

இந்தியாவின் அடுத்த சதுரங்க (செஸ்) ராஜாவாக யார் வருவார்? அந்தச் சிறுவன்தான் வருவார் என இந்திய செஸ் ஜாம்பவான்கள் பலரும் கணித்திருக்கிறார்கள். அவர் வேறு யாருமல்ல. மதுரையைச் சேர்ந்த 15 வயதான அரவிந்த் சிதம்பரம். வருங்கால விஸ்வநாதன் ஆனந்த் என்று சொல்லப்படும் இவரது பூர்வீகம் காரைக்குடி. பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுரை திருநகரில்.
3 வயது குழந்தையாக இருந்தபோது தந்தையை இழந்த அரவிந்துக்கு, தாய்தான் எல்லாமே. அவரது வழிகாட்டுதல்படி நடந்த அரவிந்த், 7-ம் வயதில் செஸ் களத்தில் குதித்தார். 4-ம் வகுப்பிலேயே தீவிர செஸ் வீரராக உருவெடுத்தார். செஸில் சாதிக்க வேண்டும் என்பதற்காகவே இப்போது சென்னைக்கு இடம் பெயர்ந்துவிட்டார்.
அரவிந்த் அப்படி என்னத்தான் சாதனை படைத்தார் என்றுதானே கேட்க வருகிறீர்கள்? தேசிய செஸ் போட்டியில் 11, 13 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியிலும் பட்டம் வென்றிருக்கிறார். இத்தனைக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் பங்கேற்றபோது அவருடைய வயது 12. இந்தியாவில் மட்டுமல்ல, வெளி நாடுகளிலும் அரவிந்த் வெற்றிக் கொடியைப் பறக்க விட்டவர். ஸ்லோவேனியா நாட்டில் நடைபெற்ற 14 வயதுக்குட்பட்டோருக்கான உலக செஸ் போட்டியில் 2-வது இடத்தைப் பிடித்து இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்திருக்கிறார்.
கடந்த ஆகஸ்டில் தற்போதைய உலக சாம்பியன் கார்ல்சனுக்கே சவால் விட்டு விளையாடித் தன் திறமையை நிரூபித்தார் அரவிந்த். அவருடனான போட்டியை டிராவில் முடித்தார் என்றால், அரவிந்தின் திறமை அசாத்தியமானது அல்லவா? கடந்த நவம்பரில் சென்னையில் உலக செஸ் சாம்பியன் போட்டியின் ஒரு பகுதியாக சென்னை நேரு மைதானத்தில் சென்னை கிராண்ட் மாஸ்டர் ஓபன் போட்டி நடைபெற்றது. இதில் 4 கிராண்ட் மாஸ்டர்களை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தைச் சூடினார் அரவிந்த்.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 21 கிராண்ட் மாஸ்டர்கள், 30 இண்டர்நேஷனல் மாஸ்டர்கள் பங்கேற்ற சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டியில் அரவிந்த் விளையாடிய விதம் அபாரமாக இருந்தது. இதைப் பார்த்து ரசிகர்கள் மட்டுமல்ல, போட்டியில் பங்கேற்ற எஞ்சிய கிராண்ட் மாஸ்டர்களும் மூக்கில் விரல் வைத்தனர்.
இதன் மூலம் கிராண்ட்மாஸ்டர் போட்டியில் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற பெருமையையும், முதல் கிராண்ட்மாஸ்டர் நார்ம்ஸையும் பெற்றார் அரவிந்த். அப்போது அவருக்கு வயது 14. உலக செஸ் போட்டியில் செய்தி சேகரிக்க வந்திருந்த ஐரோப்பியப் பத்திரிகையாளர்கள் அரவிந்தைத் தேடி ஓடினார்கள்.
கடந்த ஏப்ரலில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற போட்டியில் 2-வது கிராண்ட் மாஸ்டர் நார்ம்ஸைப் பெற்றுள்ள அரவிந்த், அடுத்ததாக ருமேனியாவில் நடைபெறவுள்ள மற்றொரு போட்டியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். அதில் அவர் பங்கேற்று 3-வது நார்ம்ஸ் பெறும் பட்சத்தில் இளம் கிராண்ட் மாஸ்டராக உருவெடுப்பார்.
இப்போது, தலைப்பை மீண்டும் ஒருமுறை படியுங்கள்!