

1990, மார்ச் 18. அமெரிக்கா வின் பாஸ்டன் நகரம். இஸபெல்லா ஸ்டீவர்ட் கார்ட்னெர் அருங்காட்சியகம் அருகில் சிவப்பு கார் வந்து நின்றது. அதிகாலை மணி 1. காரிலிருந்து போலீஸ் சீருடையில் இரண்டு திருடர்கள் இறங்கினார்கள். அருங் காட்சியகத்தின் காவலாளியை நோக்கிச் சென்றார்கள்.
‘உள்ளே இருந்து ஏதோ சத்தம் வருவதாகப் புகார் வந்திருக்கிறது’ என்று அதிகாரத் தொனியில் ஒருவர் மிரட்டினார். இன்னொருவர், கைது வாரண்ட் போல ஒன்றைக் காட்டி, காவலாளியின் கையில் விலங்கை மாட்டினார். அவர்களை போலீஸ் என்றே நம்பிவிட்டார் அந்தக் காவலாளி. அப்போது இன்னொரு காவலாளியும் வரவே, அவரது கையிலும் விலங்கு பூட்டப்பட்டது.
இருவரையும் இழுத்துக்கொண்டு கட்டிடத்தின் அடித்தளத்துக்கு வந்து, கட்டிப் போட்டார்கள். போலீஸாக வந்தவரது முகத்தில் இருப்பது ஒட்டுமீசை என்று காவலாளி கண்டுகொண்டார். சத்தம் எழுப்ப முயன்றபோது, அவர்களது வாயில் டேப் ஒட்டப்பட்டது.
‘நாங்கள் உங்களைக் கைது செய்யவில்லை. இங்கே கொள்ளை யடிக்க வந்திருக்கிறோம்.’ அழுத்தந் திருத்தமாகச் சொன்னார் ஒரு திருடர். இருவரும் அருங்காட்சியகத்துக்குள் புகுந்தனர்.
அது அரசு அருங்காட்சியகம் அல்ல. கி.பி. 1840-ல் பிறந்த இஸபெல்லா ஸ்டீவர்ட் கார்ட்னெர் என்ற அமெரிக்கப் பெண் உருவாக்கியது. கலைப்பொருட்களை, அரிய ஓவியங்களை, பண்டைக்காலச் சிற்பங்களை எல்லாம் சேகரிப்பதில் இஸபெல்லா ஸ்டீவர்ட்டும், அவரது கணவரான கார்ட்னெரும் பெரும் ஆர்வம் கொண்டிருந்தனர்.
தங்கள் வாழ்நாளில் சுமார் பத்து வருடங்கள் அவர்கள் அமெரிக்காவிலேயே இல்லை. கலைப் பொக்கிஷங்களைச் சேகரிப்பதற்காகவே ஐரோப்பிய நாடுகள், மத்தியக் கிழக்கு நாடுகள், ஆசிய நாடுகள் என்று சுற்றிக்கொண்டே இருந்தார்கள்.
தாங்கள் சேகரித்த கலைப் பொக்கிஷங்களை எல்லாம் அருங்காட்சியகம் உருவாக்கி காட்சிப்படுத்த வேண்டும் என்பது இருவரது பெருங்கனவு.
1898-ல் கார்ட்னெர் இறந்து போனார். தன் கணவரது ஆசையை நிறைவேற்றும் விதமாக பாஸ்டனில் நிலம் வாங்கினார் இஸபெல்லா. விலார்ட் சீஸ் என்ற கட்டிட நிபுணரின் வடிவமைப்பில், இத்தாலியின் வெனிஸ் அரண்மனையைப் போன்று அருங்காட்சியகத்தின் கட்டிடம் உருவாக்கப்பட்டது. நான்கு தளங்கள் கொண்ட மாளிகை. முற்றத்தில் கண்ணாடியால் சூழப்பட்ட தோட்டம். எங்கே, எந்தெந்த ஓவியங்கள், சிலைகள், கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு அடுக்குவதற்காக மட்டுமே ஒரு வருடம் செலவிட்டார் இஸபெல்லா.
1903, ஜனவரி 1 அன்று, ‘இஸபெல்லா ஸ்டீவர்ட் கார்ட்னெர் அருங்காட்சியகம்’ திறந்து வைக்கப்பட்டது. நான்காவது தளத்தில் தங்கி, அருங்காட்சியகத்தை நிர்வகித்து வந்த இஸபெல்லா, 1924-ல் தனது 84-வது வயதில் இறந்து போனார். அதற்குப் பிறகும் திறமையான நிர்வாகிகள் அருங்காட்சியகத்தை நடத்தி வந்தனர்.
சுமார் 81 நிமிடங்கள் கழித்துத்தான் திருடர்கள் இருவரும் அருங்காட்சி யகத்தை விட்டு வெளியே வந்தனர். தாங்கள் கொள்ளையடித்த கலைப்பொருட்களை இரண்டு தவணைகளாக காரில் ஏற்றினர். சிவப்பு கார் கிளம்பி மறைந்தது. நிஜ போலீஸ் வந்து காவலாளிகளை விடுவிக்கும்போது காலை மணி எட்டைக் கடந்திருந்தது.
அப்போது கண்காணிப்பு கேமரா கிடையாது. அருங்காட்சியகத்தின் ஒவ்வொரு தளத்திலும் ‘மோஷன் டிடெக்டர்’ எனப்படும் மனிதர்களின் நடமாட்டத்தைக் கண்டறிய உதவும் கருவிகள்தாம் பொருத்தப்பட்டிருந்தன. எனவே திருடர்கள் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. காவலாளிகள் சொன்ன அடையாளங்களைக் கொண்டு திருடர்களின் உத்தேச உருவங்களை மட்டுமே வரைய முடிந்தது. வேறு முக்கியமான தடயங்களும் கிடைக்கவில்லை.
மொத்தமாக சுமார் 500 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள 13 கலைப் பொருட்கள் திருடு போயிருந்தன. ஜோஹன்னஸ் வெர்மியர், பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற டச்சு ஓவியர். அவர் வரைந்த 43 ஓவியங்களில் ஒன்றான The Concert, இஸபெல்லா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. திருடப்பட்ட ஓவியங்களில் அதன் மதிப்பு மட்டும் 200 மில்லியன் டாலர்.
அதே காலத்தில் வாழ்ந்த இன்னொரு ஓவியரான ரெம்பிராண்ட் வரைந்த The Storm on the Sea of Galilee மற்றும் A Lady and Gentleman in Black ஆகிய ஓவியங்களும் திருடப்பட்டிருந்தன. ரெம்பிராண்ட் தன்னைத்தானே வரைந்த ஓர் தன்னோவியம், Edgar Degas என்ற பிரெஞ்சுக் கலைஞரின் ஐந்து ஓவியங்கள், கோவெர்ட் என்ற டச்சு ஓவியர் வரைந்த Landscape with an Obelisk, எடௌவர்ட் மேனே என்ற பிரெஞ்சு ஓவியர் வரைந்த Chez Tortoni ஆகியன திருடு போன பட்டியலில் உண்டு.
தவிர, சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான சீன வெண்கலப் பாத்திரத்தையும் பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன் பயன்படுத்திய கழுகுச் சின்னத்தையும் திருடர்கள் தூக்கிச் சென்றிருந்தார்கள்.
பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலியின் புகழ்பெற்ற ஓவியரான Titian ஓவியங்களும் இஸபெல்லா அருங்காட்சியகத்தில் இருந்தன. அவைதாம் அங்கிருந்த ஓவியங்களிலேயே மிகவும் விலைமதிப்பு கொண்டவை.
திருடர்கள் அவற்றை எடுத்துச் செல்லவில்லை. எனவே, ஓவியங்கள் குறித்த எந்தவித அறிவும் திருடர்களுக்கு இல்லை. தவிர, அவர்கள் கைக்குக் கிடைத்த கலைப் பொருட்களை, அவற்றின் மதிப்பெல்லாம் தெரியாமல்தான் திருடியிருக்கிறார்கள் என்பதும் உறுதியானது.
அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான FBI தேடும் பணியை மேற்கொள்ள ஆரம்பித்தது. சுமார் முப்பது வருடங்களாகத் தேடிக்கொண்டேதான் இருக்கிறது. காணாமல் போன 13 கலைப்பொருட்களில் இதுவரை ஒன்றைக்கூட கண்டுபிடிக்கவில்லை. திருடுபோன கலைப்பொருட்களில் ஏதாவது ஒன்றாவது விற்பனைக்கு வந்தால், அதன் வழியே திருடர்களை அமுக்கி விடலாம் என்ற திட்டமும் இதுவரை கைகூடவில்லை.
திருடு போன கலைப்பொருட்கள் குறித்து உருப்படியான துப்பு கொடுத்தால் இஸபெல்லா அருங்காட்சியம் சார்பாக 1 மில்லியன் டாலர்கள் பரிசு என்று முதலில் அறிவித்தார்கள். அடுத்து 5 மில்லியன் டாலர்கள் என்று பரிசுத்தொகையை ஏற்றினார்கள். 10 மில்லியன் டாலர்கள் என்றும் அறிவித்துப் பார்த்தார்கள். ஒரு தகவல்கூட உருப்படியாகக் கிடைக்கவில்லை.
ஓர் அருங்காட்சியத்தில் இருந்து திருடப்பட்ட வகையில், அதிக மதிப்புள்ள கலைப்பொக்கிஷங்கள் இவையே. இன்றைக்கும் இஸபெல்லா அருங்காட்சியகத்தில் திருடுபோன ஓவியங்களின் சட்டகங்கள் அப்படியே காத்திருக்கின்றன, களவு போன ஓவியங்கள் என்றாவது ஒருநாள் மீட்கப்படும் என்ற நம்பிக்கையுடன்!
- முகில், தொடர்புக்கு: mugil.siva@gmail.com