Last Updated : 01 Apr, 2015 01:22 PM

 

Published : 01 Apr 2015 01:22 PM
Last Updated : 01 Apr 2015 01:22 PM

காமிக்ஸ் ஹீரோக்கள்: சேட்டை எலியின் சாகசங்கள்

கடந்த அறுபது ஆண்டுகளாக, கிட்டத்தட்ட அனைத்து அமெரிக்க அதிபர்களும் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் ஒரு முக்கியப் பிரமுகர் யார் தெரியுமா? அவர் வெளிநாடுகளின் பிரதமர்களோ, தேசத் தலைவர்களோ அல்ல, ஒரு காமிக்ஸ் கதாபாத்திரம்.

வால்ட் டிஸ்னியின் மிக்கி மவுஸ்தான் அந்தப் பிரபலம். தலைமுறைகளைத் தாண்டி குழந்தைகளைக் குதூகலப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு காமிக்ஸ் கதாபாத்திரம் இது. உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட வால்ட் டிஸ்னியின் மிக்கி மவுஸ் கதாபாத்திரத்துக்கு அமெரிக்க அதிபர்கள் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா?

உருவான கதை:

‘ஆஸ்வால்ட்' என்ற முயலை நாயகனாகக் கொண்ட கார்ட்டூன் தொடரை யுனிவர்சல் ஸ்டுடியோவுக்காக உருவாக்கிக் கொடுத்துவந்தார் வால்ட் டிஸ்னி. வெற்றிகரமாகச் சென்ற இத்தொடருக்காக, 1928-ம் ஆண்டு தயாரிப்பு செலவை உயர்த்தித் தர முடியுமா என்று வால்ட் டிஸ்னி தயாரிப்பாளரிடம் கேட்டார். இதை முன்கூட்டியே எதிர்பார்த்திருந்த தயாரிப்பாளர் சார்லஸ் மின்ட்ஸ், ஏற்கெனவே கொடுத்ததிலேயே 20 சதவீதத்தைக் குறைத்துத்தான் தரமுடியும் என்று கூறிவிட்டார்.

அதற்குக் காரணம், என்னதான் ஆஸ்வால்டை வால்ட் டிஸ்னி கஷ்டப்பட்டு செதுக்கினாலும், அந்தக் கதாபாத்திரத்தின் உரிமை யுனிவர்சல் நிறுவனத்திடமே இருந்தது. இதனால் சார்லஸ், வால்ட் டிஸ்னியின் பணியாளர்களுடன் தனியாக ஒரு ஒப்பந்தம் போட்டு நேரிடையாகத் தனக்காக வேலை செய்யும்படி நியமித்துவிட்டிருந்தார்

ஒப்புக்கொண்ட கால அளவுவரை வேலையை முடித்துவிட்டு, அதிலிருந்து வெளியேறினார் டிஸ்னி. பிறகு தன்னுடைய ஆஸ்தான ஓவியர் அப்ஐவர்க்ஸ், வில்ஃபிரெட் ஜாக்சனுடன் புதிய நிறுவனத்தைத் தொடங்கினார். இனிமேல் தான் உருவாக்கும் கதாபாத்திரங்களின் உரிமை தனக்கு மட்டுமே இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன், வித்தியாசமான புதிய கதாபாத்திரங்களை உருவாக்க முயற்சி எடுத்தார்.

கடைசியில் ஒரு எலியை நாயகனாகக்கொண்டு ஐவர்க்ஸ் வரைந்த கதாபாத்திரம்தான் மிக்கி மவுஸ். டிஸ்னி பணிபுரிந்த அலுவலக மேசைக்கு அடிக்கடி ஒரு எலி வந்து போகும். அதனுடைய சேட்டைகளைப் பற்றி அடிக்கடி விவாதித்து இருந்ததால், டிஸ்னியின் புகைப்படத்துடன் அந்த எலியையும் வரைந்து வைத்திருந்தார் அவரது நண்பர் ஒருவர்.

முதலில் இந்த எலிக்கு மார்டைமர் மவுஸ் என்றுதான் டிஸ்னி பெயரிட்டார். ஆனால், அவரது மனைவி இந்தப் பெயரை மாற்றச் சொன்னதால் மிக்கி மவுஸ் என்று மாற்றினார்.

மிக்கி மவுஸின் கதை:

மிக்கி மவுஸ் ஒரு குறும்புக்கார இளைஞன். மஞ்சள் காலணி, சிவப்பு கால்சட்டை, வெள்ளை கையுறை ஆகியவையே இந்த எலியின் அங்க அடையாளங்கள். ஆரம்பத்தில் சேட்டைகள் செய்யும் ஒரு கதாபாத்திரமாக உருவாக்கப் பட்டிருந்தாலும், பின்னாளில் சாகசங்களைத் தேடும் ஒரு துடிப்பான நாயகனாகவும் மாறினார் மிக்கி. நண்பர்கள் குழுவுக்குத் தலைவனான மிக்கியின் சாகசங்கள் எளிமையானவை. அதனாலேயே அதற்கு உலகம் எங்கும் மொழி, இனம், கலாசாரம் ஆகியவற்றைக் கடந்து ரசிகர்களாக இருந்தார்கள்.

நண்பர்கள்

மின்னி மவுஸ்:

இவர்தான் மிக்கியின் தோழி. மிக்கி மவுஸின் முதல் திரைப்படத்தில் இருந்து தொடர்ந்து தோன்றிய இவரையே, மிக்கி மவுஸ் பின்னர் திருமணம் செய்துகொண்டார். ஒவ்வொரு கதையிலும் மின்னியின் கவனத்தைக் கவர மிக்கி ஏதாவது சேட்டைகள் செய்ய முயன்று, அது ஏடாகூடமாக முடியும். உடனே மின்னியிடம் மிக்கி மன்னிப்பு கேட்டு, அவரை சரி செய்வது இந்தத் தொடரில் வழக்கமாக நடக்கும் ஒரு விஷயம்.

டொனால்ட் டக்:

மிகவும் கோபக்கார வாத்தான டொனால்ட், மிக்கியின் உயிர்த் தோழன். அதிர்ஷ்டத்துக்கும் டொனால்டுக்கும் ஏழாம் பொருத்தம். கற்பனையில்கூட நடக்காத துர்சம்பவங்கள் எல்லாம் டொனால்டுக்கு நடக்கும். இவருக்கு ஏற்படும் விபத்துகளும் சம்பவங்களும் சிரிப்பு வெடிகள்.

கூஃபி:

மிக்கியின் சாகசங்களில் தொடர்ந்து பங்கேற்கும் கூஃபி ஒரு மந்தபுத்தியும் நல்லெண்ணமும் கொண்ட ஒரு நாய். ஒரு செயலையும் சரியாகச் செய்யாது. ஆரம்பிப்பது ஒன்று முடிப்பது இன்னொன்றாக இருக்கும். கூஃபிதான் இந்தத் தொடரின் நகைச்சுவை நாயகன்.

புளூட்டோ:

1930-ம் ஆண்டு ஒன்பதாவது கோள் கண்டறியப்பட்டபோது உருவாக்கப்பட்டதால் புளூட்டோ என்று பெயரிடப்பட்ட இது, மிக்கியின் வளர்ப்பு நாய். மற்றவர்களைப்போலப் பேசும் திறன் இல்லாத விலங்கு. இது செய்யும் சேட்டைகள் மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

எதிரிகள்

பீட்:

பீட்டர் என்ற பெயர் கொண்ட பூனைதான் மிக்கியின் முதன்மை எதிரி. மிக்கி மவுஸ் எந்தச் சாகசம் செய்ய முயன்றாலும், அதில் அவருக்குப் போட்டியாக வந்து நிற்பதே இந்தப் பூனையின் வேலை. குறிப்பாகத் தன்னுடைய புத்திசாலித்தனத்தால் மிக்கியை கலங்க வைக்கும். அபாரத் திறமை இதற்கு உண்டு. அதன் காரணமாகவே அனைத்துக் கதைகளின் முடிவிலும் தப்பித்துவிடும்.

மாற்று ஊடகத்தில்:

முதலில் கார்ட்டூன் திரைப்படமாக வெளியான மிக்கி மவுஸின் சாகசங்கள் பின்னர் நாளிதழில் காமிக்ஸ் தொடராகவும் புத்தகங்களாகவும் வெளிவந்தன. பின்னர் டிஸ்னிலேண்ட் என்ற கேளிக்கைப் பூங்கா வடிவமைக்கப்பட்டு உலகின் மிகவும் புகழ்பெற்ற ஒரு சுற்றுலாத் தலமாக மாறியது. வீடியோ கேம் விளையாட்டாகவும், தொலைக்காட்சித் தொடராகவும் மாறி அமெரிக்காவின் கலாச்சாரத் தூதர் போல மாறியது.

தளராத மிக்கி

உண்மையில் 1928-ம் ஆண்டு மே மாதம் 28-ம் தேதிதான் மிக்கி மவுஸ் முதலில் உருவான தேதி. ஆனால், மிக்கி மவுஸின் முதல் கார்ட்டூன் படமான ‘பிளேன் கிரேசி' திரைப்படத்தை யாருமே விநியோகிக்க முன்வரவில்லை. அடுத்த படமான ‘த கேலப்பிங் கௌச்சோ' படத்துக்கும் இதே நிலைதான். மூன்றாவது படமான 'ஸ்டீம்போட் வில்லி' வெளியான நாளையே மிக்கியின் அதிகாரபூர்வ அறிமுக நாளாகக் கொண்டாடுகின்றனர். முதல் முயற்சி வெற்றி அடைந்தால்தான் எல்லாமும் நன்றாக நடக்கும் என்று நம்பத் தேவையில்லை என்பதே மிக்கி மவுஸ் நமக்குச் சொல்லும் செய்தி.

உருவாக்கியவர்கள்: வால்ட் டிஸ்னி + அப் ஐவர்க்ஸ்

முதலில் தோன்றிய தேதி: 18-11-1928

பெயர்: மிக்கி மவுஸ்

வசிப்பது: அமெரிக்காவைச் சேர்ந்த கலிஃபோர்னியாவில் இருக்கும் கலிசோட்டா என்ற கற்பனை மாகாணத்தின் மவுஸ் டவுனில்.

கதாபாத்திரம்: மனிதர்களின் குணாதிசயம் கொண்ட ஒரு எலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x