Published : 15 Apr 2015 01:14 PM
Last Updated : 15 Apr 2015 01:14 PM

வெப்பத்தைக் கடத்தும் பாத்திரங்கள்

அடடே அறிவியல்

சமையல் பாத்திரங்கள் ஏன் உலோகங்களிலேயே செய்யப்படுகின்றன. உலோகங்கள் அல்லாத பொருட்களில் சமையல் பாத்திரங்களைச் செய்ய முடியாதா? அதற்குக் காரணம் உள்ளது. தெரிந்துகொள்ள வேண்டுமா? ஒரு எளிய சோதனை செய்துவிடுவோமே!

தேவையான பொருள்கள்:

பிளாஸ்டிக் பாட்டில், மணல், ஓர் உலோகக் கம்பி, குத்தூசிகள் அல்லது குண்டூசிகள், முழுகுவர்த்திகள், தீப்பெட்டி

சோதனை:

1. பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் மணலை நிரப்பிக்கொள்ளுங்கள்.

2. ஒரு ஆணியைச் சூடுபடுத்தி பிளாஸ்டிக் பாட்டிலின் கழுத்துப் பகுதியில் துளையிட்டுக் கொள்ளுங்கள்.

3. அத்துளையில் நீளமான ஓர் உலோகக் கம்பியைப் படத்தில் காட்டியபடி செருகுங்கள்.

4. மெழுகுவர்த்தியை எரியவிட்டு அதிலிருந்து உருகும் மெழுகை எடுத்துக் கொஞ்சம் இடைவெளியில் குத்தூசிகள் அல்லது குண்டூசிகளை உலோகத் தண்டில் ஒட்டி வையுங்கள். மெழுகு குளிர்ந்தவுடன் ஊசிகள் தண்டில் நன்றாக ஒட்டி இருப்பதைப் பார்க்கலாம்.

5. உலோகக் கம்பியின் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் முனையில் எரியும் மெழுகுவர்த்தியைப் பற்ற வையுங்கள். இப்போது என்ன நடக்கிறது என்று கவனியுங்கள். சூடுபடுத்தும் முனையிலிருந்து ஒவ்வொரு குத்தூசியாகக் கீழே விழுவதைப் பார்க்கலாம்.

நடந்தது என்ன?

உலோகத் தண்டின் ஒரு முனையைச் சூடுபடுத்தும் போது அதில் இருந்த ஊசிகள் ஏன் ஒவ்வொன்றாகக் கீழே விழுகின்றன? உலோகத் தண்டைச் சூடுபடுத்தும்போது ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு வெப்பம் பரவுகிறது.

அந்த வெப்பம் சூடுபடுத்தும் முனைக்கு அருகில் உள்ள முதல் குத்தூசி ஒட்டப்பட்டிருக்கும் இடத்தை வந்தவுடன் மெழுகு உருகி ஊசி கீழே விழுகிறது. அதேபோல் வெப்பம் ஊசிகள் ஒட்டப்பட்டிருக்கும் பகுதியை அடையும்போது அங்குள்ள மெழுகு உருகிக் கீழே விழுகிறது.

வெப்பமானது உலோகத் தண்டின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்குப் பரவுகிறது. ஒரு திடப் பொருளின் ஒரு மூலக்கூறிலிருந்து மற்றொரு மூலக்கூறுக்கு மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பம் பரவுவதை வெப்பம் கடத்தல் என்கிறோம். வெப்பக் கடத்தலின் காரணமாகவே ஊசிகள் ஒவ்வொன்றாகக் கீழே விழுகின்றன.

பயன்பாடு:

வெப்பத்தை நன்றாகக் கடத்தக்கூடிய பொருட்கள் வெப்ப நற்கடத்திகள் ஆகும். இரும்பு, தாமிரம், அலுமினியம், சில்வர் போன்ற உலோகங்கள் நற்கடத்திகள். உலோகங்கள் நற்கடத்திகள் என்பதால் இவை சமையல் பாத்திரங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

வெப்பத்தை எளிதில் கடத்தாத பொருட்கள் அரிதிற் கடத்திகள் ஆகும். மரம், கண்ணாடி, ரப்பர், தோல், பிளாஸ்டிக், மைகா, கல், தர்மோகோல் ஆகியவை அரிதிற்கடத்திகள். எனவேதான் இந்தப் பொருட்களில் சமையல் பாத்திரங்கள் இல்லை. இந்தப் பொருட்களைப் பாத்திரத்தில் கைப்பிடிக்காகப் பயன்படுத்துகிறார்கள்.

இப்போது காப்பர்பாட்டம் சமையல் பாத்திரங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. காப்பர் நற்கடத்தி என்பதால் விரைவில் வெப்பம் கடத்தப்படுகிறது. எனவே சமைக்கும் நேரமும் எரிபொருளும் மிச்சமாகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x