Last Updated : 03 Jun, 2015 12:45 PM

 

Published : 03 Jun 2015 12:45 PM
Last Updated : 03 Jun 2015 12:45 PM

கட்டை விரலின் கதை

அன்று ஞாயிற்றுக்கிழமை. விடுமுறை முடியப் போகும் நேரத்திலும் வீடு கலகலத்தது. குழந்தைகள் அங்குமிங்குமாய்க் குதித்தோடிக் கொண்டிருந்தனர்.

“டேய்… கூச்சல் போடாம, வெளிய போய் விளையாடுங்க…!” என்று அப்பா அதட்டினார்.

குழந்தைகள் ‘ஓ…ஓ…’வெனக் கூச்சலிட்டபடியே தெருவுக்கு ஓடி வந்தனர். குழந்தைகள் கூடினாலே விளையாட்டுதானே. விளையாட்டு என்றாலே கொண்டாட்டம்தானே..!

“என்னடா…விளையாடலாம்…?” என்று கேட்டான் ரகு.

“கண்ணாமூச்சி விளையாடலாம்…” என்றான் டேவிட்.

“வேணான்டா, கிரிக்கெட் விளையாடலாம்…”என்றான் கதிர். மொத்தக் குழந்தைகளும் இரு அணிகளாகப் பிரிந்தனர்.

கோகுல் அடித்த பந்து உயரே பறந்து, குட்டிச்சுவரைத் தாண்டி குப்பைமேட்டில் விழுந்தது.

பந்தை எடுத்துவர ஓடினான் ரகு. குப்பைமேட்டில் விழுந்த பந்தைத் தேடினான். பந்து குப்பையின் அடியில் கிடந்தது.

ஓடிப்போய்க் குனிந்து எடுத்தான். பக்கத்தில் சிவப்பாய் ஏதோ ஒன்று அசைந்தது. புழுவா, புது வகைப் பூச்சியா…சட்டென எதுவும் புலப்படவில்லை. வித்தியாசமாய்த் தெரிந்தது. சிறு குச்சியொன்றை எடுத்து, மெதுவாய்ப் புரட்டினான்.

லேசான முனகல் சத்தம் கேட்டது. கூர்ந்து கேட்டான்.

“யப்பா…யம்மா…வலிக்குதே..!”

கண்கள் அகலமாய் விரிந்தன. எங்கிருந்து இப்படியொரு சத்தம்…?

உற்றுப் பார்த்தான். அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை.

அசைந்துகொண்டிருந்தது புழுவல்ல…வெட்டப்பட்ட, ரத்தக் கறை படிந்த மனிதக் கட்டை விரல். அந்தக் கட்டை விரல்தான் வலி பொறுக்காமல் முனகியது.

“டேய்ய்ய்…எல்லாரும் இங்க வாங்கடா…”

ரகுவின் பெருங்கூச்சல் கேட்டு, மொத்தக் கூட்டமும் குப்பை மேட்டருகே குவிந்தது.

“என்னடா…என்னாச்சு…?”

பயம் விலகாத குரலில் ரகு சொன்னான்; “டேய்.. வெட்டித் துண்டான கட்டைவிரல் வலியால முனகுது…!”

‘கட்டை விரலா…? அது எப்படிப் பேசும்…?’

ஆளாளுக்கு முணுமுணுத்தபடி, ரகு காட்டிய இடத்தைப் பார்த்தனர்.

“டேய்…ஆமான்டா..மனுச விரல்டா…! அதுதான்டா முனங்குது…”

பயந்துகொண்டே ரகு கீழே குனிந்து, அந்தக் கட்டைவிரலைப் பார்த்துக் கேட்டான்.

“யார் நீ…? உனக்கு என்னாச்சு…? ஏன் இங்கே கிடக்கிறே…?”

லேசாய் அசைந்த கட்டை விரல், தன் கதையைச் சொல்லத் தொடங்கியது.

அஸ்தினாபுரம் – அழகான நாடு.

நாட்டை ஆண்டு வந்த பாண்டு மன்னனுக்கு ஐந்து குழந்தைகள்: தர்மன், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன். இவர்கள் ஐந்து பேருக்கும் முறையான பயிற்சிகள் அளிக்க குல குரு துரோணாச்சாரியாரைச் சந்தித்தார் பாண்டு மன்னன்.

“இனி,உமக்குக் கவலை வேண்டாம். இவர்கள் எல்லா வித்தைகளையும் திறம்படக் கற்று, எல்லோரும் மகிழும்படிச் செய்வார்கள்…” என்றார் துரோணர். ஐந்து புதல்வர்களும் துரோணாச்சாரியாரின் காலில் விழுந்து வணங்கினர்.

“முதலில், வில் வித்தை கற்றிட உங்கள் கவனத்தைச் சிதறவிடாமல் ஒருமுகப்படுத்திட வேண்டும்…” என்றார் துரோணாச்சாரியார். “அப்படியே ஆகட்டும் குரு” என ஐவரும் மன உறுதியுடன் கூறினர்.

ஏகலைவன் வேட்டுவ குலத்தைச் சேர்ந்த சிறுவன். அவனுடைய தந்தை வேட்டைக்குக் கிளம்பியதும், “நானும் வருகிறேன்…” என்றான் ஏகலைவன்.

“வேண்டாம் மகனே. உனக்குப் போதிய பயிற்சி கிடையாது. காட்டுக்கு வந்தால் பல்வேறு வித்தைகள் தெரிந்திருக்க வேண்டும். நீ வீட்டிலேயே இரு…” என்று சமாதானம் செய்தார் தந்தை. ஏகலைவன் சம்மதிக்கவில்லை.

“நான் எந்தத் தொந்தரவும் தரமாட் டேன்” என்று கெஞ்சினான் ஏகலைவன். வேறுவழியில்லாமல் ஏகலைவனை அழைத்துச் சென்றார் தந்தை.

காட்டில் தந்தை எடுத்த வைத்த ஒவ்வொரு அடியையும் உற்றுக் கவனித்தான் ஏகலைவன். விலங்குகள் காலடித் தடங்கள், அவற்றின் குரலொலி பற்றியும் தந்தை சொன்னதைக் கூர்ந்து கேட்டுக்கொண்டான். சில கேள்விகளையும் கேட்டுத் தெளிவு பெற்றான்.

மரத்தின் பின்னே மறைந்திருந்து, விலங்குகளின் சத்தம் வருகிற திசை நோக்கி, குறி தவறாமல் அம்பு விடும் தந்தையின் வில்வித்தைத் திறனைப் பார்த்து வியந்தான் ஏகலைவன்.

“மகனே… சின்ன வயதிலேயே வேட்டையாடுவதில் இவ்வளவு ஆர்வமா? உன்னை வில் வித்தை சொல்லித் தரும் குருவிடம் அழைத்துப் போகிறேன்” எனப் பூரிப்பில் தந்தை சொன்னார். ஏகலைவனைக் கட்டித் தழுவிக்கொண்டார் தந்தை.

“உங்களைவிட எனக்கு வேறு யார் சிறப்பாய் வில் வித்தையைக் கற்றுத் தந்துவிட முடியும்…?” என்று கேட்டான் ஏகலைவன்.

“அப்படியில்லை…மகனே. துரோணாச்சாரியார் என்ற குரு இருக்கிறார். அவரிடம் நீ கற்றுக்கொண்டால், இன்னும் சிறப்பாக இருக்குமல்லவா!”என்று தந்தை சொன்னார்.

“அரச பரம்பரையினருக்குப் பயிற்சி தரும் குலகுரு, வேட்டுவ குலத்தில் பிறந்தவர்களுக்குப் பயிற்சியளிக்கச் சம்மதிப்பாரா…? என்று ஏகலைவன் கேட்க,

“துரோணாச்சாரியார் நிச்சயம் மறுக்க மாட்டார்.”என்று தந்தை உறுதி யாய்ச் சொன்னதும், அரைமனதோடு தலையாட்டினான் ஏகலைவன்.

“ஐவரும் தயாரா…?” என்று கேட்டார் துரோணர்.

“தயார் குருவே…!” என்றனர். ஐவரும் வில் அம்புடன் மாமரத்தைக் குறிபார்த்துக்கொண்டிருந்தனர்.

“ம்ம்… அம்பை விடுங்கள்…” எனத் துரோணர் சொன்னதும் ஐந்து அம்புகளும் சீறிப் பாய்ந்தன. ஒவ்வொரு அம்பும் மாமரத்தில் இருந்த நான்கைந்து மாங்காய்க் கொத்துகளை வெட்டிச் சாய்த்தன. அதைப் பாராட்டினார் துரோணர்.

“குருவே வணக்கம்…”

துரோணாச்சாரியாரின் காலடியில், விழுந்து வணங்கினார் ஏகலைவனின் தந்தை. உடன் நின்றிருந்தான் ஏகலைவன்.

“யார் நீங்கள்…?” அதிகாரத் தோரணையோடு கேட்டார் துரோணர்.

“குருவே… நான் வேட்டுவ குலத்தைச் சேர்ந்தவன். இவன் என் மகன் ஏகலைவன். இந்தச் சிறுவயதிலேயே வேட்டையாடுதலில் ஆர்வமாய் இருக்கிறான். இவனுக்குத் தாங்கள் வில் வித்தை கற்றுத் தர வேண்டும்” என்று பணிவோடு கேட்டார் ஏகலைவனின் தந்தை.

காடே அதிரும்படி சிரித்தார் துரோணர். “ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பயிற்சி தருகிற குல குரு நான். வேட்டுவ குலத்தைச் சேர்ந்த உன் மகனுக்கு வித்தைகளைக் கற்றுத்தர வேண்டுமா? ஓடி விடுங்கள்” சிங்கம்போல் துரோணாச்சாரியார் கர்ஜித்தார். ஏகலைவனின் தந்தை பயந்துபோய் அப்படியே பின்வாங்கி நடந்தார்.

“தந்தையே… நீங்கள் ஆசைப்பட்டதைப் போல், எனது வில் வித்தை குருவாகத் துரோணர் இருந்தாலும், நீங்கள்தான் எனக்கு உண்மையான குரு” என்ற ஏகலைவன், தந்தையின் காலில் விழுந்து வணங்கினான்.

தந்தையும் வில் வித்தையைக் கற்றுத் தரத் தொடங்கினார். தந்தை சொல்லித் தந்தபடி அம்பு விட ஆரம்பித்தான் ஏகலைவன். இலக்கை குறி பார்த்துத் தாக்கியது அம்பு.

எந்நேரமும் வில் வித்தை பற்றிய சிந்தனையிலேயே இருந்தான் ஏகலைவன். ஆர்வத்தோடும் ஈடுபாட்டோடும் வைராக்கியத்துடனும் இருந்த ஏகலைவன், சீக்கிரத்திலேயே சிறந்த வில் வித்தைக்காரனானான்.

துரோணர் கேட்டார்.

“அர்ஜூனா…அதோ தூரத்தில் மரம் தெரிகிறதா…?”

“இல்லை..குருவே…!” - அர்ஜூனன்.

“மரத்தில் கிளை தெரிகிறதா…?” மறுபடியும் துரோணர் கேட்டார்.

அர்ஜூனன் சொன்னான்; “இல்லை…குருவே…!”

விடாது மீண்டும் கேட்டார் துரோணர்.

“அந்தக் கிளையில் ஒரு புறா இருக்கிறதே…அதாவது தெரிகிறதா…?”

“இல்லை…குருவே…!” என்றான் அர்ஜூனன்.

“விடு…அம்பை” துரோணர் சொல்ல, “புறாவின் கண் மட்டும் தெரிகிறது…” என்று அர்ஜூனன் சொல்லவும், அம்பு புறாவின் கண்ணில் குத்தி நின்றதும் மிகச் சரியாய் இருந்தது.

“அபாரம் அர்ஜூனா. உன்னை வில் வித்தையில் வெல்ல உலகில் யாரும் இல்லை”. பூரித்துப்போனான் அர்ஜூனன்.

காலச் சக்கரம் உருண்டோடியது.

ஒரு நாள்-

காட்டுக்குள் வேட்டையாடிக் கொண்டிருந்தான் ஏகலைவன். அப்போது காட்டுநாய் ஒன்று குரைத்தது. விரட்டியும் அது போகவில்லை. ஏகலைவனின் வேட்டையாடுதலுக்கு அது இடையூறாக இருந்தது. காட்டு நாயைக் கொல்லவும் ஏகலைவனுக்கு மனமில்லை.

சட்டென்று வில்லில் ஒரே நேரத்தில் நான்கு அம்புகளைப் பொருத்தினான். சரியாய்க் குறிவைத்து, காட்டு நாயின் வாயை நோக்கி அம்பைச் செலுத்தினான். நான்கு அம்புகளும் பாய்ந்து சென்று, குறுக்கு நெடுக்காகக் காட்டு நாயின் வாயைத் திறக்க முடியாமல் பூட்டின. காட்டு நாய் பயந்து ஓடியது.

“அட…என்ன அற்புதம்…”என்றான் பீமன்.

நால்வரும் பீமன் காட்டிய திசையின் பக்கம் திரும்பிப் பார்த்தனர். நான்கு அம்புகளால் வாய் பூட்டப்பட்டு, குரைக்க முடியாமல் நின்றிருந்தது காட்டு நாய்.

“இதென்ன, வியப்பாக இருக்கிறதே. காயம் இல்லாமல் அம்புகளால் வாயைப் பூட்டிய மகா வில் வித்தைக்காரன் யாரோ?” என்று வியந்து பாராட்டினான் நகுலன்.

அர்ஜூனனின் முகம் வெளிறிப் போனது.

‘அனைத்து வில் வித்தைகளையும் கற்றுத் தந்த துரோணர், இந்தத் திறனை ஏன் கற்றுத் தராமல் போனார்…?”

அர்ஜூனனின் மனதைக் குடைந்தெடுத்தது கேள்வி. உடனே துரோணரைப் பார்க்க ஐவரும் போனார்கள். தாங்கள் காட்டில் கண்டு வியந்த அந்தக் காட்சியைத் துரோணரிடம் கூறினர்.

துரோணரின் முகம் சுருங்கியது.

‘வில் வித்தையில் இப்படியொரு கலைநுட்பமா…? நமக்கே இது தெரியாதே. யாராய் இருக்கும்…?’ குழப்பத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “அது யாராயிருந்தாலும் இங்கே கூட்டி வாருங்கள்…!” என்றார் துரோணர். உடனே சேவகர்கள் அங்கிருந்து சிட்டாய் சென்றார்கள்.

அடுத்த நாள் –

“இவன்தான்…குருவே…!”

ஏகலைவன், துரோணர் முன் நிறுத்தப்பட்டான். கூடவே அவன் தந்தையும் நின்றார்.

“யாரடா…நீ, உனக்கு வில் வித்தையை யார் கற்றுத் தந்தது…?” கோபம் கொப்பளிக்க துரோணர் கேட்டார்.

“சில ஆண்டுகளுக்கு உங்களால் வில் வித்தைக் கற்றுத் தர முடியாது என்று புறக்கணிக்கப்பட்டவன் நான். என் தந்தை உங்களைக் குருவாகக் கூறினாலும், உண்மையில் என் குரு என் தந்தைதான்…” கம்பீரமான குரலில் ஏகலைவன் சொன்னான்.

அர்ஜூனனின் முகம் தொங்கிப் போனது. இதைப் பார்த்த துரோணருக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. சற்றுநேரம் அமைதியாய்க் கண்களை மூடி யோசித்தார். பிறகு, “உன் தந்தை என்னைத்தானே உனக்கு மானசீக குருவாகக் கூறினார். அப்படியானால், நீயும் என் சீடன்தானே. சரி எனக்கு ஏன் இன்னும் குருதட்சிணை தரவில்லை…?”என்று கேட்டார் துரோணர்.

ஏகலைவனின் தந்தை முகம் மலர்ந்தது.

“ என் மகனைச் சீடனாக ஏற்றுக்கொண்ட தங்களின் பெருந்தன்மைக்கு மிக்க நன்றி. குருவே, தங்களுக்கான குருதட்சிணையாகக் கேட்பதைத் தருகிறேன்” என்றார் ஏகலைவன் தந்தை.

அர்ஜூனனைக் கடைக்கண்ணால் பார்த்தபடி, “எது கேட்டாலும் தருவாயா…?” என்றார் துரோணர்.

“எங்களால் முடிந்ததை, தட்டாமல் தருவோம் குருவே…!” என்றார் தந்தை.

“ஓ…அப்படியா! எனக்கான குருதட்சிணையாக, ஏகலைவனின் கட்டைவிரலை வெட்டித் தாருங்கள்!” என்றார் துரோணர்.

துரோணரின் வார்த்தையைக் கேட்டதும் நொறுங்கிப்போனார் ஏகலைவனின் தந்தை.

“இது அநீதி. கற்றுத் தர மறுத்த குருவுக்கு எதற்காகத் தர வேண்டும் குருதட்சிணை…? அதுவும் வில் வித்தை செய்ய முதன்மையாயிருக்கும் கட்டை விரலையா…? முடியாது…!” ஏகலைவன் உரத்த குரலில் மறுக்கவும்,

“அவசரப்பட்டு வாக்குக் கொடுத்துவிட்டு, இப்போது எதுவும் செய்ய முடியாமல் தவிக்கிறேனே மகனே… நான் பாவியடா, என்னை மன்னித்துவிடடா!” கதறியழுதார் ஏகலைவனின் தந்தை.

வீரர்கள் அனைவரும் ஏகலைவனைச் சூழ்ந்துகொண்டனர். “உன் தந்தை வாக்கு கொடுத்துவிட்டார். அவருடைய புதல்வன் நீ, அதை நிறைவேற்றுவதே உன் கடமை. எவ்வளவு பெரியவர் துரோணர், குருதட்சிணையாக உன் கட்டை விரலைக் கேட்டபிறகு, நீ மறுக்காமல் கொடுப்பதே சரியான முறையாகும்…”

“ என் குலத்தைக் காரணம்காட்டி, பயிற்சியே அளிக்காமல் அவமானப்படுத்தி அனுப்பியவர் துரோணர். இப்போது குருதட்சிணை கேட்கும் இவரா பெரிய குல குரு? ஒருபோதும் என் கட்டை விரலைத் தர மாட்டேன்…”

வீரர்கள் ஏகலைவனை இறுக்கிப் பிடித்துக்கொண்டனர். ஏகலைவனின் வலது கையைப் பிடித்து, அவனது கட்டை விரலை வெட்டினர்.

குழந்தைகளின் முகம் பெரும் துயரத்தில் இருந்தது. சிலர் கண்களில் நீர்த் துளிகள் அரும்பியிருந்தன.

“என் கதையைக் கேட்டதும் எல்லோரும் ஏன் இவ்வளவு சோகமாயிட்டீங்க...?” மெளனம் கலைத்துக் கேட்டது கட்டை விரல்.

“உன்னோட கதை ரொம்ப வருத்தமாயிருக்கு!” என்றான் கதிர்.

“ஏகலைவன் குருவுக்குத் தட்சிணையா கட்டை விரலை வெட்டிக் கொடுத்தான்னு எங்கப்பா கதை சொல்லியிருக்காரு. இப்பத்தான் உண்மைக் கதை என்னான்னு புரியுது!” ராமு சொன்னான்.

“பயிற்சியே கொடுக்காம ஃபீஸ் மட்டும் கேட்டது அநியாயம்…” என்றான் டேவிட்.

“இது மாதிரியொரு கொடுமை, இனி யாருக்கும் நடக்கக் கூடாது” என்றான் தாமு.

“பிறப்பின் பெயரால் ஒருவரை உயர்த்தியோ, தாழ்த்தியோ பேசுவது கூடாது. இதற்கான சாட்சியாகவே இன்னமும் நான் துடித்துக்கொண்டிருக்கிறேன்…” என்றது கட்டை விரல்.

“நிச்சயமா, எங்களுக்குள் அப்படி எந்தப் பிரிவினையும் இல்லை…”என்றபடி ஒன்றாய்க் கைகளைக் கோத்து நின்றனர் எல்லாக் குழந்தைகளும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x