட்டம், சேலம்.

சுவாரசியமான கேள்வி. செயற்கைக்கோள்கள், விண்வெளிக் கழிவுகள் மட்டுமின்றி, இயற்கையான வான் பொருட்களும் பூமியைச் சுற்றி வருகின்றன. பூமி மிக மிகப் பெரியது என்பது உங்களுக்கே தெரியும். அத்தகைய பூமியே ஒரு பந்து அளவுக்குதான் படத்தில் தெரிகிறது. பூமியுடன் ஒப்பிடும்போது செயற்கைக்கோள்கள் மிக மிகச் சிறியவை. அதாவது கண்ணுக்கே தெரியாத தூசு போன்றவை. அதனால்தான் அவை எல்லாம் படத்தில் தெரிவதில்லை, நிஷா.

உங்கள் வீட்டைப் படம் எடுக்கும்போது, கொசு பறந்து சென்றால், அது அந்தப் படத்தில் தெரியாது. ஏனென்றால் வீட்டைவிடக் கொசு மிக மிகச் சிறியது. அதேபோலதான் பூமியைச் சுற்றிவரும் செயற்கைக்கோள்களும் கழிவுகளும் படத்தில் தென்படுவதில்லை. ஒருவேளை செயற்கைக்கோள்களும் 10 செ.மீ.க்கும் குறைவான நீளத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான கழிவுப் பொருட்களும் கண்களுக்குப் புலப்படுமானால், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா வெளியிட்டுள்ள இந்தப் படத்தில் இருப்பதுபோல் காணப்படும்.

பில்லி சூனியம் உண்மையா, டிங்கு?

– சரவண நாகராஜன், வீராணி, குமரி.

யாருக்கும் தீங்கு நினைக்காமல் இருப்பதுதான் சிறந்த குணம். ஒருவருக்குப் பில்லி சூனியத்தால் கெடுதல் செய்ய முடியும் என்றால், இந்த உலகத்தை அழிக்க அது ஒன்று மட்டுமே போதாதா? இது மூடநம்பிக்கை. இது போன்றவற்றில் எல்லாம் இந்தக் காலத்திலும் நம்பிக்கை வைத்து, ஏமாறக் கூடாது, சரவண நாகராஜன்.

சூயிங்கத்தைக் கண்டுபிடித்தவர் யார், டிங்கு?

– ஜி.கே. பால ஷண்முகேஷ், 8-ம் வகுப்பு, ஆதர்ஷ் வித்ய கேந்திரா, நாகர்கோவில்.

சூயிங்கத்தை இவர்தான் கண்டுபிடித்தார் என்று எளிதில் சொல்லிவிட முடியாத கேள்வி இது. சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதிய கற்காலத்திலேயே மனிதர்கள் சூயிங்கம் போன்ற பொருளைப் பயன்படுத்தியதற்கான ஆதாரம் ஃபின்லாந்தில் கிடைத்திருக்கிறது. மாயன், அஸ்டெக் இனி மக்களும் மரப்பிசினைப் பயன்படுத்தி சூயிங்கம் போன்ற ஒரு பொருளை உருவாக்கி, மென்று இருக்கிறார்கள்.

பற்களைச் சுத்தம் செய்வதற்கும் வாயிலிருந்து துர்நாற்றம் வராமல் இருப்பதற்கும் இந்தச் சூயிங்கத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். கிரேக்கர்களும் மரத்திலிருந்து கிடைக்கும் பிசினைக் கொண்டு, சூயிங்கம் போன்ற பொருளை, பற்களின் நலத்துக்காகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

பூர்வகுடி அமெரிக்கர்களிடமிருந்து கற்றுக்கொண்டு, சில விஷயங்களில் மாற்றம் செய்து நவீன சூயிங்கத்தை 1848-ம் ஆண்டு ஜான் பி. கர்டிஸ் உருவாக்கினார். 1850-ம் ஆண்டு பாரஃபின் மெழுகைக் கொண்டு சூயிங்கம் தயாரிக்கப்பட்டு, பிரபலமானது. நறுமணத்துடன் கூடிய சூயிங்கத்தை, 1860-ம் ஆண்டு ஜான் கோல்கன் முதன்முதலில் உருவாக்கினார். இனிப்புச் சுவையுடைய சூயிங்கத்தைத் தயாரித்து, 1869-ம் ஆண்டு வில்லியம் செம்பிள் முதல் முறை காப்புரிமைப் பெற்றார்.

1884-ம் ஆண்டு ப்ளாக் ஜாக் என்பவர் இனிப்பும் குளிர்ச்சித் தன்மையும் கொண்ட அதிமதுரத்தை வைத்து சூயிங்கத்தை உருவாக்கினார். 1899-ம் ஆண்டு ரிக்ளே’ஸ் ஸ்பியர்மின்ட் கம் வெகு வேகமாகப் பிரபலமானது. இன்றுவரை பயன்பாட்டில் இருந்துவருகிறது. 1960-ம் ஆண்டு சிந்தடிக் ரப்பரைப் பயன்படுத்தி சூயிங்கம் தயாரிக்கப்பட்டது. இது செலவு குறைவு என்பதால் பலரும் இந்த நுட்பத்தில் சூயிங்கத்தைத் தயாரித்து வருகின்றனர், பால ஷண்முகேஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x