

குட்மார்னிங், குட் ஈவினிங் என்ற வாசகத்துடன் அலங்கார அட்டைகள் வீடுகளில் தொங்குவதைப் பார்த்திருக்கிறீர்களா? அதேபோல அழகான வார்த்தைகளைத் தாங்கிபிடிக்கும் அலங்கார அட்டையை சிங்க முகத்தில் செய்து பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
இரண்டு கிளிப்புகள், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற காகிதம், மணிகள், கத்தரிக்கோல், பசை.
செய்முறை
1. மஞ்சள் நிற காகிதத்தை எடுத்துக்கொள்ளுங்கள். படத்தில் காட்டியபடி 10 செ.மீ. விட்டம் அளவுக்கு வட்டமாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். சிங்க முகத்துக்காக நீள்வட்டத்தில் காகிதத்தை வெட்டிக்கொள்ளுங்கள். காதுகளுக்காக இரண்டு சிறிய 0.5 செ.மீ. விட்டத்தில் வட்டங்களை வெட்டிக்கொள்ளுங்கள்.
2. இப்போது ஆரஞ்சு நிற காகிதத்தை எடுத்துக் கொள்ளுங் கள். ஒரு செ.மீ. அகலத்தில் நீளமான காகிதங்களை 15 முதல் 20 துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.
3. இப்போது வெட்டிய ஆரஞ்சுக் காகிதத்தைச் சுருள் சுருளாகச் சுற்றுங்கள். சுருளின் முடிவில் பசை கொண்டு ஒட்டிக்கொள்ளுங்கள்.
4. முதலில் வெட்டிய மஞ்சள் வட்டத்தின் மீது சுற்றிய சுருள் காகிதங்களைப் பசை கொண்டு ஒட்டிக்கொள்ளுங்கள்.
5. இப்போது நீள்வட்டத்தில் வெட்டிய காகிதத்தில் சிங்கத்தின் முகத்தை வரையுங்கள். கண்களுக்கான மணிகளை ஒட்டிவிடுங்கள். காதுகளுக்காக வெட்டிய இரண்டு சிறிய வட்டங்களை பசை கொண்டு மஞ்சள் காகிதத்தின் மேலே ஒட்டிக்கொள்ளுங்கள்.
6. இப்போது அதைத் திருப்பி, பின்பகுதியில் இரண்டு கிளிப்புகளைக் கால்களாக ஒட்டிக்கொள்ளுங்கள்.
7. இப்போது சிங்கம் ஒன்று உங்களுக்குக் கிடைத்து விட்டதா? கிளிப்பைப் பயன்படுத்தி உங்களுக்குப் பிடித்த குறிப்புகளை அதில் வையுங்கள்.