

ரொம்ப சின்ன வயதில் பொம்மை கார்களை வைத்து விளையாடி இருப்பீர்கள். பேட்டரி கார், ரிமோட் கார் என விதவிதமாகப் பொம்மை கார்களையும் பார்த்திருப்பீர்கள்.
ஆனால், பார்ப்பதற்கு பொம்மை கார் போலவே இருக்கும் நிஜக் கார் ஒன்றும் உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறது. சீனாவைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவரின் கற்பனையில் உருவான கார் இது. இந்த கார் உலகின் மிகச் சிறிய கார் என கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றிருக்கிறது.
ஷாங்காயைச் சேர்ந்த ஹீ ஸியாம் என்பவர்தான் இந்தக் காரை உருவாக்கியவர். இந்த கார் 35. செ.மீ.அகலத்திலும், 60 செ.மீ நீளத்திலும் உள்ளது. காரின் உயரம் எவ்வளவு தெரியுமா? 40 செ.மீ மட்டுமே.
பார்ப்பதற்கு இது மூன்று சக்கர குட்டி சைக்கிள் போலவே உள்ளது. நிஜக் கார்களில் இருப்பது போலவே இஞ்சின், பிரேக், கியர், ஹாரன், மியூசிக் பிளே சிஸ்டம் என எல்லா வசதிகளும் இந்தக் காரில் இருக்கிறது. காரை உருவாக்க மட்டும் 2 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. ஆறு மாதங்களுக்கு முன் வெளி உலகிற்கு இந்தக் காரை ஹீ ஸியாம் காட்டினார்.
எல்லாம் சரி, இந்தக் குட்டியூண்டு காரை இவர் ஏன் உருவாக்கினார்? உலகின் மிகச்சிறிய கார் என்ற கின்னஸ் சாதனை படைப்பதற்காக இந்தக் காரை உருவாக்கியதாக ஹீ ஸியாம் கூறுகிறார். அது மட்டுமல்ல, இந்தக் குட்டிக் காரை மிகவும் நெரிசலான சாலைகளிலும் சாவகாசமாக ஓட்டியும் செல்கிறார் இவர்.