குட்டி ஆமைகளின் எதிரிகள்!

குட்டி ஆமைகளின் எதிரிகள்!

Published on

வீட்டையே தங்கள் முதுகில் சுமந்துகொண்டு திரிகின்றன ஆமைகள். ஏதாவது ஆபத்து வந்தால் ஆமைகளால் வேகமாக ஓடிச் சென்று, தப்பிக்க இயலாது. அதனால் இயற்கை, ஓடு என்ற பாதுகாப்புக் கவசத்தை ஆமைகளுக்கு வழங்கியிருக்கிறது.

ஆமையின் மேற்பகுதியில் ஓர் ஓடும் அடிப்பகுதியில் ஓர் ஓடும் இருக்கின்றன. இந்த இரு ஓடுகளையும் ஒரு பாலம் இணைக்கிறது. வெவ்வேறு வகையான 60 எலும்புகள் ஒன்றுக்குள் ஒன்று இணைந்து ஓடுகளாக மாறியிருக்கின்றன. ஏதாவது ஆபத்து என்றால் உடனே தலையையும் நான்கு கால்களையும் ஓட்டுக்குள் இழுத்துக்கொள்கின்றன ஆமைகள். அதற்குப் பிறகு எதிரிகளால் ஒன்றுமே செய்ய இயலாது.

ஓடு கெரட்டின் என்ற பொருளால் ஆனது. ஓட்டின் மீது உள்ள வளையங்களை வைத்து, ஆமையின் வயதைக் கண்டறிகிறார்கள். பாலைவனப் பகுதிகளில் வசிக்கும் ஆமைகளின் ஓடுகள் வெளிர் நிறங்களிலும் குளிர்ப் பகுதிகளில் வசிக்கும் ஆமைகளின் ஓடுகள் அடர் நிறங்களிலும் காணப்படுகின்றன.

ஆமைகளால் நன்றாகப் பார்க்கவும் வாசனையை மோப்பம் பிடிக்கவும் முடியும். அவை பகல் முழுவதும் இயங்கிவிட்டு, இரவில் ஓய்வெடுக்கின்றன. இலைகள், புற்கள், பூக்கள், பழங்கள் போன்ற தாவர உணவுகளை விரும்பிச் சாப்பிடுகின்றன. தாவரங்களை மென்று தின்பதற்கு ஏற்றவாறு வலிமையான தாடைகள் ஆமைகளுக்கு அமைந்துள்ளன. ஆனால் பற்கள் கிடையாது.

பெண் ஆமைகள் இரவு நேரங்களில் முட்டையிடத் தயாராகின்றன. பாதுகாப்பான இடத்தைத் தேர்வு செய்து, கால்களால் பள்ளம் தோண்டுகின்றன. 30 முட்டைகள் வரை இட்டு மணல், இலைகளால் மூடிவிடுகின்றன. இல்லாவிட்டால் எதிரிகளுக்கு முட்டை உணவாகிவிடும். 90 முதல் 120 நாட்களில் முட்டைகளிலிருந்து ஆமைக் குஞ்சுகள் வெளியே வருகின்றன. முட்டைக்குள் சத்து நிறைந்த திரவம் இருக்கும். அதைக் குடித்து, சக்தியைப் பெற்றுக்கொள்கின்றன. 3 முதல் 7 நாட்களில் உணவு தேடிக் கிளம்பிவிடுகின்றன.

முதிர்ந்த ஆமைகளைவிடக் குஞ்சுகளுக்கு அதிக சக்தி தேவைப்படுவதால் பூச்சிகள், புழுக்கள் போன்றவற்றையும் சாப்பிட்டு புரதச் சத்தைப் பெற்றுக்கொள்கின்றன. ஓரளவு வளர்ந்த பிறகு தாவர உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்கின்றன. சின்னஞ் சிறிய ஆமைகளைச் சாப்பிடுவதற்காகப் பறவைகளும் விலங்குகளும் காத்திருக்கின்றன. சில மனிதர்களும் காத்திருக்கிறார்கள். இத்தனை ஆபத்துகளையும் கடந்து மிகக் குறைவான ஆமைகளே உயிர் பிழைக்கின்றன.

நில ஆமைகள், நீர் ஆமைகள் என்று இரு இனங்கள் இருக்கின்றன. இவற்றுக்குள் ஏராளமான வகைகள் உண்டு. நில ஆமைகள் உருவத்தில் மிகப் பெரியதாக இருக்கும். நீர் ஆமைகள் உருவம் சற்றுச் சிறியதாகவும் நீந்துவதற்கு ஏற்ற வகையில் நீளமான கால்களுடனும் காணப்படும். நில ஆமைகளின் ஓடு குவிந்து காணப்படும். நீர் ஆமைகளின் ஓடு தட்டையாக இருக்கும்.

நில ஆமைகளில் மிகப் பெரியவை தென் அமெரிக்காவில் உள்ள கலபகாஸ் தீவில் வசிக்கும் ராட்சத ஆமைகளே. இவை 5 அடி நீளம் வளரக்கூடியவை. 300 கிலோ எடை கொண்டவை.

ஆமைகள் மிக மெதுவாக வளர்ந்து, நீண்ட காலம் உயிர் வாழ்கின்றன. 150 ஆண்டுகளில் இருந்து 220 ஆண்டுகள் வரைகூடச் சில ஆமைகள் உயிர் வாழ்ந்திருக்கின்றன.

இந்தியாவில் ஒடிசா கடல் பகுதியில் பங்குனி (ஆலிவ் ரிட்லி) ஆமைகள் ஏராளமாக வசிக்கின்றன. 2 அடி நீளமும் 50 கிலோ எடையும் கொண்ட சிறிய ஆமைகள் இவை. ஒவ்வோர் ஆண்டும் முட்டை இடும் காலத்தில் பெண் ஆமைகள் கடற்கரைக்கு வந்து சேர்கின்றன. மணலைத் தோண்டி முட்டைகளை இடுகின்றன. இங்கு இடப்படும் 1000 முட்டைகளில் ஓர் ஆமைதான் ஆபத்துகளைக் கடந்து முதிர்ச்சியடைகிறது. மற்ற ஆமைகள் எல்லாம் விலங்குகள், பறவைகளுக்கு இரையாகிவிடுகின்றன. பங்குனி ஆமைகளைக் காப்பதற்காக மீனவர்களும் அரசு அதிகாரிகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

சென்னையிலும் பங்குனி ஆமைகள் டிசம்பர் முதல் ஏப்ரல்வரை கரைக்கு வந்து முட்டைகளை இட்டுச் செல்கின்றன. ரிட்லி ஆமைகளின் முட்டைகளைக் காப்பதற்காக, ‘Turtle Walk’ என்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். இரவில் இந்த நடைப்பயணம் நடைபெறுகிறது.

ஆமைகள் இட்ட முட்டைகளைச் சேகரித்து, பாதுகாப்பான இடங்களில் வைத்து, குஞ்சு பொரிந்தவுடன் கடலில் விடுகிறார்கள். இந்தப் பயணங்களில் பங்கேற்றால் ஆமைகளைப் பற்றி நிறையத் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். ஆமைகளையும் முட்டை இடும் நிகழ்வுகளையும் நேரடியாகப் பார்க்கலாம்!

மனிதர்கள், பறவைகள், பாலூட்டிகள் எல்லாம் பூமியில் தோன்றுவதற்கு முன் உருவான ஆமைகளைப் பத்திரமாகப் பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறதல்லவா!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in