Published : 14 Aug 2019 12:12 PM
Last Updated : 14 Aug 2019 12:12 PM

பள்ளி உலா

ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,
நங்கநல்லூர், சென்னை.

1980-ம் ஆண்டு நேரு அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து பிரிந்து, 1989-ம் ஆண்டு அரசு பெண்கள் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. 1995-ம் ஆண்டு ஜெயகோபால் கரோடியா நன்கொடையாகப் பள்ளிக் கட்டிடங்களைக் கட்டிக் கொடுத்ததால், அவரது பெயரில் ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியாக இயங்கி வருகிறது.
1989-ம் ஆண்டிலிருந்து 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 97% தேர்ச்சியைப் பெற்று வருகிறது. 2017-ம் ஆண்டு சதுரங்கப் போட்டியில் மண்டல அளவிலும், கடந்த ஆண்டு எறிபந்து, குண்டு எறிதல் போட்டிகளில் மாவட்ட அளவில் 2-ம் இடத்தையும் 2 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்று, பள்ளிக்குப் பெருமை தேடித் தந்திருக்கிறார்கள் இந்தப் பள்ளி மாணவியர்.

தற்போது மண்டலப் போட்டி மையமாகத் தேர்வு செய்யப்பட்டு, உடற்கல்வி ஆசிரியர்களால் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. 2014, 2016-ம் ஆண்டுகளில் அறிவியல் துறையில் ‘இன்பையர் அவார்ட்’ பெற்று பெருமை சேர்த்திருக்கிறார்கள் இந்தப் பள்ளி மாணவியர்.
ஸ்மார்ட் வகுப்பறைகள், ஹைடெக் ஆய்வகம், டேப், ஸ்டெம் வகுப்புகள், யோகா பயிற்சி போன்றவை சிறந்த ஆசிரியர்கள் மூலம் பயிற்சியளிக்கப்படுகின்றன.

நேரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,
நங்கநல்லூர், சென்னை.

1964-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இருபாலர் பள்ளியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர். மாணவர்களின் அதிக எண்ணிக்கை காரணமாக, 1980-ம் ஆண்டு ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனிப் பள்ளிகளாகப் பிரிக்கப்பட்டது.
இந்தப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்தவர்களாகத் திகழ்கிறார்கள். நீதியரசர் மகாதேவன், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மீனாட்சி சுதந்தரம், இந்தியப் பொருளாதாரப் புலனாய்வுத்துறை இயக்குநர் சந்திரசேகர் ஆகியோர் இந்தப் பள்ளியின் பெருமைக்குரிய முன்னாள் மாணவர்கள்.
பரந்த விளையாட்டு மைதானம், ஸ்மார்ட் வகுப்பறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்றவை முன்னாள் மாணவர்களால் இங்கே ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பொதுத் தேர்வுகளிலும் தனித் திறமைகளிலும் இந்தப் பள்ளி மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற 5 ஆயிரம், 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் மாணவர் காந்த், குறுவட்ட அளவில் தேர்வு பெற்றார். கால்பந்து போட்டியில் மாவட்ட அளவில் மூன்றாம் இடத்திலும் சிலம்பம் போட்டியில் மாநில அளவிலும் மாணவர் ஹயத்பாஷா முதலிடத்தைப் பிடித்து, பள்ளிக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x