Published : 31 Jul 2019 11:19 AM
Last Updated : 31 Jul 2019 11:19 AM

டிங்குவிடம் கேளுங்கள்: சூரியன் ஏன் தெற்கில் உதிப்பதில்லை?

சூரியன் ஏன் தெற்கிலோ வடக்கிலோ உதயமாகவில்லை, டிங்கு?

– ர. பரணிதா, 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, திருச்சி.

சூரியன் உதிப்பதும் இல்லை, மறைவதும் இல்லை. அது எப்போதும் ஒளியையும் வெப்பத்தையும் உமிழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. சூரியனை மையமாக வைத்து பூமி உட்பட சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள் சுற்றி வருகின்றன.

பூமி தானும் சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது. அப்படிச் சுற்றும்போது இரவு, பகல் ஏற்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். பூமி கிழக்கு திசை நோக்கிச் சுற்றுவதால் சூரியன் கிழக்கில் உதிப்பதுபோல் நமக்குத் தோன்றுகிறது. தெற்கு திசை நோக்கியோ வடக்கு திசை நோக்கியோ சுற்றினால் சூரியன் அந்தத் திசையில் உதிப்பதாகத் தோன்றும், பரணிதா.

உடல் உறுப்புகளில் முதலில் உருவாகும் உறுப்பு எது, டிங்கு?

– ரா. ஹாசினி, 5-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நாதன்கோவில், தஞ்சாவூர்.

கருவில் செயல்படக்கூடிய முதல் உறுப்பாக உருவாவது இதயம்தான். உயிரணுக்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை ரத்தம் மூலம் அளிப்பதும் கழிவுகளை வெளியேற்றுவதும் இதயத்தின் பணியாக இருப்பதால், இதுவே முதலாவதாக உருவாகிறது, ஹாசினி.

நெருப்பைக் கக்கும் எரிமலைகள் இன்றும் இருக்கின்றனவா, டிங்கு?

– எஸ். சக்தி, 7-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, வெளியகரம், திருவள்ளூர்.

இன்றும் செயல்படும் எரிமலைகள் ஏராளமாக இருக்கின்றன சக்தி. பூமியில் நிலப்பகுதியிலும் கடலுக்குள்ளும் சுமார் 1,500 எரிமலைகள் செயல்படக்கூடியவையாக இருக்கின்றன.

ஆடிக்காற்றில் உண்மையிலேயே அம்மி நகருமா, டிங்கு?

- மனோசியா, 5-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சுல்தான்பேட்டை, திருப்பூர்.

ஆடி மாதம் வழக்கத்தைவிடக் காற்று வேகமாக வீசும். ஆனால், இந்தக் காற்றில் அம்மி இல்லை, குழவிகூட நகராது மனோசியா.

தோட்டத்தில் செடி நடுவதற்குக் குழி தோண்டியபோது, பெரிய தவளை ஒன்று உயிரோடு இருந்ததைக் கண்டேன். அது எப்படிக் காற்று இல்லாமல் உயிரோடு இருக்கிறது, டிங்கு?

- அ. பிரியதர்சினி, 8-ம் வகுப்பு, சேதுலெட்குமிபாய் பெண்கள் அரசு உயர்நிலைப் பள்ளி, ராசாக்கமங்கலம், குமரி.

அதிக வெப்பம், அதிகக் குளிர் போன்ற தட்பவெப்பங்களில் இருந்து தப்புவதற்கும் இரை கிடைக்காத காலங்களிலும் உயிரோடு இருப்பதற்கும் நிலத்துக்கு அடியில் சென்று நீண்ட உறக்கம் கொள்கின்றன பல்வேறு உயிரினங்கள். மண்ணைத் தோண்டி நிலத்துக்குள் வளையை உருவாக்கிக்கொள்ளும் தவளை.

மண்ணுக்குள் காற்று எளிதாகச் செல்லும் என்பதால் சுவாசிப்பதில் பிரச்சினை இருக்காது. தவளையின் உடலில் நீரைச் சேமித்து வைத்திருப்பதால் உடல் நீர்ச்சத்தையும் இழக்காது. தட்பவெப்பநிலை சாதகமாக மாறும்போது தவளை நிலத்துக்குள்ளிருந்து வெளியே வந்துவிடும், பிரியதர்சினி.

விவசாய நிலங்களை அழித்துவிட்டு சாலைகள் போடுவதும் ஹைட்ரோகார்பன் எடுப்பதும் முக்கியமா? தண்ணீருக்குத் தவித்துக்கொண்டிருக்கும்போது, வாகனங்களுக்கு எரிபொருள் எடுப்பது அவசியமா, டிங்கு?

–- பா. மேஹசூரஜ், 12-ம் வகுப்பு, நியூ க்ரெசென்ட் மெட்ரிக். பள்ளி, புளியங்குடி.

மிகவும் சரியான கேள்விதான், மேஹசூரஜ். ஏற்கெனவே இருக்கும் ஒன்றை அழித்து, புதிதாக ஒன்றைக் கொண்டுவருவது முன்னேற்றம் கிடையாது. விளைநிலங்களைப் பாழாக்காமல், இயற்கையை அழிக்காமல் கொண்டுவரும் முன்னேற்றமே நிலையான, உண்மையான முன்னேற்றம். ஆனால், இந்த உலகமே சர்வதேச நிறுவனங்களாலும் அரசாங்கங்களாலும்தான் இயக்கப்படுகிறது.

இவர்களுக்கு இயற்கை மீதுள்ள அக்கறை முதன்மையாக இல்லை. வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் சொல்வதுபோல், ‘எல்லோருடைய பசியையும் தீர்க்க இயற்கை போதும். ஆனால், இயந்திரம் உண்ணத் தொடங்கினால் உலகையே கொடுத்தாலும் போதாது’ என்பதை மனிதர்கள் என்றைக்கு உணர்கிறார்களோ, அன்றைக்குத்தான் உண்மையான முன்னேற்றம் சாத்தியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x