Published : 07 Aug 2019 10:38 am

Updated : 07 Aug 2019 10:38 am

 

Published : 07 Aug 2019 10:38 AM
Last Updated : 07 Aug 2019 10:38 AM

இடம் பொருள் மனிதர் விலங்கு: புரோமிதியஸ் வழங்கிய நெருப்பு

the-fire-supplied-by-prometheus

மருதன்

பார்ப்பதற்கு மலைபோல் இருந்தாலும் உண்மையில் அது ஒரு பாறாங்கல். ஒருவேளை நீங்கள் காகசஸ் பகுதியைக் கடந்து செல்பவராக இருந்தால், இந்தக் கல் நிச்சயம் உங்கள் கவனத்தை ஈர்த்திருக்கும். அப்படியே கடந்து சென்றுவிடாமல் ஒரு வேளை நெருங்கிச் சென்று கவனித்திருந்தால், கல்லோடு சேர்த்து ஓர் உருவம் கட்டிப்போடப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். மூச்சுப் பேச்சின்றி சோர்ந்து போய்க் கிடக்கும் இந்த மனிதர் யார்? யார் இவரை இப்படிக் கட்டிப்போட்டது?


நீங்கள் குழப்பத்தோடு நிற்கும்போது ஒரு பருத்த கழுகு சத்தமிட்டபடி பறந்து வருகிறது. தன் கூர்மையான கால்களை அந்த மனிதரின் தோள்மீது பதிக்கிறது. ஏற்கெனவே உருண்டிருக்கும் விழிகளை மேலும் உருட்டியபடி மனிதரைக் கொத்த ஆரம்பிக்கிறது கழுகு. நீண்ட, கடினமான மூக்கைக் கொண்டு அந்த மனிதரின் கல்லீரலை அது கொத்தி விழுங்குகிறது.

பிறகு சிறகுகளை விரித்துப் பறந்து சென்றுவிடுகிறது ஐயோ, இப்படி ஒரு கொடூரம் என் கண் முன்னால் நிகழ வேண்டுமா என்று நீங்கள் கலங்கி நிற்கும்போது, அந்த அதிசயம் நிகழ்கிறது. மனிதர் மெல்ல அசைகிறார். அவர் உடலில் ஏற்பட்டிருந்த காயம் மாயமாக மறைகிறது. கழுகு கடித்துக் குதறிய இடத்தில் ஒரு புதிய கல்லீரல் மொட்டுபோல் மலர்கிறது. மனிதர் மெல்ல விழித்துக்கொள்கிறார்.

அட, அவர் முகத்தில் ஒரு புன்னகையும் மலர்கிறதே! என்ன மாயம் நடக்கிறது இங்கே? நான் காண்பது நிஜமா அல்லது கனவா?
இரண்டுமில்லை. நீங்கள் காண்பது கடல்போல் விரிந்திருக்கும் கிரேக்கத் தொன்மக் கதைகளிலிருந்து ஒரு காட்சியை. உலகப் புகழ்பெற்ற இந்தக் கதைகள் ஓர் அதிசய உலகுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. இந்த உலகில் மனிதர்களும் கடவுள்களும் விநோத விலங்குகளும் ஒன்றாக வசிப்பதை நீங்கள் பார்க்கலாம். இவர்களுக்குள் அடிக்கடி, நீ பெரியவனா, நான் பெரியவனா சண்டை வரும். ஒருவரை இன்னொருவர் திட்டிக்கொள்வார்கள், அடித்துக்கொள்வார்கள், கொல்வதும் வாடிக்கைதான்.

ஜீயஸ் என்று ஒருவர் இருக்கிறார். இந்த உலகிலேயே நான்தான் பெரியவன் என்று அடிக்கடி பெருமைப்பட்டுக்கொள்வது ஜீயஸின் வழக்கம். ’வானத்தை, இடியைப் படைத்தவன் நான். உலகிலுள்ள அத்தனை உயிரினங்களும் எனக்குக் கட்டுப்பட வேண்டும். நான் மனிதர்களுக்குக் கடவுள். கடவுள்களுக்கு அரசன். வேளா வேளைக்குச் சுவையான ஒரு விலங்கைப் பலியிட்டு என் பசியைத் தீர்க்க வேண்டியது உங்கள் கடமை. தவறினால் என்னிடமுள்ள நெருப்பைக்கொண்டு உலகையே அழித்துவிடுவேன்!’

பயபக்தியோடு எல்லோரும் ஜீயஸ் சொல்பேச்சுக் கேட்டு நடந்தபோது, டைட்டன் என்று அழைக்கப்படும் மற்றொரு கடவுளான புரோமிதியஸ் வெகுண்டு எழுந்தார். ஏன் இந்த ஜீயஸ் இப்படி நடந்துகொள்கிறார்? இவர் பாட்டுக்கு ஒலிம்பஸ் மலை மீது உட்கார்ந்திருப்பாராம். மற்ற கடவுள்களும் மனிதர்களும் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி பாடுபட்டு வேளா வேளைக்கு உணவு கொடுக்க வேண்டுமாம். கடவுள் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? யார் கொடுத்த அதிகாரம் இது?

ஜீயஸின் ஆணவத்தை அடக்க விரும்பிய புரோமிதியஸ் ஒரு நாள் ஜீயஸின் மலைக்குச் சென்று, பந்துபோல் எரிந்துகொண்டிருந்த நெருப்பை அப்படியே எடுத்துக் கீழே கொண்டுவந்தார். பிறகு, இரவோடு இரவாக ஊரிலுள்ள அனைவரையும் அழைத்தார் புரோமிதியஸ். ”மனிதர்களே, கடவுள்களே, சக விலங்கினங்களே! இதோ இந்த நெருப்புப் பந்துதான் ஜீயஸை மாபெரும் உயரத்தில் கொண்டுபோய் வைத்திருக்கிறது. இது தன்னிடம் இருப்பதால்தான் ஜீயஸ் இத்தனை ஆணவத்தோடு இருக்கிறார். இதை வைத்துதான் நம்மை எல்லாம் மிரட்டவும் செய்கிறார். இனி இது நம்முடைய செல்வம், நம்முடைய ஆயுதம். இதை நாம் அனைவரும் நமக்குள் பங்கிட்டுக்கொள்வோம். ஆளுக்கொரு துளி. எல்லோரும் வந்து பெற்றுக்கொள்ளுங்கள்.’’

கொதித்துப் போன ஜீயஸ், உடனடியாக புரோமிதியஸைச் சிறைப்படுத்தினார். ’உனக்குப் புத்தி கெட்டுவிட்டதா புரோமிதியஸ்? நெருப்புக் கடவுளின் சொத்து. அதுதான் நம்மை மனிதர்களிடமிருந்து பிரித்து வைக்கிறது. இதை என்னிடமிருந்து எடுத்துச் சென்று நீ வைத்திருந்தால்கூட இத்தனை கோபப்பட்டிருக்க மாட்டேன். நீயோ ஊர் பேர் தெரியாதவர்களுக்கு எல்லாம் நெருப்பைப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டாய். ஏன் இப்படி ஒரு முட்டாள்தனத்தைச் செய்தாய்?’’

புரோமிதியஸ் பதிலுக்கு முழங்கினார். ’’உன் ஆணவம்தான் அவ்வாறு செய்ய வைத்தது, ஜீயஸ். நெருப்பு பொதுவானது. கொடுக்க, கொடுக்க வளரும் அற்புதமான திறன்கொண்டது. அறிவைப்போல். நீயோ அதை உனக்கு மட்டும் பதுக்கி வைத்துக்கொண்டதோடு நில்லாமல், நானே பெரிய கடவுள் என்று மற்றவர்களை அடிமைப்படுத்த ஆரம்பித்தாய். மக்களும் நெருப்புக்குப் பயந்து வேறு வழியின்றி உன் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டனர். இனி அது சாத்தியமில்லை. ஒலிம்பஸ் மலையில் நீ வைத்திருந்த அதே நெருப்பு இன்று ஒரு தோட்டக்காரர் வீட்டிலும் வேட்டைக்காரர் வீட்டிலும் ஏதுமற்ற ஏழையின் வீட்டிலும் ஒளி பாய்ச்சிக்கொண்டிருக்கிறது. இனியும் நீ கடவுளில்லை, ஜீயஸ்.’’

வெகுண்டு எழுந்த ஜீயஸ், புரோமிதியஸின் கரங்களில் விலங்கிட்டு, நீங்கள் ஆரம்பத்தில் கண்ட பாறாங்கலில் கட்டிப் போட்டார். சாபமும் இட்டார். ’’என்னுடைய வாகனமான கழுகு வந்து உன்னைக் கொத்தித் திண்ணும். பிறகு உன் காயம் மறையும். மறுநாள் மீண்டும் கழுகு வந்து கொத்தும். தினம் தினம் நீ வதைபடுவாய்!’’ புரோமிதியஸ் கலங்கவில்லை. ’’நான் வழங்கிய நெருப்பு உன்னைப் போன்றவர்களின் அகந்தையைச் சுட்டுப் பொசுக்கப் போகிறது, ஜீயஸ்.

இனி உன்னைக் கண்டு ஒருவரும் அஞ்சப் போவதில்லை! உன்னுடைய பீடம் சுக்குநூறாக உடைந்துவிட்டது. உலகமே கதகதப்போடும் அறிவொளியோடும் மின்னிக்கொண்டிருக்கும்போது, உன் உயரமான ஒலிம்பஸ் மலை மட்டும் இனி இருளில் மூழ்கிக்கிடக்கப் போகிறது. அந்த இருளிலிருந்து பறந்துவரும் ஒரு கழுகால் என்னை என்ன செய்துவிட முடியும்?’’

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

இடம் பொருள் மனிதர் விலங்குபுரோமிதியஸ்சிறகுகள்கூர்மையான கால்கள்தொன்மக் கதைகள்புரோமிதியஸின் கரங்கள்

You May Like

More From This Category

More From this Author