

என். கௌரி
காட்டின் அரசனை நேரில் பார்த்தாலும், திரையில் பார்த்தாலும் எப்போதும் கம்பீரமான உணர்வையே கொடுக்கும். அமெரிக்க இயக்குநர் ஜான் ஃபெவ்ரோ இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது ‘த லயன் கிங்’ திரைப்படம். வால்ட் டிஸ்னி தயாரிப்பில், 1994-ம் ஆண்டு, அனிமேஷன் படமாக வெளியாகி, மாபெரும் வெற்றியடைந்தது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு, Photorealistic Computer Animation தொழில்நுட்பத்தில் மறுஆக்கமாக மீண்டும் வெளியாகியிருக்கிறது.
அரசனாக ஆட்சியில் நீடித்திருப்பது என்பது காடானாலும் நாடானாலும் அவ்வளவு சுலபமான விஷயமில்லை. வலிமை, துணிச்சல், நேர்மை, பொறுப்புணர்வு என அரசனாக இருப்பதற்குரிய தகுதிகள் அனைத்தும் இருந்தாலும், ஓர் அரசன் சூழ்ச்சிகளாலும் துரோகத்தாலும் எப்போது வேண்டுமானாலும் வீழ்த்தப்படலாம். அதுவும் பதவி, ஆட்சி, அதிகாரத்தின் மீதிருக்கும் ஆசையின் காரணமாக அவன் தன் சொந்த உறவுகளாலேயே வீழ்த்தப்படலாம். அப்படி ஓர் அரசன்தான் முஃபாசா.
ஓர் அரசனுக்குரிய எல்லாத் தகுதிகளும் முஃபாசாவிடம் இருக்கின்றன. தனக்கு அடுத்து, நாட்டைப் பொறுப்பாகப் பார்த்துகொள்வதற்கு மகன் சிம்பா பிறந்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் இருக்கிறது முஃபாசா. சிம்பாவிடம், “தனக்குக் கிடைப்பதை எல்லாம் அனைவருக்கும் கொடுப்பவனே சிறந்த அரசன்” என்று ஓர் அரசனின் கடமைகளை விளக்குகிறது. சிம்பா பிறந்துவிட்டதால், அடுத்த அரசனாகத் தான் ஆக முடியாது என்ற பொறாமையால் முஃபாசாவைக் கொல்ல அதன் தம்பி ஸ்கார் திட்டமிடுகிறது. ஸ்காரின் சூழ்ச்சியிலிருந்து தப்பிக்க முடியாமல், மகனைக் காப்பாற்றும் முயற்சியில் உயிர்த் துறக்கிறது முஃபாசா. சித்தப்பாவின் சூழ்ச்சியைப் புரிந்துகொள்ளாமல் தன்னைக் காப்பாற்றுவதற்காகத்தான் அப்பா உயிரிழந்துவிட்டார் என்ற குற்றவுணர்ச்சியில் நாட்டை விட்டே சென்றுவிடுகிறது சிம்பா.
சிம்பாவுக்கு டிமோன், பும்பா என்ற இரண்டு நண்பர்கள் கிடைக்கிறார்கள். இருவரும் சிம்பாவுக்கு வாழ்க்கையில் எதற்காகவும் கவலைப்படத் தேவையில்லை என்பதை வலியுறுத்தும் ‘ஹக்குனா மட்டாடா’ (ஆப்பிரிக்காவின் சுவாஹிலி மொழியில் ‘கவலை வேண்டாம்’ என்று அர்த்தம்.) என்ற தத்துவத்தைக் கற்றுக் கொடுக்கிறார்கள். சிம்பாவுக்குத் தன் குற்றவுணர்வுகொண்ட கடந்த காலத்தை மறக்க இந்தத் தத்துவம் உதவி செய்கிறது. ஆனால், முஃபாசாவும் சிம்பாவும் இல்லாமல் ஸ்காரின் ஆட்சியில் நாடு பல இன்னல்களை எதிர்கொள்கிறது.
ஸ்காரின் கொடுமைகளிலிருந்து நாட்டை மீட்க சிம்பாவின் தோழி நாளா உதவி தேடி வருகிறது. உயிர் இழந்துவிட்டதாக நினைத்துகொண்டிருந்த சிம்பா உயிரோடு இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறது நாளா. முஃபாசாவின் பொறுப்புகளை, சிம்பா ஏற்க வேண்டும் என்கிறது. ஆனால், சிம்பாவுக்கு நண்பர்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையை விட்டுவிட்டு, மீண்டும் சூழ்ச்சிகள் நிறைந்த வாழ்க்கைக்குத் திரும்ப மனமில்லை. தந்தையின் வழியில் ஓர் அரசனாக சிம்பா தன் கடமையை நிறைவேற்றியதா, இல்லையா என்பதுதான் ‘த லயன் கிங்’ திரைப்படம். ஒரு காட்டு ராஜாவின் வாழ்க்கையை மீண்டும் உயிர்ப்புடன் திரையில் கொண்டுவந்திருக்கிறது.