Published : 14 Aug 2019 12:53 PM
Last Updated : 14 Aug 2019 12:53 PM

கதை: ராஜாவைச் சிறை மீட்ட அஞ்சுகம்

கீர்த்தி

பனைமரக் காட்டில் வசிக்கும் அஞ்சுகம் கிளி, ஊருக்குள் பறந்து வந்தது. வேப்பமரத்தைக் கடந்தபோது, மரத்தடியில் கண்ட காட்சி அஞ்சுகத்தைத் திடுக்கிடச் செய்தது.
ஒரு மனிதர் அமர்ந்திருந்தார். அவரது அருகே கூண்டில் கிளி ஒன்று அடைபட்டுக் கிடந்தது.
‘ஐயோ, பறவைகள் சுதந்திரமாகப் பறக்க வேண்டியவை அல்லவா? இந்த மனிதர் ஏன் கிளியைக் கூண்டில் அடைத்து வைத்திருக்கிறார்?' என்று வருந்தியது அஞ்சுகம்.
அது மெதுவாக வேப்பமரத்தின் உச்சிக் கிளையில் அமர்ந்து, என்ன நடக்கிறது என்று பார்த்தது.
ஒரு மனிதர் வந்தார். மரத்தடி மனிதர் கிளி இருந்த கூண்டைத் திறந்தார். “ராஜா வா. ஐயா பேருக்கு ஒரு நல்ல சீட்டை எடுத்துக் குடு" என்றார். ராஜா கிளி ஓர் அட்டையை அலகால் கவ்வி, அந்த மனிதரிடம் கொடுத்துவிட்டு மீண்டும் கூண்டுக்குள் சென்றது.

உடனே கூண்டை அடைத்துவிட்டார். கிளி எடுத்துத் தந்த அட்டையிலிருந்து படித்துக் காட்டினார். பிறகு அந்த மனிதரிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டார். இவ்வாறே மேலும் சிலர் மரத்தடி மனிதரிடம் வந்தனர். அவர்களிடம் கிளி கொடுத்த அட்டையைப் படித்துக் காட்டி, பணத்தைப் பெற்றுக்கொண்டார்.
‘இது என்ன அநியாயம்? அந்த மனிதர் பிழைப்பு நடத்த கிளியைக் கூண்டுக்குள் அடைத்து வைத்திருக்கிறாரே? ராஜா என்று பெயர் வைத்துவிட்டு, கிளியை அடிமையாக நடத்துகிறாரே? அந்த ராஜா கிளியை எப்படியாவது சிறையிலிருந்து காப்பாற்ற வேண்டும்’ என்று நினைத்தது அஞ்சுகம் கிளி.
சிறிது நேரத்தில் அந்த மரத்தடி மனிதர் தான் கொண்டு வந்திருந்த உணவை உண்டுவிட்டு, தன் தோளிலிருந்த துண்டை விரித்து, தூங்கினார்.
இதுதான் சரியான நேரம் என்று நினைத்த அஞ்சுகம் கிளி, மெதுவாக மரத்தடிக்கு இறங்கிவந்தது. அது ராஜா கிளியை அழைத்து, தன்னை அஞ்சுகம் என்று அறிமுகப்படுத்திக்கொண்டது. “நீ எப்படிக் கூண்டுக்குள் அடைபட்டாய்?” என்று கேட்டது.

ராஜா கிளி தான் கூண்டில் அடைபட்ட கதை முழுவதையும் அஞ்சுகத்திடம் சொன்னது.
“என்ன இது? காட்டில் சுதந்திரமாகப் பறந்து பழங்களையும் கொட்டைகளையும் தின்று வாழ வேண்டிய நீ சிறிதளவு நெல்மணிகளுக்காக இப்படி அடிமையாகக் கிடக்கிறாயே! இப்போது நான் உன் கூண்டைத் திறந்துவிடுகிறேன். நீ பறந்துவிடு” என்றது அஞ்சுகம் கிளி.

“தோழியே, என்னால் வெகுதூரம் பறக்க முடியாது. என் இறக்கையை எஜமானர் வெட்டி வைத்திருக்கிறார். இறக்கை வளர வளர வாலை வெட்டி விடுவார். கூடவே, என் எஜமானர் என்னை வைத்துதான் பல ஆண்டுகளாகப் பிழைப்பு நடத்துகிறார். நான் பறந்து போய்விட்டால் அவரும் அவரது குடும்பத்தாரும் எப்படி வாழ்வார்கள்?” என்றது ராஜா கிளி.
சிறிது நேரம் யோசித்த அஞ்சுகம், “ராஜா, நீ உன் எஜமானரைப் பற்றிக் கவலைப்படாதே. எப்படியாவது இந்த மரத்தின் மேலே ஏறிவிடு. எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றது.
அஞ்சுகம் சொன்னது போலவே ராஜா கிளி மெதுவாகப் பறந்து வேப்பமரத்தின் அடர்ந்த இலைகளுக்குள் ஒளிந்துகொண்டது.

சிறிது நேரத்தில் மரத்தடியில் தூங்கிக்கொண்டிருந்த அந்த மனிதர் கண்விழித்தார். கிளிக்கூண்டு திறந்திருப்பதைப் பார்த்தார். உள்ளே கிளியைக் காணாமல் அதிர்ச்சியானார்.
அந்த நேரத்தில் அஞ்சுகம் கிளி “கீ கீ கீ” என்று சத்தமிட்டபடியே வானில் பறந்து போனது.
அதைப் பார்த்த அந்த மரத்தடி மனிதர், தன் ராஜா கிளிதான் பறந்து போகிறது என்று நினைத்துக்கெரண்டார்.
“ஐயோ... என் கிளி பறந்து போய்விட்டதே” என்று கத்தினார்.
நடப்பதை எல்லாம் ராஜா கிளி கவனித்துக்கொண்டிருந்தது. தன் கிளி பறந்து போய்விட்டது என்று நினைத்த அந்த மனிதர், காலிக் கூண்டை மட்டும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
அஞ்சுகம் கிளி, தினமும் ராஜா கிளிக்குப் பழங்களும் கெரட்டைகளும் கொண்டு வந்து தின்னக் கொடுத்தது. சில நாட்களில் ராஜா கிளிக்கு இறக்கை வளர்ந்தது. அது அஞ்சுகம் கிளியுடன் பனங்காட்டுக்குள் பறந்து போனது.
ராஜா கிளிக்குச் சுதந்திரமான வாழ்க்கை கிடைத்துவிட்டாலும், தன் எஜமானர் இனி எப்படி வாழ்க்கை நடத்துவார் என்று அஞ்சுகத்திடம் வருத்தப்பட்டது.

“ராஜா, உன் எஜமானர் கிளி ஜோசியம் என்ற பெயரில் மூடப்பழக்கத்தை மக்களிடம் புகுத்திக் கொண்டிருக்கிறார். நீ எடுத்துக் கொடுக்கும் அட்டையில் மனிதர்களின் எதிர்காலம் தெரிந்துவிடுமா? அப்படித் தெரிந்தால், உன் எஜமானர் ஏன் தனக்கென்று ஒரு அட்டையைப் படித்து, அதன்படி நடந்து தன் வாழ்க்கையை இன்னும் வளமாக்கிக்கொள்ளக் கூடாது?” என்று கேட்டது அஞ்சுகம்.
ராஜா கிளியால் பதில் சொல்ல முடியவில்லை.
“ராஜா, உன் எஜமானரைப் பற்றிக் நீ கவலைப்படாதே. என்னுடன் வா. அவரைப் பார்த்துவிட்டு வரலாம்” என்று அதே வேப்பமரத்துக்குப் பறந்து வந்தது.
“அதோ உன் எஜமானர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று பார்.”
கீழே பார்த்த ராஜா கிளிக்கு ஆச்சரியமாக இருந்தது. அதன் எஜமானர், துணிகளை விரித்துக் காய்கறிகள் விற்றுக்கொண்டிருந்தார்.
“பார்த்தாயா? இப்போது உன் எஜமானர் உழைக்கக் கற்றுக்கொண்டார். சீக்கிரமே அவர் நல்ல நிலைக்கு வந்துவிடுவார். உழைக்கத் தயாராக இருந்தால் எவரும் வாழ்க்கையில் வருந்தத் தேவையில்லை. வேறு யாரையும் நம்பியிருக்கத் தேவையும் இல்லை!” என்றது அஞ்சுகம் கிளி.
“ஆமாம், நீ சொல்வது உண்மைதான்” என்றபடி அஞ்சுகம் கிளியுடன் மகிழ்ச்சியாகப் பறந்து போனது ராஜா கிளி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x