Last Updated : 28 May, 2014 03:05 PM

 

Published : 28 May 2014 03:05 PM
Last Updated : 28 May 2014 03:05 PM

கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன?

கண்டங்களுக்கு அந்தப் பெயர்கள் எப்படி வந்தன? இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள்? இது பற்றிப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இல்லை. ஆனாலும் சில தகவல்கள் பரவலாகப் பேசப்படுகின்றன. அவற்றைப் பார்ப்போமா?

ஆஃப்ரிக்கா

ஆ ஃப்ரிக்காவிற்கு எதனா ல் அந்தப் பெயர்? ஆஃப்ரி என்ற பழங்குடியினர் அங்கே தொடக்கத்தில் வசித்தனர். “ஆஃப்ரிக்கரின் நிலம்’’ என்ற அர்த்தத்தில் ஆஃப்ரிக்கா என்று இதற்குப் பெயரிடப்பட்டது.

ஆஃப்ரிக்காவுக்கு அந்தப் பெயர் சூட்டப்பட்டதற்கு வேறொரு காரணமும் சொல்கிறார்கள். அஃபர் என்றால் ஃபோனிஷியன் மொழியில் (மத்திய தரைக் கடல் தீவுகளில் பேசப்பட்ட மொழி இது). ‘ தூசி’ என்ற அர்த்தம். ‘ தூசிகளின் நிலம்’ என்று இதற்கு அர்த்தம். ஆஃப்ரிக்காவின் வடக்குப் பகுதியில் வெப்பமான, பாலைவனம் போன்ற சூழல் நிலவுவது ஞாபகம் இருக்கிறதா?

அண்டார்டிகா

அண்டார்டிகா என்பதும் கிரேக்க வார்த்தை தான். இதன் பொருள் ‘வடக்கிற்கு எதிரானது’. பூமியின் தெற்குப் பகுதி நுனியில்தானே அண்டார்டிகா இருக்கிறது. எனவே இது பொருத்தமானதுதான்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிஸ் என்றால் லத்தீன் மொழியில் ‘தெற்கில் உள்ள தெரியாத பகுதி’ என்ற அர்த்தம். அக்கால ரோமானியர்களுக்கு ஆஸ்திரேலியாவை அடைவதற்கான கடல் வழி இல்லை. எனவே இந்தப் பகுதியைப் பின்னர்தான் அடைந்தார்கள். ஆஸ்திரேலியா என்று போகிற போக்கில் இதற்குப் பெயர் சூட்டப்பட்டது. அதுவே நிலைத்து விட்டது.

ஆசியா

ஆசியா என்பதும் கிரேக்க வார்த்தைதான். ‘ஏஜியா’ என்ற வார்த்தையில் இருந்து கொஞ்சம் மாறிப்போன வார்த்தை இது. கி.மு. 440-ல் இருந்தே இந்தக் கண்டம் ஆசியா என்று அழைக்கப்படுகிறது. ஏஜியன் கடலின் கிழக்குக் கரையில் இருந்த பகுதிகளை முன்பு ஆசியா என்று குறிப்பிட்டார்கள். பிறகு மொத்த கண்டத்திற்கும் அந்தப் பெயர் வந்துவிட்டது.

ஐரோப்பா

ஐரோப்பாவைக் குறிக்கும் ‘யுரோப்’ என்ற வார்த்தை யுரோபா என்பதிலிருந்து வந்தது. கிரேக்கப் புராணத்தின்படி ஜீயஸ் என்பவர் பிற கடவுளருக்கும், மனிதர்களுக்கும் தந்தையாகக் கருதப்படுகிறார். கிரீஸில் உள்ள மவுண்ட் ஒலிம்பஸ் என்ற மலையிலிருந்து இவர் ஆட்சி செய்கிறார். இவரின் காதலிக ளில் ஒருத்தியின் பெயர் யுரோப்பா. ஜீயஸ் யுரோப்பாவை ஒரு வெள்ளை எருதின் வடிவத் தில் வந்து கவர்ந்து சென்றாராம். கிரேக்க ஓவியங்களில் வெள்ளை எருதின்மீது அமர்ந்திருக்கும் யுரோப்பாவின் உருவம் மிகப் பிரபலம்.

அமெரிக்கா

அமெரிக்கோ வெஸ்புகி என்பவரின் பெயரில்தான் அமெரிக்கா என்று பெயரிடப்பட்டது என்று பாடங்களில் படித்திருக்கிறோம். 1499-ல் இந்தப் பகுதியை அடைந்தவர் வெஸ்புகி. இது ஆசியாவின் ஒரு பகுதி இல்லை என்பதையும், இது புதிய பகுதி என்பதையும் வெஸ்புகி கண்டறிந்து புத்தகமாக வெளியிட்டார். அந்தப் புத்தகம் எல்லா ஐரோப்பிய மொழிகளிலும் வெளியானது.

1507-ல் ஜெர்மனியைச் சேர்ந்த மார்ட்டின் வல்ட்ஸீமுல்வர் என்பவர் உலக வரைபடத்தை உருவாக்கியபோது அமெரிக்காவையும் அதில் இணைத்தார். கொலம்பஸின் பயணங்கள் பற்றி அவருக்குத் தெரியாததால், வெஸ்புகியின் பெயரின் முதல் பகுதியான ‘அமெரிக்கா’ என்பதையே பெயராக வைத்தார்.

இப்போது புரிகிறதா, கண்டங்களுக்கு ஏன் அந்த பெயர்கள் என்று?



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x