Published : 24 Jul 2019 10:30 AM
Last Updated : 24 Jul 2019 10:30 AM

சாதனை: திருக்குறள் நளாயினி

இரா. தினேஷ்குமார் 

திருக்குறள் முழுவதையும் மனப்பாடம் செய்து, விளக்கத்துடன் சொல்கிறார் ஆறாம் வகுப்பு மாணவி நளாயினி. எடுத்துக்காட்டுக்கு, 887-வது குறள் என்று சொன்னால் சிறிதும் யோசிக்காமல் சரியாகச் சொல்லி, விளக்கமும் அளித்து அசத்துவது இவரது சிறப்பு.

“மூன்றாம் வகுப்பு படிக்கும்போது வகுப்பாசிரியர் லட்சுமணன் திருக்குறளை ஒப்பிக்கச் சொல்லி, அருள்செல்வி ஆசிரியரிடம் அனுப்பி வைத்தார். திருக்குறள் புத்தகம் இல்லை என்பதால் நோட்டில் எழுதி வைத்துக்கொண்டு படிப்பேன். என்னுடைய ஆர்வத்தைப் பார்த்து, தனிக் கவனம் செலுத்தினார் ஆசிரியர். நான்காம் வகுப்பில் 120 திருக்குறள்களை ஒப்பிக்கும் அளவுக்கு வந்தேன். அப்போதுதான் நினைவாற்றலை அதிகரிக்கும் விதத்தில் வரிசை எண்களோடு படிக்கும்படி அறிவுறுத்தினார்.

நானும் அதைச் சரியாகச் செய்தேன். அந்த ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவில் வரிசை எண்களை அவர் சொல்லச் சொல்ல, நான் குறள்களைச் சரியாகச் சொன்னேன். அதைப் பார்த்து தலைமை ஆசிரியர், திருக்குறள் புத்தகத்தைப் பரிசாக வழங்கினார்” என்கிறார் நளாயினி. நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் இவர், பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் பங்கேற்று, 5 நிமிடங்களில் 100 திருக்குறள்களைச் சொல்லி, முதல் பரிசைப் பெற்றார்.

9 வயதில் 1330 திருக்குறள்களையும் ஒப்பித்து முடித்துவிட்டார்! பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வரும் நளாயினி, சமீபத்தில் திருவண்ணாமலை ஆட்சியரிடமிருந்து பாராட்டுகளையும் பரிசுகளையும் பெற்றிருக்கிறார்.
“எங்களுடையது ஏழ்மையான குடும்பம். எங்கள் ஆசிரியர்களால்தான் ஒரு சாதனையாளராக மாறியிருக்கிறேன். நன்றாகப் படிப்பேன். ஐ.ஏ.எஸ். படித்து, மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என் லட்சியம். திருக்குறளை ஒப்பிப்பதைத் திறமையாக மட்டும் நினைக்காமல், அது சொல்வதுபோல் வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறேன்” என்கிறார் நளாயினி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x