Published : 10 Jun 2015 02:21 PM
Last Updated : 10 Jun 2015 02:21 PM

ஜல்... ஜல்... சத்தமும் ஜவ்வு மிட்டாயும்!

கொழுகொழு பொம்மை. சில்க் துணி உடுத்திக் கொண்டு கையில் சதங்கையைக் கட்டிக்கொண்டு ‘ஜல் ஜல்’ என்று ஒலிக்கிறது. சுற்றிலும் சிறுவர் சிறுமிகளின் கூட்டம்.

‘எனக்குத் தேளு...!’

‘எனக்குப் பாம்பு, அதுல அஞ்சத் தலை பாம்பு...!’

‘எனக்கு கிரிக்கெட் மட்டை...!’

மழலைகள் குரலோசை மாறுபட்ட குழல் வாசிப்பு போல் காதுகளில் ஒலிக்கிறது.

பொம்மையின் உடம்பாக மினுக்கும் சிவப்பு, பச்சை, மஞ்சள், சந்தன வண்ணங்கள் கலந்த ஜவ்வு மிட்டாய் இழுக்கப்படுகிறது. குழந்தைகள் கேட்கும் உருவத்துக்கு வடிவமைத்துக் கையில் கட்டிவிட்டு, சடக்கென்று மீண்டும் ஒரு உரி.. இழுக்கப்பட்ட ஜவ்வு மிட்டாய் மீசையாய்க் குழந்தையின் உதட்டுக்கு மேலே ஒட்டிக் கொள்கிறது.

‘ஹேய்...ய்....!’ எனச் சிறுவர்களின் சிரிப்போசை...

‘எனக்கொண்ணு... எனக்கொண்ணு...!’ ஒவ்வொரு பிஞ்சும் தன் மேலுதட்டுக்கு மேலே, மூக்குக்குக் கீழே மிட்டாயை ஒட்டச் சொல்லுகிறது. ஒட்டிவிட்டு நடையைக் கட்டுகிறார் அந்த மிட்டாய் வியாபாரி. உங்கள் அம்மா, அப்பாவிடம் கேட்டால், அதை ஜவ்வு மிட்டாய் என்று சொல்வார்கள். அதன் உண்மையான பெயர் ‘பம்பாய் மிட்டாய்... பம்பாய் மிட்டாய்...!’

தொடர்ந்து மிட்டாய் வியாபாரியின் சத்தம். பொம்மையின் கைகள் எழுப்பும் ஜால்ரா சதங்கை சப்தம். தொடர்ந்து டவுசரை பற்றிக்கொண்டே அவர் பின்னால் ஓடும் வாண்டுகள் பட்டாளத்தின் குரலோசை ஊரையே துாக்குகிறது.

அநேகமாக 35, 40 வயதைக் கடந்துவிட்டவர்கள் குழந்தைப் பருவத்தில் பம்பாய் மிட்டாய் என்ற இந்த ஜவ்வு மிட்டாயை மறந்திருக்க முடியாது. அதிலும் கிராமத்துச் சூழலில் வளர்ந்தவர்கள் இந்தச் சுகமான அனுபவத்தை மறக்கவே முடியாது. தற்போது இந்த மிட்டாயை எங்கும் பார்க்க முடிவதில்லை. ஆனால், கோவை நகர வீதிகளில் மூன்று பேர் விற்பனை செய்வதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

கணேசன், அன்பு, முருகேசன் மூவரும் அண்ணன் தம்பிகள். கோவை பேரூர் அருகே உள்ள நாகராஜபுரத்தில் வசிக்கும் இவர்கள் இன்னமும் ஊர் ஊராகச் சென்று பம்பாய் மிட்டாயைக் குழந்தைகள் ரசனைக்கேற்ப கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். “தாத்தாவுக்குத் தாத்தா, தாத்தா, எங்கப்பா அப்பா காலத்திலிருந்தே இதுதான் எங்க தொழிலு” என்கிறார்கள் இவர்கள்.

“பேரூர்ல ஆளுக்கு ஆறு கிலோ மிட்டாயைச் சுருட்டீட்டு புறப்பட்டோம்ன்னா கோவில்பாளையம், அன்னூர், குனியமுத்தூர், மதுக்கரை, பொள்ளாச்சி, காரமடைன்னு போகாத ஊரே கிடையாது. குழந்தைகள் அந்த காலம் மாதிரியே எங்களைச் சுத்திக்கிறாங்க. பெரியவங்களும் அந்தக் காலத்து மிட்டாய் வந்துடுச்சுன்னு ஆர்வமாக வாங்கிப் புள்ளைகளுக்குக் கொடுத்துட்டு தாங்களும் சாப்பிடறாங்க. பொம்மையை கைதட்டிச் சதங்கை ஒலி எழுப்பிக் காட்டச் சொல்றாங்க!’ என இனிக்கும் மிட்டாயைப் போலவே பேசுகிறார்கள்.

“குழந்தைகள் கண்ணு முன்னாலே தேளு, பாம்பு, வாத்து, மயில் பொம்மைக செஞ்சி தரப்போ குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை” என்று சொல்லும் இவர்கள், செய்யும் பொம்மைக்கு ஏற்பக் காசு வாங்குகிறார்கள். மீசை மிட்டாய் மட்டும் இலவசமாம்!

உங்க ஊருக்கும் அந்தக் காலத்து மிட்டாய்க்காரங்க வந்தா, மறக்காமல் மிட்டாயை வாங்கிச் சாப்பிடுகிறீர்களா?

படங்கள்: கா.சு. வேலாயுதன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x