இப்படிக்கு மழை
வீட்டில் அம்மா, அப்பா புத்தகத்தை எடுத்துப் படி என்று சொன்னாலே உங்களை மாதிரிக் குட்டிப் பசங்களுக்கு எரிச்சல் வரும் இல்லையா? ஆனால், திருப்பூரைச் சேர்ந்த 13 வயது மாணவி கனல்மதி பாடப் புத்தங்களை மட்டுமல்ல, கவிதைப் புத்தகங்களையும் ஆசை ஆசையாகப் படிக்கிறார். எட்டாம் வகுப்பு படிக்கும் அவர் இந்தச் சின்ன வயதிலேயே கவிதைத் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டு ஆச்சரியத்தையும் அள்ளியுள்ளார்.
கனல்மதி எழுதியுள்ள கவிதைத் தொகுப்பின் பெயர் என்ன தெரியுமா? ‘இப்படிக்கு மழை’. பெயரே வித்தியாசமாக இருக்கிறது இல்லையா? அவருடைய கவிதைத் தொகுப்பும் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. அண்மையில் கனல்மதி கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட கவிஞர்கள் கனல்மதியின் கவிதைத் தொகுப்பைப் படித்துவிட்டு அவருடைய எழுத்து மழைக்கு பாராட்டு மழையைப் பொழிந்து விட்டுப் போனார்கள்.
நூல் அறிமுகக் கூட்டங்கள் எங்கு நடந்தாலும் கனல்மதியை அங்குப் பார்க்கலாம். சின்ன வயதிலேயே கனல்மதி எப்படி எழுதக் கற்றுக்கொண்டார்? “அம்மா பேரு சிவகாமி. அரசுப்பள்ளி டீச்சர். தமிழ்நாடு அறிவியல் மன்றத்தோட மாநில அமைப்பாளர். அப்பா பேரு முகில்ராசு. நான் படிச்சது எல்லாமே அரசுப்பள்ளிதான். இப்போ பத்மாவதிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கிறேன். அரசு பள்ளியில தமிழ் மீடியம் படிச்சதாலதான் எனக்குச் சிந்தனைத் திறனை வளர்ந்துச்சி.
எட்டாம் வகுப்பு படிக்கிறப்ப மழை பற்றி நிறைய கவிதைகளை வீட்டில் எழுதிட்டு வந்தேன். ஒரு நாள் எங்க அம்மா என்னோட கவிதைகளை வாங்கிப் படிச்சாங்க. என்னோட முழு கவிதைகளையும் படிச்சிட்டு எங்கம்மா ரொம்ப பாராட்டினாங்க.
அப்புறம் பேராசிரியர் சரஸ்வதி, கொளத்தூர் மணி, அறிவுமதி, ஓசை காளிதாஸ், பாமரன், திருப்பூர் மாநகரக் காவல் துணை ஆணையர் இரா.திருநாவுக்கரசுன்னு நிறைய பேர் படிச்சிட்டுப் பாராட்டினாங்க. என்னோட கவிதைத் தொகுப்பைப் பாராட்டி காங்கேயம், வெள்ளகோவில், அவிநாசின்னு நிறைய ஊர்ல பாராட்டு விழா எடுக்கிறாங்க. இது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு” என்று பெருமையோடு கூறுகிறார் கனல்மதி.
கவிதைத் தொகுப்புக்கு நிறைய பாராட்டு கிடைத்திருப்பதால், தொடர்ந்து நிறைய எழுதக் கனல்மதிக்கு வீட்டிலும் அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.
கவிதை எழுதும் பெண்ணுக்கு வாழ்த்துகள் சொல்வோமா?
