

உருளைக்கிழங்கு உங்களுக்கு சாப்பிடப் பிடிக்கும் இல்லையா? அந்த உருளைக்கிழங்கில் ஒட்டகச்சிவிங்கியும் செய்யலாம். செய்து பார்க்கத் தயாரா?
தேவையான பொருள்கள்:
கொஞ்சம் பெரிய உருளைக் கிழங்கு ஒன்று, கறுப்பு நிற ஸ்கெட்ச் பேனா, பசை, தடிமனான காகிதம், மரத்தாலான ஐஸ்கிரீம் குச்சிகள் ஐந்து, குண்டூசி, கொஞ்சம் நீளமாகத் துணி சுற்றிய கயிறு ஒன்று.
செய்முறை:
1. தடிமனான காகிதத்தின் இரு பக்கங்களிலும் ஒட்டகச் சிவிங்கியின் தலைப் பாகத்தை வரைந்து கொள்ளுங்கள். பின்னர் அதை ஐஸ்கிரீம் குச்சியின் முனைப் பகுதியில் ஒட்டிக்கொள்ளுங்கள்.
2. இந்த ஐஸ்கிரீம் குச்சியின் மறு முனையில் சிறிது பசையைத் தடவி, அதை உருளைக்கிழங்கின் உள்ளே அழுத்தி நுழைத்துப் பொருத்திவிடுங்கள்.
3. மீதி நான்கு ஐஸ்கிரீம் குச்சிகளைப் படத்தில் காட்டியுள்ளது போல் ஒட்டகச்சிவிங்கியின் கால்கள் போல் பொருத்துங்கள்.
4. துணி சுற்றப்பட்ட கயிற்றை ஒட்டகச் சிவிங்கியின் வாலாக உருளைக் கிழங்கின் பின்பகுதியில் குண்டூசியைப் பயன்படுத்திப் பொருத்துங்கள்.
5. ஸ்கெட்ச் பேனாவைப் பயன்படுத்தி உருளைக் கிழங்கில் பழுப்பு நிறத் திட்டுகளை உருவாக்குங்கள். இதுதான் ஒட்டகச்சிவிங்கியின் உடல் பகுதி.
6. இப்போது உங்கள் கையில் கழுத்து நீளமான ஒட்டகச்சிவிங்கி கிடைத்துவிட்டதா? இனி என்ன இதை வைத்து ஜாலியாக விளையாடலாம் இல்லையா!