Published : 10 Jun 2015 02:19 PM
Last Updated : 10 Jun 2015 02:19 PM

தளிர் கதை: ஈக்கி குச்சி மனிதன்

ஈக்கி குச்சி மனிதனை உங்களுக்குத் தெரியுமா? ஊசி நுழைய முடியாத சின்னஞ்சிறிய துளைக்குள்ளும் ஈசியாக நுழைந்துவிடும் திறமை படைத்தவன்தான் ஈக்கி குச்சி மனிதன். ஆனால், அவனுக்குப் பசி எடுத்துவிட்டால் போதும், யாரைப் பற்றியும் கவலைப்பட மாட்டான். என்னவெல்லாம் கிடைக்கிறதோ, எல்லாவற்றையும் மூக்குப் பிடிக்கத் தின்பான். எல்லாவற்றையும் தின்ற பிறகு, யானையைப் போலப் பெருத்துவிடுவான்!

ஒரு நாள் ஈக்கி குச்சி மனிதனுக்கு அகோரப் பசி. ஆள் இல்லாத ஒரு வீட்டின் சாவித் துவாரம் வழியாக, நல்ல பசியோடு உள்ளே நுழைந்தான் ஈக்கி குச்சி மனிதன். நன்றாகத் தின்று பெருத்த பிறகு, அவனால் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. வீட்டுக்குள்ளேயே மாட்டிக்கொண்டான்.

வெளியில் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பிவந்த அந்த வீட்டுக்காரர் வீட்டைத் திறந்து பார்த்தபோது, பயத்தில் அலறிவிட்டார். ஆம்! யானைக் கால் போன்று பெருத்துக் கிடந்தான் ஈக்கி குச்சி மனிதன். அவனைக் கண்டு மிரண்டு போய் ஊரைக் கூட்டினார்.

ஊர் மக்கள் எல்லாமே வீட்டின் முன்னால் ஒன்று கூடினர். பிறகு எல்லோரும் ஒரு பெரிய கயிற்றைக் கொண்டு ஈக்கி குச்சி மனிதனைக் கட்டி, வீட்டுக்குள் இருந்து வெளியில் மெதுவாக இழுத்தார்கள். அவனைப் பார்க்கவே பயமாக இருந்தது.

ஈக்கி குச்சி மனிதனைப் பார்க்கப் பக்கத்து ஊரில் இருந்தெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்துகொண்டே இருந்தார்கள். ஊசித் துளை போன்ற தனது சிறு கண்களால் எல்லோரையும் பரிதாபமாகப் பார்த்தான் ஈக்கி குச்சி மனிதன்.

ஊரில் உள்ள சின்னஞ்சிறு குழந்தைகள் எல்லாம், அவனுடைய கால்களில் ஏறி இறங்கிச் சறுக்குமர விளையாட்டு விளையாடினார்கள். எந்தவொரு அசைவும் இல்லாமல் அவன் படுத்தே கிடந்தான்.

ஈக்கி குச்சி மனிதன் சாப்பிட்ட அனைத்தும் செரித்து மலமாக வெளியேறும்வரை, அவனுக்கு இந்தக் கதிதான். அதற்காகத்தான் ஈக்கி குச்சி மனிதன், இப்படி அசைவற்றுக் கண்களைச் சுருக்கிப் பார்த்துக்கொண்டு மட்டுமே கிடக்கிறான்.

ஊரில் நன்றாக இருட்டிவிட்டது. எல்லோரும் அவரவர் வீட்டுக்குப் போகத் தொடங்கிவிட்டார்கள். எல்லோருமாகச் சேர்ந்து ஈக்கி குச்சி மனிதனைக் கயிற்றால் கட்டி, ஊர் மண்டபத்தின் கருங்கல் தூணில் கட்டிப்போட்டார்கள். அதன்பிறகு எல்லோரும் அவரவர் வீட்டுக்குத் தூங்கப்போனார்கள்.

இரவு முழுவதும் நன்றாக அசந்து தூங்கினான் ஈக்கி குச்சி மனிதன். அவன் தின்ற அனைத்தும் ஒரு கட்டத்தில் செரித்தது. அதிகாலையில் அவனுக்கு வயிற்றைக் கலக்க ஆரம்பித்தது. விடிவதற்குள் அவனுடைய உடம்பு பழைய மாதிரியே இளைத்துவிட்டது. அப்போது ஊரில் யாருமே எழுந்திருக்கவில்லை. மற்றவர்கள் பார்ப்பதற்குள், அவன் ஊரைக் காலி செய்தான்.

அந்த ஊரை விட்டுப் போன பிறகும், ஈக்கி குச்சி மனிதனைப் பற்றிய ஆச்சரியம் மட்டும் அந்த ஊரில் எல்லோருக்குள்ளும் இருந்தது. ஈக்கி குச்சி மனிதனை மாயக்காரன் என்று அந்த ஊர் மக்கள் பேசிக்கொண்டார்கள்.

யார் இந்த ஈக்கி குச்சி?

அப்புறம் கொஞ்ச நாளைக்குப் பிறகு ஈக்கி குச்சி மனிதனுக்குத் தூக்கத்தில் ஒண்ணுக்குப் போற வியாதி வந்துடுச்சாம். ஒருநாள் அவன் அம்மா, அப்பாகூட வீட்டில் தூங்கிக்கிட்டு இருந்தானாம். ஈக்கி குச்சி மனிதன் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தபோது, அவனுடைய கனவில் பெரிய காடு வந்துச்சாம். காட்டுக்குள்ள நடந்து போனவன் பயத்தில் ஒண்ணுக்குப் போய்விட்டானாம். சட்டை, டவுசர் எல்லாம் நனைஞ்சு போச்சாம். வீடெல்லாம் ஒரே நாற்றம். அதைப் பொறுக்க முடியாத அவனோட அம்மா அடிச்சாங்க. “எங்கேயாவது போய்த் தொலை”ன்னு திட்டுனாங்க. அவனும் கோவிச்சிக்கிட்டு எங்கே போறதுன்னு தெரியாமல், வீட்டின் கூரையில் தொங்கிக்கிட்டு கத்திக்கொண்டே இருந்தானாம்.

நள்ளிரவில் நிலா நடுவானில் இருந்துச்சாம். அப்போது ஈக்கி குச்சி மனிதன் தொங்கிக்கிட்டே நல்லா குறட்டைவிட்டுத் தூங்க ஆரம்பிச்சான். எங்கேயோ நாய் குரைக்கும் சத்தம் கேட்டுச்சாம். அலறியடிச்சி அவன் தொபுகடீர்னு கீழே விழுந்தானாம்.

அம்மா, அப்பான்னு அவன் கத்தினதும் அக்கம்பக்கத்துல இருக்கிற எல்லோரும் எந்திருச்சாங்களாம். எல்லாருமே ஓடி வர்றதைப் பார்த்து, அடிக்க வராங்கண்ணு அவன் நினைச்சானாம். அந்தக் கூட்டத்த கண்டதும் பயந்துபோன ஈக்கி குச்சி மனிதன், அங்கிருந்து தப்பி ஓடிப் போயிட்டான். ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து நாலா திசையிலும் அவனைத் தேடினாங்க.

காலையில் எப்படியாவது ஈக்கி குச்சி மனிதனைக் கண்டுபிடிச்சுடலாம்னு ஊர் மக்கள் எல்லோரும் பேசிக்கொண்டார்கள். ஊருல வீடுவீடா தேடினாங்க. ஈக்கி குச்சி மனிதனின் அம்மாவும், அப்பாவும் அழுது கதறுனாங்க, “உங்க மகன் கிடைப்பான், அழாதீங்கன்னு” மத்தவங்க தைரியம் சொன்னாங்க. போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்ப் புகார் கொடுத்தாங்க. எல்லா இடத்துலேயும் தேடுனாங்க, ஆனா எங்கேயும் அவனைக் காணோம்.

வெத்தலை போட்டுப் பாத்தா அவன் இருக்குற இடம் தெரியும்னாங்க, அப்படிச் செஞ்சதும் வெத்தலையில ஈக்கி குச்சி மனிதன் வந்து அவன் 'பனங்காட்டுக்குள்ள இருக்கேன்'ன்னு சொல்லிட்டு, வெத்தலையில் இருந்து மறைஞ்சு போய்ட்டான்.

யாருமே பனங்காட்டுக்கு அவ்வளவு சீக்கிரமே போக முடியாது. “இதுவரைக்கும் போனவங்க யாரும் திரும்பி வந்ததில்லையே, இந்த ஈக்கி குச்சி மனிதன் எப்படித் திரும்பி வருவான்” என்று எல்லோருமே பேசிக்கொண்டார்கள்.

ஈக்கி குச்சி மனிதனைத் தேடிப் பனங்காட்டுக்குள் போய்ப் பார்ப்பது யார் என்று ஊர்மக்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள். ஈக்கி குச்சி மனிதனின் அம்மா “நானே போய், என் மகனைக் கூட்டிட்டு வரேன்னு” ஊர்மக்களிடம் சொல்லிவிட்டு வேகமாகப் பனங்காட்டை நோக்கி அழுதுகொண்டே ஓடினார்.

“போக வேண்டாம்” என்று சொல்லி ஊர் மக்கள் தடுத்தார்கள். ஆனால், ஈக்கி குச்சி மனிதனின் அம்மா யார் பேச்சையுமே கேட்கவில்லை. எல்லோரையும் தாண்டி, வேகவேகமா பனங்காட்டுக்குப் போய்க்கொண்டிருந்தார். எல்லோரும் கொஞ்சதூரம் அவர் பின்னாடியே போனாங்க, பிறகு ஆபத்தான பகுதிக்குள் நுழைந்துவிட்டால் வம்பு என்று மற்றவர்கள் ஊருக்குள் திரும்பி வந்துவிட்டார்கள்.

ஆனால், ஈக்கி குச்சி மனிதனின் அப்பா மட்டும் அந்தப் பனங்காட்டுக்குப் போகும் ஒத்தையடி பாதையில் உட்கார்ந்துகொண்டு, தன் மனைவியையும் மகனையும் நினைத்து அழுதுகொண்டிருந்தார். இரண்டு நாட்கள் ஆச்சு, ஒரு வாரம் ஆச்சு, அப்படியே நாட்கள் ஓடின. இரண்டு மாசம் ஆகியும் ஈக்கி குச்சி மனிதனின் அப்பா, அந்தப் பனங்காட்டு பாதையிலேயே உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தார். பசியில் வாடிக் கொண்டிருந்தார்.

அவருக்கு இரக்கப்பட்டு நாளுக்கு ஒருத்தராக ஊர் மக்கள் கஞ்சி காய்ச்சி கொண்டுபோனார்கள். ஆனால், அவர் யார் கூடவும் பேசப் பிடிக்காமல் பைத்தியம் பிடித்ததுபோல் சுற்றிக்கொண்டே இருந்தார். திடீரென ஒருநாள் தன் மகன் ஈக்கி குச்சியையும் மனைவியையும் தேடி, துணிந்து பனங்காட்டுக்குள் சென்றார். அங்கே ஈக்கி குச்சி மனிதன், தனது அம்மாவோடு சிலையாக நின்றுகொண்டிருந்தான்.

‘மாயா பஜாரு’க்கு இதுபோன்ற வகுப்பறை முயற்சிகள் வரவேற்கப்படுகின்றன.

ஓவியம்: ராஜே

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x