Published : 07 Aug 2019 10:46 AM
Last Updated : 07 Aug 2019 10:46 AM

டிங்குவிடம் கேளுங்கள்: தும்மும்போது கண்களை மூடுவது ஏன்?

காலையிலும் மாலையிலும் சூரியன் சிவப்பாகவும் சற்றுப் பெரிதாகவும் இருப்பதற்கு என்ன காரணம், டிங்கு?
- வி. அணிஸ்சங்கர், 8-ம் வகுப்பு, கமலாவதி மேல்நிலைப் பள்ளி, சாகுபுரம், தூத்துக்குடி.

சூரியன் உதிக்கும்போதும் மறையும்போதும் அடிவானத்தில் இருக்கிறது. பகல் பொழுதைவிட காலையிலும் மாலையிலும் சூரியன் வெகு தொலைவுக்குச் சென்றுவிடுகிறது. அப்போது ஒளிவிலகல் அதிகமாக ஏற்படுகிறது. இந்த நேரத்தில் பூமியில் உள்ள காற்று மண்டலத்தால் நிறங்கள் சிதறடிக்கப்படுகின்றன. அப்போது குறைந்த அலைநீளங்களுடைய நீலம், ஊதா போன்ற நிறங்கள் காணாமல் போய்விடுகின்றன. அலைநீளம் அதிகமுள்ள சிவப்பு வண்ணம் மட்டுமே எஞ்சியிருப்பதால், நம் கண்களுக்குச் சிவப்பு மட்டுமே புலப்படுகிறது. இதே ஒளிவிலகல் காரணமாகத்தான் பகலைவிட காலையிலும் மாலையிலும் சூரியன் சற்றுப் பெரிதாகத் தோன்றுகிறது, அணிஷ் சங்கர்.

தும்மல் வரும்போது கண்கள் ஏன் மூடிக்கொள்கின்றன, டிங்கு?

- எ. சாய் சரண், 4-ம் வகுப்பு, கனகதாசா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி. பருகூர்.

ஒவ்வாமையால்தான் தும்மல் ஏற்படுகிறது. தூசி போன்ற அந்நியப் பொருட்கள் உள்ளே நுழையும்போது, அவற்றைத் தும்மலின் மூலம் உடல் வெளியேற்றுகிறது. மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் தும்மல் வெளிப்படும்போது, கண்கள் அனிச்சையாக மூடிக்கொள்கின்றன. தும்மலில் இருந்து வெளிப்படும் கிருமிகள் கண்களுக்குள் செல்லாமல் இருப்பதற்காக, இமைகள் மூடிக்கொள்கின்றன. கண், மூக்கு போன்ற உறுப்புகள் இணைப்பில் இருப்பதால் மூக்குக்கு ஒரு பிரச்சினை என்றால் கண்களும் சேர்ந்து அந்தச் செயலில் பங்கேற்கின்றன என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன, சாய் சரண்.

உலகத்தில் முதன் முதலில் பிறந்தவர் யார், டிங்கு?

– மு. சுமித்ரா, 5-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நாதன்கோவில்.

என்ன இப்படி ஒரு கேள்வி! எப்படித் திட்டவட்டமாகச் சொல்ல முடியும், சுமித்ரா? பூமி உருவாகி சுமார் 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன. 360 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரு செல் உயிரினங்கள் தோன்றின. 100 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பல செல் உயிரினங்கள் உருவாகின. 58 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஜெல்லிமீன் போன்ற மென்மையான உடல் கொண்ட உயிரினங்கள் தோன்றின.

57 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூச்சிகளின் மூதாதையர்கள் உருவாகின. 53 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மீன்கள் தோன்றின. 37 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தவளை, தேரை போன்றவை உருவாகின. 32 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஊர்வன விலங்குகள் தோன்றின. 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பாலூட்டிகள் உருவாகின.

15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பறவைகள் தோன்றின. 13 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தாவரங்கள் பூக்கத் தொடங்கின. 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தேனீக்கள் வந்தன. 6.8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் உருவாகின. 1.4 கோடி ஆண்டுகளுக்கு முன்பு குரங்குகளின் மூதாதையர் தோன்றின. 44 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களின் மூதாதையர்கள் தோன்றினர். 11.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் இன்றைய மனித இனம் உருவானது.

எப்படிப்பட்ட கேள்விகளுக்கு உன்னிடமிருந்து பதில் கிடைக்கும்? கேள்வி கேட்பவர்களில் உனக்குப் பிடித்தவர்கள் யார், டிங்கு?

– வெ. ஸ்ரீராம், 5-ம் வகுப்பு, சி.ஆர்.ஆர். மெட்ரிக். பள்ளி, ஒண்டிபுதூர், கோவை.

எல்லோரும் படிக்கக்கூடிய வகையில் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கக்கூடிய கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்குதான் விரும்புவேன். பள்ளியில் படிக்கக்கூடியவர்களின் கேள்வியாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். மாணவர்களின் பெயரில் பெரியவர்கள் எலும்புத் தேய்மானம், கழிவுநீர்த் தொட்டிக்குள் குதிரை சாணம் போட வேண்டுமா என்றெல்லாம் கேள்வி கேட்டால் அவற்றுக்குப் பதில் சொல்வதில் விருப்பம் இல்லை.

இவற்றைவிட பதில் சொல்வதற்கு மாணவர்களிடமிருந்து ஏராளமான கேள்விகள் காத்திருக்கின்றன. கேள்வி கேட்பவர்கள் எல்லோரையுமே எனக்குப் பிடிக்கும். அதிலும் சுவாரசியமான கேள்விகளைக் கேட்டு, பதிலுக்காக என்னைத் தேடித் தேடிப் படிக்க வைப்பவர்களை அதிகம் பிடிக்கும், ராம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x