

முகில்
கிரேக்கப் பேரரசரான மாவீரர் அலெக்சாண்டரின் காலத்தில் நாணயங்கள் எப்படி இருந்தன? பெரும்பாலான நாணயங்களின் முன்புறம் அலெக்சாண்டரின் வலதுபக்க முகம் செதுக்கப்பட்டிருந்தது. இன்னொருபுறம், கிரேக்கக் கடவுள்களுக்கு எல்லாம் அரசரான ஜீயஸின் உருவம் செதுக்கப்பட்டிருந்தது. வலது கையில் செங்கோலுடனும், இடது கையில் கழுகுடனும் ஜீயஸ் அரியணையில் அமர்ந்திருந்தார். ALEXANDROU அல்லது ALEXANDROU BASILEWS என்று நாணயங்களில் செதுக்கப்பட்டிருந்தது. அதன் பொருள் ‘அலெக்சாண்டரின் நாணயம்’ அல்லது ‘பேரரசர் அலெக்சாண்டரின் நாணயம்.’ அலெக்சாண்டர் வாழ்ந்த காலம் கி.மு. 356 முதல் 323 வரை.
வட ஆப்பிரிக்க நாடான லிபியா ஒரு காலத்தில் கிரேக்கப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. இருபதாம் நூற்றாண்டில் (கி.பி. 1910 முதல் 1947 வரை) இத்தாலியின் காலனியாகவும் இருந்தது. அப்போது இத்தாலிய ஆய்வாளர்கள் லிபியாவின் பல இடங்களில் தொல்பொருள் ஆய்வை மேற்கொண்டனர். பல்வேறு கிரேக்கப் பொக்கிஷங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் அலெக்சாண்டர் காலத்து நாணயங்களும் கலைப்பொருட்களும் உண்டு.
சைரெனைகா - லிபியாவின் பழமையான கடற்கரை நகரம். அது கிரேக்க ராஜ்யத்தின் ஆளுகையில் இருந்தபோது, அங்கே கிரேக்கக் கடவுளான ஆர்தேமிஸுக்குக் கோயில் எழுப்பப்பட்டது. அதே கோயிலில் 1917-ல் இத்தாலிய தொல்பொருள் ஆய்வாளர்கள் அகழ்வாய்வை மேற்கொண்டார்கள். கி.மு. ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த தங்கக் காதணிகள், கலைப்பொருட்கள், நாணயங்கள், தட்டுகள் போன்ற கிரேக்கப் பொக்கிஷங்களைக் கண்டெடுத்தார்கள்.
கி.பி. 1937 முதல் 1942 வரை இத்தாலிய ஆய்வாளர்கள், சைரெனைகாவின் Ptolemais அரண்மனையில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டனர். அப்போதும் பல்வேறு கிரேக்கப் பொக்கிஷங்கள் கிடைத்தன. தவிர, ஏஞ்சலோ மெலியு என்ற நாணய ஆய்வாளர், சுமார் 2000-க்கும் மேற்பட்ட பழங்கால நாணயங்களைச் சேகரித்திருந்தார். இவை அனைத்துமே இத்தாலிய தொல்லியல் ஆய்வாளர்கள் பொறுப்பிலேயே இருந்தன.
இரண்டாம் உலகப்போர் நேரம். ஹிட்லருக்கு ஆதரவாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த இத்தாலி, 1942-ல் தன் பலத்தை இழந்தது. அதன் எதிரியான பிரிட்டிஷ் படைகள் லிபியாவை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தன. எனவே, இத்தாலிய ஆய்வாளர்கள் தம் வசம் இருந்த கிரேக்கப் பொக்கிஷங்கள் அனைத்தையும் ராணுவத்தினர் பயன்படுத்தும் பெரிய மரப்பெட்டிகளில் வைத்துப் பூட்டினர். அவை பத்திரமாக வட இத்தாலிய நகரமான கிரெமோனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பின்பு வேறு சில இடங்களில் வைத்துப் பாதுகாக்கப்பட்டன. இரண்டாம் உலகப்போரின் முடிவில் பத்திரமாக ரோமுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
லிபியாவின் விடுதலைக்குப் பிறகு, அங்கே அரசராகப் பொறுப்பேற்றவர் முதலாம் இத்ரிஸ். லிபியாவிலிருந்து எடுத்துச் சென்ற கிரேக்கப் பொக்கிஷங்களை எல்லாம் திருப்பி அளிக்குமாறு இத்ரிஸ், இத்தாலிய அரசிடம் கோரிக்கை வைத்தார். கி.பி. 1961-ல் அந்தப் பொக்கிஷங்கள் எல்லாம் லிபியாவின் பெங்காஸி நகரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அப்போது முதல் அவை ‘பெங்காஸி பொக்கிஷங்கள்’ என்று அழைக்கப்பட்டன. (ஆர்தேமிஸ் கோயில் பொக்கிஷங்கள், Ptolemais அரண்மனைப் பொக்கிஷங்கள், ஏஞ்சலோ மெலியு சேகரித்த நாணயங்கள் ஆகியவை இதில் அடக்கம்.) பெங்காஸி நகரத்தில் ஓர் அருங்காட்சியகம் கட்டி, அவற்றில் இந்தப் பொக்கிஷங்களை எல்லாம் காட்சிக்கு வைக்க வேண்டும் என்பது அரசர் இத்ரிஸின் திட்டமாக இருந்தது. ஆனால், அவரால் அதைக் கடைசிவரை செய்ய முடியவில்லை.
பெங்காஸி பொக்கிஷங்களில் இன்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்ற முறையான ஆவணப்பதிவும் மேற்கொள்ளப்படவில்லை. சில நாணயங்கள், சில கலைப்பொருட்கள் மட்டும் ஒளிப்படங்களாகப் பதிவு செய்யப்பட்டன. அரசர் இத்ரிஸின் உத்தரவுப்படி, அவை ஒமர் அல்-முக்தார் சாலையில் அமைந்த தேசிய வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டன. 1969-ல் லிபியாவில் ராணுவப் புரட்சி அரங்கேறியது. முகம்மது கடாஃபி லிபியாவின் சர்வாதிகாரி ஆனார். ஏறத்தாழ 42 ஆண்டுகள் நிலைத்த அவரது ஆட்டம், 2011-ல் முடிவுக்கு வந்தது. அப்போது உருவான மக்கள் புரட்சியால் கடாஃபி ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்.
கிளர்ச்சிப் படையினர், பெங்காஸி நகரில் இடைக்கால அரசு ஒன்றை அமைத்தனர். உள்நாட்டுப்போர் மூண்டது. அந்த அசாதாரணமான சூழலில் பெங்காஸி நகரம் எங்கும் பல்வேறு வன்முறைகள் நிகழ்ந்தன. மே மாதத்தில் தேசிய வங்கியும் கொள்ளையடிக்கப்பட்டது. ஆனால், அக்டோபர் வரை கொள்ளையடிக்கப்பட்ட செய்தி வெளியில் தெரிவிக்கப்படவில்லை. ஏனென்றால் கிளர்ச்சியின் ஒரு பகுதியாக வங்கி தீவைத்துக் கொளுத்தப்பட்டதாகத்தான் பலரும் நினைத்துக்கொண்டிருந்தார்கள். பின்புதான் அது ஏதோ ஒரு கொள்ளைக் கும்பலின் திட்டமிட்ட சதி என்பது கண்டறியப்பட்டது.
2011, மே 25 அன்று வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள், பாதுகாப்புப் பெட்டக அறையின் மேல் தளத்தில் ஓர் ஆள் நுழையும் அளவுக்குத் துளையிட்டிருக்கிறார்கள். அதன் வழியே புகுந்து பாதுகாப்புப் பெட்டகங்களை உடைத்து, பெங்காஸி பொக்கிஷங்களை அள்ளிக்கொண்டு சென்றிருக்கிறார்கள். வங்கிக் கட்டிடத்துக்குத் தீ வைத்ததும் அவர்களே. வங்கி குறித்தும், பாதுகாப்புப் பெட்டக அறை குறித்தும் தெளிவாகத் தெரிந்த யாரோ சிலரது உதவியுடனேயே கொள்ளை நடந்திருக்கும் என்று நம்பப்படுகிறது. விசாரணை தொடர்கிறது. ஆனால், இதுவரை பெங்காஸி பொக்கிஷங்கள் எதுவும் மீட்கப்படவில்லை. பாதுகாப்புப் பெட்டகத்தில் என்னென்ன பொக்கிஷங்கள் வைக்கப்பட்டிருந்தன என்பதற்கு முறையான பட்டியல் கிடையாது என்பதும் இதில் மிகப்பெரிய சிக்கல்.
The Art Newspaper-ல் மார்ட்டின் பெய்லே என்பவர் பெங்காஸி பொக்கிஷங்கள் குறித்த உத்தேசப் பட்டியல் ஒன்றை 2011 நவம்பரில் வெளியிட்டார். 364 தங்க நாணயங்கள், 2433 வெள்ளி நாணயங்கள், 4484 வெண்கல நாணயங்கள், 306 தங்க நகைகள் மற்றும் 43 கலைப்பொருட்கள். கிரேக்க காலத்துப் பொக்கிஷங்கள் மட்டுமின்றி, ரோமானிய, பைசாந்திய, பண்டைய இஸ்லாமிய ராஜ்யங்களின் பொக்கிஷங்களும் இதில் அடக்கம். இதில் 90% பொருட்கள் கொள்ளை போய்விட்டதாகச் சொல்லப்படுகிறது.
2011-க்குப் பிறகு எகிப்தின் சந்தையில் சில பண்டைய கிரேக்க நாணயங்கள் விற்கப்பட்டதாகச் செய்திகள் உண்டு. ஆனால், யாரும் பிடிபடவில்லை. தற்போது உலகம் எங்கும் செயல்படும் ஏல நிறுவனங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன. அவை மூலமாக பெங்காஸி பொக்கிஷக் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள் என்று உலகமே காத்திருக்கிறது. சரி, பெங்காஸி பொக்கிஷங்களின் மதிப்பு எவ்வளவு? அதை மதிப்பிடவே முடியாது. 2011-ல் பாரிஸில் அதிகாரபூர்வமாக நடத்தப்பட்ட ஏலம் ஒன்றில் பண்டைய கிரேக்க நாணயம் ஒன்று 4,31,000 டாலர் மதிப்புக்கு விலை போயிருக்கிறது. இதைக் கொண்டு பெங்காஸி பொக்கிஷங்களின் மதிப்பை உணர்ந்துகொள்ளலாம்.
உலகில் இதுவரை தொல்லியல் பொக்கிஷங்கள் பலவும் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. அதில் மிகப் பெரிய கொள்ளைச் சம்பவம் இதுவே.
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mugil.siva@gmail.com