

மழைக் காலத்தில் தினமும் நீங்கள் டி.வி.யைப் பார்ப்பீர்கள் தானே? கன மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய அங்கிள் ரமணன் சொல்லும்போது, பள்ளிக்கூடத்துக்கு லீவு கிடைக்குமா என்று ஆவலாக எதிர்பார்ப்பீர்கள் இல்லையா? சரி, மழை, வெயில், பனி பற்றிய எல்லாத் தகவல்களை வானிலையைக் கவனிக்கும் விஞ்ஞானிகளால் மட்டும்தான் சொல்ல முடியுமா?
மற்றவர்களால் சொல்ல முடியாதா? ஏன் முடியாது, நிச்சயம் சொல்ல முடியும் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் புதுச்சேரி செல்லிப்பட்டு கிராமத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள்! வானிலையைக் கணிக்கும் அளவுக்கு இவர்கள் என்ன செய்தார்கள்?
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசு பள்ளிகளுக்காக ‘அறிவியல் உருவாக்கும் திட்டம்’ கடந்த ஒன்பது ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது. இத்திட்டத்தின் கீழ் அறிவியல் தொடர்பான போட்டிகளைப் புதுச்சேரி அறிவியல் இயக்கம், பிரான்ஸ் நாட்டு பாரிஸ் பல்கலைக்கழகம், புதுச்சேரி அரசு அறிவியல் தொழில்நுட்பத்துறை, பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக நடந்த போட்டியில்தான் ‘உள்ளூர் வானிலை மையம்’ அமைத்ததற்காகச் செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதல்பரிசை வென்றுள்ளனர். 40 ஆய்வுத் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டதில் முதல் பரிசை இந்தப் பள்ளி மாணவர்கள் பெற்று அசத்தியிருக்கிறார்கள்.
செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ராஜ்குமார் வழிகாட்டுதலுடன் உள்ளூர் வானிலை மையத்தை மாணவர்கள் மணிகண்டன், பவித்ரா, நிவேதா, பூஜா, ராம்குமார் ஆகியோர் வடிவமைத்தார்கள். இவர்களின் வடிவமைப்பு முதலிடம் பிடித்ததால் 300 யூரோக்கள் (ஒரு யூரோ = ரூ.72.35) பரிசு தரப்பட உள்ளது. உள்ளூர் வானிலை மையத்தை ஏன் இவர்கள் தேர்வு செய்தார்கள்?
முதல் பரிசு பெற்ற பள்ளி மாணவர்களின் ஆசிரியர் ராஜ்குமார் இதுபற்றி என்ன கூறுகிறார்? “தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில இந்த முறை வானிலை பற்றி விவாதிச்சாங்க. அதனால உள்ளூர் வானிலை மையம் அமைக்கலாம்னு முடிவு பண்ணோம். இதுக்காகப் போன வருஷம் விண்ணப்பிச்சோம்.
அனுமதி கிடைச்சவுடன் போன ஜனவரி 1-ம் தேதி முதல் ஏப்ரல் 25-ம் தேதி வரை வானிலை ஆராய்ச்சி முடிவுகளைச் சமர்ப்பிச்சோம். இப்போது விருது கிடைத்திருப்பது எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது” என்று சொல்கிறார் ராஜ்குமார்.
எப்படி வானிலை விவரங்களைச் சேகரித்தோம் என்பது பற்றி திட்டத்துக்குத் தலைவராக இருந்த மாணவர் மணிகண்டன் கூறுவதைப் படியுங்களேன். “இத்திட்டத்தை ஆரம்பிக்கிறப்ப நாங்கள் -7ம் வகுப்பு படிச்சோம். எங்க குழுவுல இருக்குற மாணவர்கள் தினமும் செல்லிப்பட்டு பகுதியில எவ்வளவு வெயில் பதிவாகுது, காற்றோட ஈரப்பதம், மழை அளவு எவ்வளவுன்னு கருவிகளை வைச்சி விவரங்களைச் சேகரிச்சோம்.
நாங்க சேகரிச்ச தகவல்களையும், செய்தித் தாள்களில் வரும் வானிலை விவரங்களையும் ஒப்பிட்டுப் பார்ப்போம். அப்படி ஒப்பிட்டுப் பாக்குறப்ப வெயில் அளவு நகரங்களைவிட எங்க கிராமத்தில குறைவா இருக்குறதைப் பார்த்தோம். அதற்கு எங்க கிராமத்தில் மரம் அதிகளவுல இருக்குறது ஒரு காரணம்னு தெரிய வந்துச்சி.
பாரிஸ் பல்கலைக்கழக விருது கிடைச்சிருக்குறது அவ்வளவு சந்தோஷமா இருக்கு. இந்த விருதை எங்க கிராமமே கொண்டாடுது” என்று பெருமை பொங்கக் கூறுகிறார் மணிகண்டன்.
வருங்காலத்தில் வானிலையைக் கணிக்க விஞ்ஞானிகள் ரெடி!