Published : 24 Jul 2019 11:47 AM
Last Updated : 24 Jul 2019 11:47 AM

கதை: புலிப்பல்லும் நரிக்கொம்பும்

எஸ். அபிநயா, 11-ம் வகுப்பு, நாளந்தாஸ் மேல்நிலைப் பள்ளி, சின்னதம்பிபாளையம், திருச்செங்கோடு.

சிங்கம் உடல் நலமின்றி இருந்தது. கரடி கொடுத்த மூலிகைச்சாறு கொடுத்தும் சரியாகவில்லை. சிங்கத்துக்கு மிகவும் கவலையாகிவிட்டது. அப்போது சிங்கத்தின் உடல் நலனை விசாரிப்பதற்காகப் பக்கத்து காட்டிலிருந்து நரி வந்தது. அருகில் இருந்த புலியைக் கண்டதும் நரியின் முகம் மாறியது. ஒரு முறை தன்னை ஓட ஓட விரட்டிய புலியை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று நினைத்திருந்தது. இதுதான் அதுக்கான நேரம் என்று மகிழ்ந்தது.
“சிங்கராஜா, தங்களுக்கு வந்திருப்பது நோய்போல் தெரியவில்லை. தாங்கள் கொன்ற விலங்குகளின் சாபம்போல் தெரிகிறது. இதுக்குப் பரிகாரமாகப் புலிப்பல்லை எடுத்து, தாயத்து செய்து கட்டிக்கொண்டால் குணமாகிவிடுவீர்கள். மனிதர்கள் இப்படித்தான் தாயத்து கட்டியிருக்கிறார்கள்” என்றது நரி.

“ஐயோ… இது மூடநம்பிக்கை சிங்கராஜா. மூலிகைச்சாற்றைக் குடித்து வந்தாலே குணமாகிவிடுவீர்கள்” என்று பதறியது கரடி.
புலி கோபத்துடன் நரியைப் பார்த்துக்கொண்டிருந்தது. நரிக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“நரி சொல்வதுபோல் புலியின் பல்லைத் தாயத்து செய்து போட்டால் விரைவில் குணமாகிவிடும் என்று தோன்றுகிறது” என்றது சிங்கம்.
”என்ன சொல்கிறீர்கள் சிங்கராஜா?” என்று பதறியது புலி.
“ஒரே ஒரு பல்தானே கேட்கிறேன். எனக்காகக் கொடுக்கக் கூடாதா?”
“உங்களுக்குத் தெரியாதது அல்ல. நமக்குப் பற்களும் நகங்களும்தான் ஆயுதம். ஒரு பல்லைக் கொடுத்துவிட்டு நான் என்ன செய்வேன்?”
”புலிப்பல்லில் நோய் குணமாவதை விட, நரிக்கொம்பில் விரைவாக குணமாகும் என்று மனிதர்கள் சொல்வார்கள் சிங்கராஜா.”
”ஐயோ, எனக்கு ஏது கொம்பு?”
“நரிக்கு வெளியில் தெரியாத கொம்பு தலைக்குள் இருக்கிறது என்று மனிதர்கள் சொல்கிறார்கள் சிங்கராஜா. மண்டையை உடைத்து, கொம்பை எடுத்துவிடலாம்” என்று புன்னகையோடு சொன்னது புலி.
“இல்லை இல்லை, புலி சொல்வதை நம்பாதீர்கள் சிங்கராஜா. நரிக்கொம்பை விட, புலிப்பல்தான் சிறந்தது.”
“இல்லை, நரிக்கொம்புதான் சிறந்தது.”

“நிறுத்துங்கள். கரடியே, புலிப்பல்லையும் நரிக்கொம்பையும் தாயத்து செய்து கொடுங்கள். என் நோய் வேகமாகக் குணமாகட்டும். தாமதிக்க வேண்டாம்” என்றது சிங்கம்.
“உங்கள் உடல் நலனை விசாரிக்க வந்தது குற்றமா? வருகிறேன்” என்று சொல்லிவிட்டு ஓடியது நரி. இருந்தால் தனக்கு ஆபத்து என்று புலியும் அங்கிருந்து அகன்றது.
“இருவரையும் விடாதீர்கள். எனக்கு இரண்டு தாயத்துகளுமே வேண்டும்.”
“உத்தரவு சிங்கராஜா. இன்று மாலைக்குள் தாயத்துகளுடன் வருகிறேன்” என்று விடைபெற்றுக்கொண்டு கிளம்பியது கரடி.


சிறிது நேரத்தில் புலியையும் நரியையும் கண்டுபிடித்தது கரடி.
“இருவரும் ஓட வேண்டாம். உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன்” என்று கரடி சொன்னதும் இரண்டும் அருகில் வந்தன.
“நான் கொடுக்கும் மூலிகையிலேயே சிங்கராஜா குணமாகிவிடுவார். புலியை மாட்டிவிட நீ நினைத்தாய். புலி உன்னை மாட்டிவிட்டது. மாலைக்குள் தாயத்துகளைக் கொண்டுவந்து தருவதாக சிங்கராஜாவுக்கு வாக்களித்துவிட்டேன். என்ன செய்யப் போகிறீர்கள்?”
“எங்களை எப்படியாவது காப்பாற்றிவிடு. இனி இதுபோல் ஒருவரை மாட்டிவிட நினைக்க மாட்டோம்” என்றன நரியும் புலியும்.

“கவலைப்படாதீர்கள். சிங்கராஜா ஓரளவு குணமாகிவிட்டார். மூலிகைச்சாற்றிலேயே முற்றிலும் குணமாகிவிடுவார். நீங்கள் இருவரும் ஆற்றங்கரையில் இருக்கும் பளபளப்பான கற்களைக் கொண்டு வாருங்கள். புலிப்பல், நரிக்கொம்புபோல் செதுக்கி, தாயத்தாக வைத்துவிடலாம்” என்றது கரடி.
நன்றி சொல்லிவிட்டு, மகிழ்ச்சியோடு புலியும் நரியும் ஆற்றங்கரைக்கு ஓடின.
மாலையில் தாயத்துகளுடன் சிங்கராஜாவிடம் வந்தது கரடி.
“புலியும் நரியும் எங்கே?’’
“புலிக்கு வாய் சரியாக நாளாகும். மண்டையைப் பிளந்தால் நரி பிழைக்குமா, சிங்கராஜா?’’
இரண்டே நாட்களில் உடல் குணமாகி எழுந்து நின்றது சிங்கம். மூன்றாவது நாள் வன உலாவுக்குக் கிளம்பியது.
“கரடியே உனக்குதான் நன்றி. உன்னுடைய மூலிகையால் குணமாகாத நோய், புலிப்பல் தாயத்தாலும் நரிக்கொம்பு தாயத்தாலும் குணமாகிவிட்டது. மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றது சிங்கம்.
“நீங்கள் என்னைத் தவறாக நினைக்காவிட்டால் ஒன்று சொல்லட்டுமா?”

“என்னிடம் தயக்கம் எதுக்கு?”
“தாயத்தில் இருந்தது புலிப்பல்லும் இல்லை, நரிக்கொம்பும் இல்லை சிங்கராஜா. வெறும் கற்கள். மனிதர்கள்தாம் மூடநம்பிக்கையில் நமக்குத் தீங்கு இழைக்கிறார்கள் என்றால், நாமும் அதே செயல்களைச் செய்யலாமா? இனி இப்படி யாராவது சொன்னால் நம்பிவிடாதீர்கள். நீங்கள் புத்திசாலி என்பதால்தான் உங்களை ராஜாவாக வைத்திருக்கிறோம். எங்களைப் பத்திரமாகப் பாதுகாப்பதுதான் உங்கள் பொறுப்பு” என்றது கரடி.
“மூடநம்பிக்கையில் இருந்த என்னை மீட்டு எடுத்துவிட்டாய். இனிமேல் இப்படி ஒரு செயலைச் செய்ய மாட்டேன். புலியையும் நரியையும் வரச் சொல். நான் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்றது சிங்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x