Last Updated : 13 May, 2015 12:43 PM

 

Published : 13 May 2015 12:43 PM
Last Updated : 13 May 2015 12:43 PM

இந்த விளையாட்டு உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு எது? வீடியோ கேம்ஸ் என்று சட்டென சொல்லிவிடுவீர்கள். உங்கள் அம்மா, அப்பா உங்களைப் போல குழந்தையாக இருந்தபோது என்ன விளையாடி இருப்பார்கள்? எப்போதாவது இதை உங்கள் அம்மா, அப்பாவிடம் கேட்டிருக்கிறீர்களா?

அவர்கள் விளையாடிய விளையாட்டுகள் எல்லாம் பாரம்பரிய விளையாட்டுகள். அதுவும் கோடை விடுமுறையில் வாசலுக்கு வாசல் கூடி நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிய விளையாட்டுகள். அப்படிச் சில விளையாட்டுகளைப் பார்ப்போமா?

ஆடு புலி ஆட்டம்

இந்த விளையாட்டை இரண்டு பேர் ஆடுவார்கள். இதைப் புளியங்கொட்டை, கற்கள் அல்லது மணிகள் கொண்டு விளையாடலாம். இந்த விளையாட்டில் மூன்று புலிகளும் பதினைந்து ஆடுகளும் இருக்கும். ஒருவர் மூன்று புலிகளையும் மற்றவர் பதினைந்து புலிகளையும் வைத்துக்கொள்வர்கள்.

புலிகள், ஆடுகளை மூலையில் தள்ளி அவற்றை நகர விடாமல் செய்து கொல்ல முயலும். அவற்றிடம் இருந்து ஆடுகள் தப்புவதே இந்த விளையாட்டு. மூளைக்கு வேலை கொடுக்கும் நல்ல விளையாட்டு.

பம்பரம்

இப்போதெல்லாம் பிளாஸ்டிக்கில் பம்பரம் கிடைக்கிறது. அப்போதெல்லாம் மரக்கட்டையில் அழகான வண்ணத்தில் பம்பரங்கள் கிடைத்தன. எல்லாச் சிறுவர்களுமே பம்பரம் வைத்திருப்பார்கள். சிறிய கயிறைக் கொண்டு பம்பரத்தைச் சுழற்றி விளையாட வேண்டும்.

எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். இதில், வல்லா ஆட்டம், காட்டுக்குத்து ஆட்டம் என இரண்டு வகை உண்டு. பம்பரத்தை வட்டத்துக்குள் வைத்து ஆடுவது வல்லா ஆட்டம். ஒரு எல்லைக் கோட்டுக்குள் பம்பரம் விட்டு கையில் ஏந்தி ஆடுவது காட்டுக்குத்து ஆட்டம்.

பரமபதம்

இந்த விளையாட்டை இரண்டு பேர் முதல் பலர் விளையாடலாம். புளியங்கொட்டை அல்லது மணிகளை வைத்து விளையாடுவார்கள். விளையாடுபவர்கள் தாயக்கட்டைகளை உருட்டி, கிடைக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப பரமபதத்தில் காயை நகர்த்துவார்கள். ஏணியின் அடியைத் தொடும் காய் ஏணியின் உச்சிக்குச் செல்லும். பாம்பின் வாயை அடையும் காய் கீழே சறுக்கும். இவ்வாறு எல்லாத் தடைகளையும் தாண்டி கடைசிக் கட்டத்தை அடையும் காய் வெற்றி பெறும்.

கல்லாங்காய்

இந்த விளையாட்டை எத்தனை பேர் வேண்டு மானாலும் விளையாடலாம். இது பொதுவாக ஜல்லிக் கற்களால் விளையாடப்படுகின்றன. ஒரு கல்லை மேலே எறிந்து அது கீழே விழுவதற்குள், கீழே இருக்கும் மற்ற கற்களை வாரி எடுத்துக்கொள்ள வேண்டும்.

காய்களை ஒவ்வொன்றாகப் பொறுக்கியும் எடுக்கலாம். மேலே போகும் காய் தவறி கீழே விழுந்தால், அவுட். எடுக்கும் காயைத் தவிர, மற்ற காய்கள் அசங்கினாலும் அவுட். இந்தக் கல்லாங்காயை ஐந்து அல்லது ஏழு கற்களைக் கொண்டும் விளையாடலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x