

உங்கள் ஊரில் உள்ள பறவைகளைச் சொல்லுங்கள் என்று யாராவது கேட்டால், எத்தனை பறவைகளை உங்களால் சொல்ல முடியும்? காக்கா, புறா, மைனா என்று சிலவற்றைச் சொல்லுவோம். ஆனால், இவை மட்டுமா நம்மைச் சுற்றியுள்ள பறவைகள்?
கொஞ்சம் மெனக்கெட்டால் நம்மூரின் வெளிப்பகுதிகளில் தவிட்டுக்குருவி, தேன்சிட்டு, கதிர்க்குருவி, மயில் போன்றவற்றைக்கூடப் பார்க்க முடியும். சரி, இவையெல்லாம் சாதாரணப் பறவைகள்தானே. இவற்றில் என்ன பெரிய சிறப்பு இருக்கப் போகிறது?
மேலே குறிப்பிட்ட நான்கு பறவைகளை நாம் எளிதில் பார்க்க முடியும். ஆனால், இந்த நான்கும் இந்தியாவுக்கு மட்டுமே உரியவை. அப்படியென்றால், இது சாதாரண விஷயமில்லைதானே. இது போன்று உலகில் நம் நாட்டில் மட்டுமே காணக்கூடிய பறவை வகைகள் இன்னும் பல இருக்கின்றன.
இமயமலையில் இருந்து…
பருவமழை காலங்களில் நாட்டின் வேறு பகுதிகளில் இருந்து வலசை வரும் அன்றில், தோட்டக்கள்ளன் போன்றவையும் நம் நாட்டில் மட்டுமே வசிப்பவைதான்.
கறுப்பு அரிவாள் மூக்கன் எனப்படும் பறவை பழந்தமிழ் இலக்கியங்களில் அன்றில் என்று கூறப்படுகிறது. அது அந்தக் காலக் கவிஞர்கள் முதல், இந்தக் காலப் பறவை ஆர்வலர்கள்வரை பலரையும் கவர்ந்துவந்திருக்கிறது. தோட்டத்தின் தரைப் பகுதியில் தாவித்தாவி சென்று பூச்சிகளைப் பிடித்துண்ணும் சிறிய பறவையை எளிதில் பார்க்க முடியாது என்பதால்தான், தோட்டக்கள்ளனுக்கு அப்படி ஒரு பெயர் வந்தது. இந்தக் குட்டியூண்டு பறவை இமயமலையில் இருந்து தமிழகத்துக்குப் பறந்து வருகிறது, தெரியுமா?
சுவாரஸ்யப் பறவைகள்
இமயமலையைப் போலவே நம் ஆறுகளில் தண்ணீர் ஓடவும், மழை பொழியவும் காரணமாக இருக்கிறது மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர். இதன் அடிவாரப் பகுதிகளில் நம் நாட்டுக்கே உரிய தவளைவாயன், நீலகிரி சிரிப்பான், சீகார பூங்குருவி போன்ற சிறப்பான பறவைகளைப் பார்க்க முடியும். இவை ஒவ்வொன்றின் பெயருக்குப் பின்னாலும் சுவாரஸ்யமான ஒரு விஷயம் இருக்கிறது.
தவளைவாயன் பறவையின் வாய் தவளையைப் போல அகலமாக, பார்ப்பதற்குச் சற்று விநோதமாக இருக்கும். சீகார பூங்குருவி எனப்படும் பறவை, மனிதர்கள் விசில் அடிப்பதுபோல அதிகாலையில் குரல் கொடுக்கும். மரக் கிளைகளுக்கு இடையே மறைந்திருக்கும் நீலகிரி சிரிப்பானை எளிதில் பார்த்துவிட முடியாது. ஆனால், அது சத்தமாகச் சிரிப்பது போன்ற குரலை மட்டும் காடுகளில் கேட்கலாம்.
இப்படி நம்மூரில் மட்டுமே இருக்கும் ஒவ்வொரு பறவையும் ஒரு சுவாரஸ்ய அம்சத்தைக் கொண்டிருக்கிறது. அவற்றைச் சற்றே நெருங்கிப் பார்க்கும்போது, இந்தச் சுவாரஸ்யங்களை நாமே நேரடியாகத் தெரிந்துகொள்ள முடியும். இந்த லீவு முடியறதுக்குள்ள 10 புதுப் பறவைகளையாவது பார்க்கிறதுன்னு நீங்களே ஒரு போட்டி வச்சுக்கிட்டு, நாளைலேர்ந்து தொடங்குங்களேன்.
ஓவியம்: ரோஹன் சக்ரவர்த்தி
பறவைகளைப் பின்தொடர்வோம்
ஊர்சுற்றுவது, காடு, மலை எல்லாம் உங்களுக்குப் பிடிக்குமா? அப்போது பறவைகளை நோக்குவதில் (Bird Watching) கவனம் செலுத்தலாம். பறவை நோக்குவது இயற்கையை இன்னும் நெருக்கமாகப் புரியவைக்கும். பறவைகளை நோக்குவது ரொம்ப கஷ்டமில்லை. உங்கள் வீட்டின் முன்புறமோ, பின்புறமோ இருக்கும் மரங்கள், செடிகொடிகளுக்கு ஒரு சில பறவைகளாவது வரும்.
அப்படி இல்லை என்றால் வீட்டுக்கு அருகே இருக்கும் பூங்கா, நீர்நிலை போன்ற ஏதாவது ஓரிடத்துக்குச் சென்றால் நிச்சயம் நிறைய பறவைகளைப் பார்க்க முடியும். வாய்ப்பு இருந்தால் அதிக விலை இல்லாத ஒரு இருநோக்கி (Binocular), தமிழகப் பறவைகளை அடையாளம் காணும் ஒரு கையேடு போன்றவை உதவும். பைனாகுலரும் கையேடும் இல்லையென்றாலும் கவலைப்பட வேண்டாம். இணையதளம் மூலம் பறவைகளை அடையாளம் காணலாம். (கூடுதலாக அறிய: >http://en.wikipedia.org/wiki/List_of_birds_of_Tamil_Nadu).
பொதுவாகவே பறவைகளை நோக்கச் செல்லும்போது பிரகாசமான நிறத்தில் உடைகளை அணிந்து செல்லக் கூடாது. அத்துடன் சத்தம் எழுப்பவோ, வேகமாக நகரவோ கூடாது. ஏதாவது ஒரு சிறிய மறைவிடத்தில் அமைதியாகக் காத்திருந்தால் நிச்சயம் நிறைய பறவைகளைப் பார்க்க முடியும்.