

சென்னைக்குள் இருந்தாலும், அமெரிக்காவில் இருப்பது போலவே தூதரங்களுக்குத் தனி அந்தஸ்து உண்டு. சென்னை அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் ஒரு நூலகம் இருக்கிறது. அதில் வயதுக்கு ஏற்றவாறு பிரிவுகள் உள்ளன. குழந்தைகளுக்கென்று தனிப் பிரிவு ஒன்றும் உள்ளது. அந்தப் பிரிவுக்குப் போய்விட்டு வருவோமா?
குழந்தைகள் பிரிவு அட்டகாசமான வடிவமைப்புடனும், ஆயிரக்கணக்கான புத்தகங்களுடனும் அசத்தலாக வரவேற்கிறது. இந்திய-அமெரிக்க நாடுகளின் பாரம்பரிய அடையாளங்கள், கார்ட்டூன்கள் எனக் குழந்தைகள் பிரிவின் சுவர்கள் வண்ணமயமாகக் காட்சியளிக்கின்றன. இந்தக் கோடை விடுமுறையை ஜாலியாகவும், பயனுள்ளதாகவும் கழிக்க வேண்டும் என நினைக்கும் குழந்தைகள், அம்மா-அப்பாவுடன் இங்கேயும் சென்று வரலாம்.
நூலகத்துக்கு உள்ளே சென்றவுடன், ஒரு ‘பிங்க்’ பசு உங்களுக்காகப் புத்தகங்கள், பொம்மைகள், புதுமையான விளையாட்டுகளுடன் காத்திருக்கும். அந்த ‘பிங்க்’ பசுவுக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. அதற்கு நீங்களே ஒரு பெயரும் வைக்கலாம். இப்படிப் பல மகிழ்ச்சியான ஆச்சரியங்கள் இங்கே காத்திருக்கின்றன.
ஏன் செல்ல வேண்டும்?
‘இப்பதான் பரீட்சை முடிந்தது, அதற்குள் ஏன் நூலகத்துக்குப் போக வேண்டும்’ என நீங்கள் நினைக்கலாம். “ஒரு புத்தகத்தைவிட நம்பகமான நண்பன் இருக்க முடியாது” என்பது எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே சொல்லியிருக்கிறார். ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான நண்பர்களைப் பார்க்க உங்களுக்கு இது ஒரு வாய்ப்பு இல்லையா?
விளையாடலாம், படம் பார்க்கலாம்
அமெரிக்க நூலகத்தில் குழந்தைகள் பகுதியில் புத்தகங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு அம்சங்களும் இருக்கின்றன. “குழந்தைகளால் விளையாடாமல், சத்தம்போடாமல் இருக்க முடியாது. அதைக் கருத்தில்கொண்டே நூலகத்தின் இந்தப் பகுதியை வடிவமைத் திருக்கிறோம்.
அவர்கள் கற்பனைத் திறனை மேம்படுத்தும் விளையாட்டுகள், படங்களைப் பார்க்கும் வசதி, ஆன்லைன் ‘பிரைன் ஸ்டோர்’ விளையாட்டுகளும் இருக்கின்றன. குழந்தைகளுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இங்கே இல்லை. ஒரு மகிழ்ச்சியான நூலக அனுபவத்தைத் தருவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம்” என்கிறார் அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் பொது விவகாரத் துறை அதிகாரி ஆரியல் எச். பொல்லாக்.
புத்தகங்களும், ஆன்லைன் நூலகமும்
இங்கே உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தங்களை இரண்டு வகையாகப் பிரித்திருக்கிறார்கள். எட்டு வயதுக்குள் இருக்கும் குழந்தைகளின் புத்தகங்களைத் தனியாகவும், பதினைந்து வயது வரை உள்ள சிறார்களுக்கான புத்தகங்களைத் தனியாகவும் வரிசைப்படுத்தியிருக்கிறார்கள். இதனால் நூலகத்துக்கு வரும் குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் எளிமையாகப் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கலாம். அறிவியல் சம்பந்தமான புத்தகங்கள், பத்திரிகைகள் நிறைய இருக்கின்றன. பள்ளியில் அறிவியல் புராஜெக்ட்டை நீங்களே செய்வதற்கு உதவும் வகையிலான புத்தகங்கள் இங்கே உள்ளன.
“நூலகத்தில் இருக்கும் புத்தகங்களுடன் பிரிட்டானிக்கா, நேஷனல் ஜியோகிராஃபிக் கிட்ஸ், புக் ஃப்ளிக்ஸ், பவர் நாலட்ஜ் அறிவியல் தளங்கள் எனப் பல்வேறு ஆன்லைன் தரவுகளையும் நூலகத்தில் உறுப்பினராகும் பெற்றோர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்” என்கிறார் ஆரியல் எச். பொல்லாக்.
அமெரிக்க நூலகத்தில் உறுப்பினராவதற்கு ஓராண்டு சந்தா ரூ. 200 (மே மாதம் வரை இந்தச் சிறப்புச் சலுகை) செலுத்தினால் போதும். பெரியவர்கள் துணையுடன்தான் குழந்தைகள் வரவேண்டும். பதினைந்து வயதுக்கு மேற்பட்டவர்கள் அமெரிக்க நூலகத்தில் உறுப்பினராகலாம்.
அத்துடன், அமெரிக்க நூலகம் பள்ளிகளுடன் இணைந்து மாணவர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்திவருகிறது. இந்த மாணவர்களுக்கான நிகழ்ச்சிகளைப் பற்றி தெரிந்துகொள்ளத் தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அமெரிக்க நூலகத்தைத் தொடர்புகொள்ளலாம்.
இந்த நூலகம் அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் இயங்குவதால், உள்ளே செல்வதற்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.