Last Updated : 15 Apr, 2015 02:26 PM

 

Published : 15 Apr 2015 02:26 PM
Last Updated : 15 Apr 2015 02:26 PM

குட்டிப் பையனின் பெரிய அனுபவம்

சாப்ளின் பிறந்த நாள்: 16.04.1889

அப்பொழுது அந்தச் சிறுவனுக்கு 5 வயதுதான். அவனது தாய் மேடையில் நடித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரன அவரால் சரிவரப் பேச முடியாமல் போனது. அவருக்குப் பதிலாக அந்தச் சிறுவன் நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அந்தச் சிறுவன் பாடியபொழுது மேடையில் பண மழை பொழிந்தது. உடனே பாடுவதை நிறுத்தினான் அந்தச் சிறுவன். முதலில் பணத்தைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு பிறகு பாடுவதாக அறிவித்தான். இதைக் கேட்டதும் அரங்கினுள் ஒரே சிரிப்பு. அரங்கத்தின் நிர்வாகி ஒரு கைக்குட்டையைக் கொண்டு பணத்தைச் சேகரிக்க உதவினார்.

அந்தப் பணத்தை அவரே எடுத்துக்கொள்வார் என்று நினைத்தான் சிறுவன். தான் அப்படி நினைத்ததை அரங்கினுள் இருந்த ரசிகர்களிடமும் கூறிவிட்டான். இது மீண்டும் அரங்கினுள் பலத்த சிரிப்பைக் கிளப்பியது.

அந்த நிர்வாகி பண முடிப்புடன் மேடையைவிட்டு இறங்கி நடந்தார். சிறுவன் ஆர்வம் கலந்த சந்தேகத்துடன் அவரையே பின் தொடர்ந்தான். ரசிகர்களின் சிரிப்பு இன்னும் அதிகமாகியது. அந்த நிர்வாகி தன் தாயிடம் அந்தப் பண முடிப்பைக் கொடுக்கும் வரை சிறுவன் மேடைக்குத் திரும்பவில்லை.

சிறுவனாக இருந்தபோதே தன் இயல்பான செயல்களால் அனைவரையும் சிரிக்கவைத்த அந்தச் சிறுவன்தான் சார்லி சாப்ளின். உலகம் போற்றும் மாபெரும் நகைச்சுவைக் கலைஞனாக உருவான அந்தச் சிறுவனின் முதல் மேடை அனுபவம் இப்படித்தான் தொடங்கியது.

சாப்ளினின் நகைச்சுவையில் எப்போதுமே ஒரு மென்மையான சோகம் கலந்திருக்கும். இது ஏன் தெரியுமா? அந்தச் சோகத்துக்கு என்ன காரணம் என்பதைக் குழந்தைப் பருவத்தில் நடந்த ஒரு நிகழ்வை சாப்ளின் பின்னாளில் நினைவு கூர்ந்தார்.

“அந்நாளில் நடந்த ஒரு நிகழ்ச்சி எனக்குத் தெளிவாக நினைவிருக்கிறது. எங்கள் தெருவின் ஒரு கோடியில் ஆடுகளை வெட்டும் இடம் ஒன்றிருந்தது. பலியாகப் போகும் ஆடுகளை எங்கள் வீட்டின் வழியாகத்தான் இழுத்துப் போவார்கள். ஒரு நாள், அதில் ஒரு ஆடு தப்பி ஓடியது.

தெருவில் போய்க்கொண்டிருந்தவர்களுக்கு இது வேடிக்கையாக இருந்தது. சிலர் ஆட்டைப் பிடிக்க முயன்றார்கள். சிலர் தடுமாறி விழுந்தார்கள். அந்த ஆட்டின் பதற்றத்தையும், தவிப்பையும் கண்டு எனக்கு ஒரே சிரிப்பு.

ஆனால் அந்த ஆட்டை மீண்டும் கொல்வதற்குப் பிடித்துச் செல்லும் போதுதான் அந்நிகழ்சியின் சோகம் எனக்குப் புரிந்தது. நான் உடனே வீட்டுக்குள் ஓடினேன். என் அம்மாவிடம், ‘அவர்கள் அந்த ஆட்டைக் கொல்லப் போகிறார்கள்' என்று கூறி அழுதேன். அந்தக் காட்சி என் மனதில் பல நாட்கள் இருந்தது. சோகமும் நகைச்சுவையும் கலந்த அந்தக் காட்சிதான் எதிர்காலத்தில் என் படங்களுக்கு அடிப்படையாக இருந்திருக்குமோ என நினைத்து வியக்கிறேன்”.

சாப்ளின் தனது நகைச்சுவையால் யாரையும் காயப்படுத்தியதில்லை. “என்னுடைய வலி பிறரின் சிரிப்புக்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், என்னுடைய சிரிப்பு ஒருபோதும் பிறருக்கு வலியை ஏற்படுத்தக் கூடாது” என்ற சாப்ளினின் புகழ்பெற்ற வாசகத்தின் பின்னணிக்கு என்ன காரணம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது இல்லையா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x