Last Updated : 15 Jul, 2015 12:04 PM

 

Published : 15 Jul 2015 12:04 PM
Last Updated : 15 Jul 2015 12:04 PM

காற்றில் தூது அனுப்பிய விஞ்ஞானி

மார்கோனி நினைவு நாள்: ஜூலை 19

கடந்த தலைமுறை வரைக்கும் மிகப் பெரிய பொழுதுபோக்கு சாதனமாக இருந்தது வானொலிப் பெட்டி. காற்றில் தவழ்ந்துவரும் வான் அலைகள் சினிமா பாடல்களை மட்டுமல்லாமல், பயனுள்ள வேறு பல தகவல்களையும் வானொலி மூலம் சுமந்து வரும்.

இந்த வானொலி அலைகளைக் கண்டுபிடிப்பதற்கு ஆதாரமாக இருந்தது மார்கோனி கண்டுபிடித்த கம்பியில்லாத் தொடர்புதான். அதுவே தொலைக்காட்சி முதல் செயற்கைக்கோள் தொடர்பு வரையிலான பிந்தைய வளர்ச்சிகள் எல்லாவற்றுக்கும் அடிப்படை.

பள்ளியும் ஆராய்ச்சியும்

வடக்கு இத்தாலியில் உள்ள போலாக்னாவில் 1874-ல் மார்கோனி பிறந்தார். அவருடைய முழு பெயர் கூலைல்மா மார்கோனி. அவருடைய அப்பா ஜூசெப் மிகப் பெரிய பணக்காரர். மார்கோனியின் சின்ன வயதில், அவருடைய அம்மா ஆனி ஜேம்சன் தொடர்ந்து பயணம் செய்துகொண்டே இருந்தார். அதனால் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே படித்தார் மார்கோனி. பிறகு பிளாரன்ஸ் பள்ளியில் சேர்ந்து படித்தபோது, படிப்பதற்குக் கஷ்டப்பட்டார்.

லெக்ஹார்ன் தொழில்நுட்ப நிறுவனத்தில் மேற்படிப்பு படித்தபோது, இயற்பியலில் ஆர்வம் கொண்டு நன்கு படிக்க ஆரம்பித்தார். ஆனால், அங்கே படிப்பை அவர் நிறைவு செய்யவில்லை. இது அவருடைய அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. வீட்டுக்குத் திரும்பிய மார்கோனி பல்வேறு அறிவியல் பரிசோதனைகளை வீட்டிலேயே செய்ய ஆரம்பித்தார்.

அந்த நேரத்தில் அவருடைய அம்மா உதவியாக இருந்தார். அவர்களுடைய பக்கத்து வீட்டில் வசித்த இயற்பியல் விஞ்ஞானி பேராசிரியர் ரிகியை, மார்கோனிக்கு ஆலோசகராக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். பிற்காலத்தில் வானொலி அலைகள் அல்லது ஹெர்ட்ஸியன் அலைகளை மார்கோனி கண்டுபிடிக்கப் பேராசிரியர் ரிகியின் ஆலோசனைகளே காரணம்.

கம்பியில்லாத் தந்தி

மார்கோனிக்கு முன்னதாக, மின்காந்தக் கதிர்வீச்சை உருவாக்குவதில் ஜெர்மனிய இயற்பியலாளர் ஹென்ரிக் ஹெர்ட்ஸ் வெற்றி பெற்றிருந்தார். அந்த ஆராய்ச்சிகளைப் பற்றிய தகவல்கள் மார்கோனிக்கு உதவின. 1894-ல் கம்பியில்லாத் தொடர்பில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்த மார்கோனி, 1895-ல் ஒன்றரை கி.மீ.க்கும் அதிகமான தொலைவுக்குக் கம்பியில்லாத் தொடர்பைச் சாத்தியப்படுத்துவதில் வெற்றி பெற்றார்.

வானொலி அலைகளை உருவாக்கும் கருவிக்கு 1896-ல் பிரிட்டனில் காப்புரிமையும் பெற்றார். அத்துடன் கம்பியில்லாத் தந்தி சேவை, சமிக்ஞை நிறுவனத்தைப் பிரிட்டனில் தொடங்கி நடத்திவந்தார். பின்னர் அது 'மார்கோனி கம்பியில்லாத் தந்தி நிறுவனம்' என்று அழைக்கப்பட்டது. அந்த நிறுவனம்தான், உலகின் முதல் கம்பியில்லாத் தந்தி சேவையை இங்கிலாந்தில் உள்ள செல்ம்ஸ்ஃபோர்டில் 1898-ல் தொடங்கியது.

மார்கோனி சாதனைகள்

கம்பியில்லா தொடர்பு - வானொலி அலைகளைக் கண்டுபிடித்ததற்காக 1909-ம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு மார்கோனிக்கு வழங்கப்பட்டது.

உலகின் முதல் கம்பியில்லா பொழுதுபோக்கு வானொலி சேவை மார்கோனி ஆராய்ச்சி நிலையத்தில் 1922-ல் தொடங்கியது.

உலகப் புகழ்பெற்ற ஊடக நிறுவனமான பி.பி.சி. தொடங்கப்பட மார்கோனியும் ஒரு காரணம்.

மார்கோனி கண்டறிந்த வானொலி நுண்ணலைகள் கப்பல்களுக்குக் கடல்வழியைக் கண்டறிய உதவின. ராடாரை உருவாக்கும் கொள்கைகளை 1935-ல் மார்கோனி முன்வைத்தார்.

1937-ல் ஜூலை 19-ம் தேதி அவர் இறந்தபோது, அவருக்கு மரியாதை செலுத்தும்விதமாக உலகிலுள்ள வானொலி சேவைகள் அனைத்தும் சில விநாடிகளுக்கு முற்றிலும் நிறுத்தப்பட்டன.

வானொலி அலைகளை உருவாக்கும் கருவிக்கு 1896-ல் பிரிட்டனில் காப்புரிமையும் பெற்றார். அத்துடன் கம்பியில்லாத் தந்தி சேவை, சமிக்ஞை நிறுவனத்தைப் பிரிட்டனில் தொடங்கி நடத்திவந்தார். பின்னர் அது 'மார்கோனி கம்பியில்லாத் தந்தி நிறுவனம்' என்று அழைக்கப்பட்டது. அந்த நிறுவனம்தான், உலகின் முதல் கம்பியில்லாத் தந்தி சேவையை இங்கிலாந்தில் உள்ள செல்ம்ஸ்ஃபோர்டில் 1898-ல் தொடங்கியது.

புகழும் விமர்சனமும்

தண்ணீருக்கு இடையிலான கம்பியில்லாத் தொடர்பை முதன் முதலில் அதே ஆண்டில் அவர் நிகழ்த்திக் காட்டினார். பிறகு, அட்லாண்டிக் கடலைத் தாண்டிய கம்பியில்லா தொடர்பைக் கார்ன்வால் (பிரிட்டன்), நியூஃபவுண்ட்லேண்ட் (கனடா) பகுதிகளுக்கு இடையே 1901-ல் சாத்தியப்படுத்தினார். மைக்கேல் ஃபாரடே, நிகோலா டெஸ்லா, தாமஸ் ஆல்வா எடிசன் உள்ளிட்டோர் கம்பியில்லா தொடர்புக்கு அடித்தளமிட்டிருந்தாலும், வானொலி அலைகளை வெற்றிகரமாகச் சாத்தியப்படுத்திக் காட்டியவர் மார்கோனிதான்.

வானொலி சேவைக்கு அடித்தளமிட்டது, நோபல் பரிசு பெற்றது போன்ற மிகப் பெரிய சாதனைகளைச் செய்தாலும் கடுமையான விமர்சனத்துக்கும் மார்கோனி ஆளானார். அதற்குக் காரணம் இத்தாலியை ஆண்ட பெனிட்டோ முசோலினியின் இத்தாலிய ஃபாசிசக் கட்சியில் அவர் சேர்ந்ததுதான்.

இருந்தாலும் கோடிக்கணக்கான மக்களை இன்றைக்கும் மகிழ்வித்துவரும் ‘வானொலி சேவையின் தந்தை' என்று, மார்கோனி புகழப்படுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x