மேஜிக்...மேஜிக்..- மாயமாக மறையும் நாணயம்
குழந்தைகளே, போன வாரம் சொல்லிக் கொடுத்த கிரேயான் மந்திர ஜாலத்தைச் செய்து பார்த்தீர்களா? இந்த வாரம் நாணயம் ஒன்றை மறைய வைத்து உங்கள் நண்பர்களிடம் வித்தை காட்ட நீங்கள் தயாரா?
தேவையான பொருட்கள்:
மேஜை, கருப்புத் துணி, நாணயம்.
மேஜிக் செய்யும் முறை:
1.) மேஜையில் கறுப்புத் துணியை விரியுங்கள். ஒரு நாணயத்தை எடுத்து அனைவருக்கும் காட்டுங்கள்.
2.) இப்போது உங்கள் இடது கையை மடக்கி, உங்கள் கையின் முட்டியைக் கருப்புத் துணியின் மீது வையுங்கள். உங்கள் கை இடது தோளைத் தொடுகிறவாறு மடக்கி வைக்க வேண்டும்.
3.) நாணயத்தை எடுங்கள். அதை இடது பக்க முழங்கையில் வைத்து வலது கையால் மேலும் கீழுமாகத் தேயுங்கள்.
4.) நாணயத்தைத் தேய்த்துக் கொண்டு உங்கள் நண்பர்களிடம் பேச்சுக்கொடுங்கள். பேசிக்கொண்டே நாணயத்தைத் தவற விடுவது போலச் செய்யுங்கள். மேசையில் நாணயம் விழுந்ததும், அதை வேகமாக இடது கையில் எடுத்து, வலது கைக்கு மாற்றி மீண்டும் கையில் தேய்க்க ஆரம்பியுங்கள்.
5.) இப்படியே இரண்டு மூன்று முறை நாணயத்தைக் கீழே போட்டு இடது கையிலிருந்து வலது கைக்கு மாற்றித் தேயுங்கள்.
6.) கடைசியாக நாணயத்தைக் கீழே போட்டு இடது கையில் எடுத்து, வலது கைக்கு மாற்றுவது போல் பாவனை செய்யுங்கள். ஆனால், நாணயத்தை வலது கைக்கு மாற்றக் கூடாது. இப்போது மடக்கி வைத்துள்ள இடது கையிலேயே இருக்கும். ஆனால், நாணயம் இருப்பது போல வலது கையில் தேய்த்துப் பாவனை செய்யுங்கள். அந்த இடைப்பட்ட நேரத்துக்குள் இடது கையில் உள்ள நாணயத்தைச் சட்டை காலருக்குள் யாரும் பார்த்துவிடாதபடி ஒளித்து வைத்து விடுங்கள்.
7.) தொடர்ந்து நாணயத்தை முழங்கையில் தேய்ப்பது போலப் பாவனை செய்து, நாணயம் அப்படியே முழங்கைக்குள் மறைந்துவிட்டதாகக் கைகள் இரண்டையும் நீட்டி உங்கள் நண்பர்களிடம் காட்டுங்கள்.
இந்த மேஜிக்கை ஒன்றுக்கு இரண்டு முறை பயிற்சி செய்த பிறகு சுலபமாகச் செய்ய முடியும். எப்போது வேண்டுமானாலும் உங்கள் நண்பர்களிடம் செய்து காட்டி வியக்க வைக்கலாம்.
