

தினமும் நடக்கிறோம், ஓடுகிறோம். ஆனால், கீழே விழாமல் எப்படி நடக்க முடிகிறது, ஓட முடிகிறது என்று யோசித்து பார்த்திருக்கிறீர்களா? அதை அறிந்துகொள்ள ஒரு சோதனையைச் செய்து பார்ப்போமா?
என்னென்ன தேவை?
சமமான பக்கங்களைக் கொண்ட ஒரே அளவுள்ள இரு நோட்டுகள்.
எப்படிச் செய்வது?
# இரு நோட்டுகளையும் சற்று இடைவெளிவிட்டுத் தரையில் வைத்துக்கொள்ளுங்கள்.
# முதல் நோட்டின் பக்கத்தை விரியுங்கள்.
# இரண்டாவது நோட்டின் பக்கத்தை முதல் நோட்டின் பக்கத்தின் மீது விரியுங்கள்.
# இதேபோல நோட்டின் ஒவ்வொரு பக்கத்தையும் ஒன்றன் மீது ஒன்றாக விரித்து வையுங்கள்.
# எல்லாப் பக்கங்களையும் விரித்த பிறகு, நோட்டுகளை இறுக்கிக்கொள்ளுங்கள்.
# பிறகு ஒன்றோடொன்று இணைந்த நோட்டுகளை வெளியே எடுப்பதற்காக நன்றாக இழுங்கள்.
# என்ன நடக்கிறது? இரு நோட்டுகளையும் இழுக்க முடியவில்லையா?
நோட்டுகளை இழுக்க முடியாமல் போனதற்குக் காரணம் என்ன?
காரணம்
இரு நோட்டுகளையும் வெளியே இழுக்க முடியாமல் போனதற்கு உராய்வு விசையே காரணம். ஒரு பொருள் மற்றொரு பொருள் மீது இயங்கும்போது, பொருள் இயங்கும் திசைக்கு எதிராக ஒரு தடை விசை செயல்படுகிறது. இதுவே, உராய்வு விசை. இந்தச் சோதனையின்படி ஒவ்வொரு நோட்டுப் பக்கங்களுக்கும் இடையே ஏற்படும் உராய்வு விசையே நோட்டுகளை நகரவிடாமல் தடுக்கிறது. அதாவது, நோட்டுகள் இயங்கும் திசைக்கு எதிராகத் தடை விசை செயல்படுகிறது. இதனால், நோட்டுகளை இழுக்க முயற்சி செய்தாலும் அது நகராமல் இருக்கிறது.
பயன்பாடு
நாம் தரையில் நடந்து செல்வதற்கும் ஓடுவதற்கும் உராய்வு விசை தேவை. தரைக்கும் நம் பாதங்களுக்கும் உராய்வு விசை இல்லை என்றால், கீழே வழுக்கி விழுந்துவிடுவோம். அதுபோலவே சாலையில் வாகனங்கள் செல்லவும் உராய்வு விசை தேவை.
- மிது கார்த்தி